சாகுபடி முறைகள் (Cultural methods)
1.மண்ணை ஆழ உழும்போது மண்ணுக்கடியில் வாழும் பூச்சிகளும், நோய்க்காரணிகளும், களைகளும் புதைக்கப்படுகின்றன அல்லது மண்ணுக்கு மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன.
2.தழைச்சத்து அதிகம் இடுவதால் பூச்சி, நோய்கள் அதிகரிக்கும். எனவே சிபாரிசு செய்யப்பட்ட தழைச்சத்து உரத்தினை பிரித்து இட்டு பூச்சி நோய் தாக்குதலைக் குறைக்கலாம்.
3.விதை நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து விதைத்து பூச்சி நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
4.நெல் நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி விட்டு நடவு செய்வதால் நெல் தண்டு துளைப்பானின் தாக்குதலை தவிர்க்கலாம்.
5.ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடாமல் பயிர் சுழற்சி செய்து பூச்சிகளுக்கு உணவூட்டத்தை தடுத்து பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தலாம். உம். நெல்லுக்குப்பின் வாழை
6.வயல்வெளியை சுத்தமாக பராமரித்து மாற்று ஊண் வழங்கிகளை அழிப்பதன் மூலம் பூச்சி, நோய்களை தடுக்கலாம்.
7.அடுத்தடுத்த நாட்களில் நீர் பாய்ச்சி வடித்து புகையானை கட்டுப்படுத்தலாம்.
8.குறிப்பிட்ட பூச்சி நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும். உம். புகையான் –PY-3, CO-42, CO46, கொள்ளை நோய் –ADT 25, ADT30.
இயற்பியல் முறைகள் (Physical methods)
1.வெந்நீரில் (520c)நெல் விதைகளை 10 நிமிடம் ஊறவைத்து நடுவதன் மூலம் விதை மூலம் பரவும் இலைப்புள்ளி நோய் காரணிகளை கட்டுப்படுத்தலாம்.
2.50-550 செ. வெப்பநிலையில் நெல் விதைகளை 15 நிமிடம் நேர்த்தி செய்து நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
இயந்திர முறைகள் (Mechanical methods)
1.விளக்குப்பொறியைப் பயன்படுத்தி நெல் தண்டு துளைப்பானின் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
2.ஒட்டுப்பசைப்பொறியைப் பயன்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
3.நெல் வயல் வரப்புகளில் எதிர் எதிராக நின்று கயிற்றை பயிர் மீதுபடுமாறு அசைத்து கூண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
உயிரியல் முறைகள் (Biological methods)
1.நெல் குருத்துப்பூச்சியை ஐசோடிமா முட்டை ஒட்டுண்ணியைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
2.நாவாய்பூச்சி, பொறிவண்டு, சிலந்தி, தட்டான், கும்பிடு பூச்சி ஆகிய இயற்கை எதிரிகள் புகையானை உணவாக உட்கொள்ளும்.
இரசாயன முறைகள் (Chemical methods)
பொருளாதார சேதநிலையை கருத்தில் கொண்டு இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும். இந்நிலையை கடந்தால் மட்டுமே பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.