Skip to content

ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of goat and control measures)

1.கோமாரி நோய்: மாடுகளைத் தாக்குவதைப் போல் ஆடுகளை இந்நோய் பெரிய அளவில் பாதிப்பது இல்லை. பொதுவாக கால்புண்ணும், அரிதாக வாய்ப்புண்ணும் தோன்றும். நோய் தாக்கிய ஆடுகள் மேயாமல் இருக்கும்.

கட்டுப்பாடு: சோடியம் கார்பனேட் கரைசல் கொண்டு புண்களைக் கழுவலாம். போரிக் அமில பொடியை வேப்பெண்ணையுடன் கலந்து புண்களில் தடவலாம். ஆட்டுப்பட்டியின் தரைகளில் சுண்ணாம்புத்தூள் தூவவேண்டும்.

2.ஆட்டு அம்மை: காலின் அடிபாகத்தில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றி பின்னர் தலை, காது, அடிவயிறு என அனைத்து பாகங்களிலும் தோன்றும். காய்ச்சல் ஏற்பட்டு ஆடுகள் இறக்கவும் வாய்ப்பு உண்டு.

கட்டுப்பாடு: போரிக் அமிலத்துடன் கிளிசரின் கலந்து கொப்புளங்களின் மீது பூச வேண்டும் அல்லது வேப்பிலை மற்றும் மஞ்சளை அரைத்துப்பூசலாம்.

3.வெக்கை சார்பு நோய் (ஆட்டு பிளேக்): காய்ச்சல், கழிச்சல், சளி மற்றும் இருமல் ஏற்படும். சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படும்.

கட்டுப்பாடு: PPR தடுப்பூசி போட வேண்டும்.

4.துள்ளுமாரி நோய்: நோய்க்கிருமிகள் அதிகமுள்ள புற்களை உண்பதால் இந்நோய் ஏற்படுகிறது. நோய்க்கிருமிகளில் உள்ள நச்சுப்பொருள்கள் ஆட்டின் நரம்பு மண்டலத்தை பாதித்து, இறக்கச் செய்கின்றன. மிதமான பாதிப்பு கழிச்சலையும், தீவர நிலை வலிப்பு நோயையும் ஏற்படுத்தி இறப்பை உண்டாக்கும்.

கட்டுப்பாடு: தாக்கப்பட்ட ஆடுகளை மேய விடாமல் பட்டினி போட வேண்டும். குட்டிகளுக்கு நோய் தடுப்பு ஊசி போட வேண்டும்.

5.அடைப்பான்(ஆந்த்ராக்ஸ்): இந்நுண்ணுயிரி பல வருடம் வரை நிலைத்திருக்கும். தோல் பதனிடும் பகுதிகளில் இந்நோய் தோன்ற வாய்ப்புகள் அதிகம். அதிக காய்ச்சல் ஏற்பட்டு ஆடுகள் இறக்கும். மேலும் இயற்கை துவாரங்களில் இருந்து இரத்தம் வடியும்.

கட்டுப்பாடு: பாதிக்கப்பட்ட ஆடுகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

பெனிசிலின் ஊசி மருந்தை பயன்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்.

6.அப்ளோநச்சு: மாடுகளில் ஏற்படும் பாதிப்பைப் போன்றே ஆடுகளும் பாதிக்கப்படும்.

7.தோல்நோய்கள்: ஆட்டுப்பட்டிகளைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் பூஞ்சைகளால் ஆடுகளுக்கு உடல் அரிப்பு மற்றும் கொப்புளங்கள் ஏற்படும்.

கட்டுப்பாடு: பட்டிகளை சுகாதாரமாக வைத்தல், கிருமி நீக்கம் செய்தல் மற்றும் சுண்ணாம்புத்தூளைத் தூவுதல் மூலம் கட்டுப்படுத்தலாம்.

8.நீலநாக்கு நோய்: காய்ச்சல் ஏற்படும்; கால் நொண்டும்; உதடுகளில் புண்கள் ஏற்பட்டு நுரை தள்ளும்; மூக்கிலிருந்து சளி வெளியேறும்.

கட்டுப்பாடு: உதடு பகுதிகளில் கிளிசரின் தடவ வேண்டும். நச்சுயிரியைப் பரப்பும் ஈக்களை புகை மூட்டம் போட்டு விரட்ட வேண்டும். ஆடுகளின் உடல் பகுதியில் வேப்பெண்ணெயை பூசுவதால் ஈ தாக்காது.

9.பால்காய்ச்சல்,10. மடிநோய், 11, கழிச்சல் ஆகிய நோய்கள் மாடுகளில் உள்ளதைப்போலவே பாதிப்பு ஏற்படுத்தும்.

3 thoughts on “ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of goat and control measures)”

Leave a Reply

editor news

editor news