சமூகத்தில் கால்நடைகள் இல்லாமல் மனித சமூகம் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடியாது. அன்றாட தேவையான பால், தயிர், நெய், இறைச்சி, சாணம், கோமியம், எரு, உழைப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் ஆடு, மாடு, கோழி, பன்றி என எதை ஏதாவது ஒன்றின் உதவி மனித வாழ்வில் அவசியம் என்பதை உணர்ந்துதான் நம்முடைய முன்னோர்கள் மனித வாழ்க்கைக்கு அவசியமான வேளாண்மை நலங்களை போலவே கால்நடைகளுக்கு அவசியமான நிலத்தை மேய்ச்சல் நிலம் என்று ஒதுக்கி கால்நடைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் கிராமத்தின் அளவை பொறுத்து இது அமைந்திருந்தது. இந்த இடங்கள் பெரும்பாலும் ஏரி மற்றும் குளங்களுக்கு அருகில் தான் அமைந்திருந்தது. காரணம் கால்நடைகள் மேய்ந்துவிட்டு தண்ணீர் அருந்துவதற்கு வசதியாகவும் இருந்ததுதான். அன்றைய காலகட்டத்தில் கால்நடை வளர்ச்சி என்பது தனிமனித உரிமையாகவும், கவுரவ பிரச்சனையாகவும், சமூக அந்தஸ்த்தாகவும் வளர்க்கப்பட்டது. கிராமத்தில் அனைவர் வீட்டிலும் ஆடு, மாடு, கோழி, எருமை, பன்றி ஏதாவது ஒன்றை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். காரணம் பொது இடங்களும், மேய்ச்சல் நிலங்களும் தேவைக்கு ஏற்ப இருந்ததால் தான்.
சமூக வளர்ச்சி, அரசியல் வளர்ச்சி, சுயநலம், பேராசை, ஆக்கிரமைப்பு என்ற வளர்ச்சியின் அடிப்படையில் கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்கள் குளம், குட்டை, ஏரி அனைத்தும் நாளுக்கு நாள் குறைந்து தற்பொழுது காணாமல் போய்விட்டது. சமூக அக்கரையில் சாமாணியர்களால் வளர்க்கப்பட்ட கால்நடை வளர்ப்பு என்பது வசதி படைத்தவர்களால் வணிக ரீதியாக வளர்க்கப்பட்டு வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் மேய்ச்சல் நிலம், பொது இடம், குளம், குட்டை, ஏரி இவைகள் இல்லாததால் கால்நடை வளர்ப்பு என்பது சாதாரண மக்களால் கைவிடப்பட்டு விட்டது. அந்த காலத்தில் கால்நடைகள் வெகுதூரம் அலைந்து திரிந்து தனக்கு வேண்டியதை உண்டு நோய் நொடி இல்லாமல் இருந்து வந்தது. தற்பொழுது வணிக ரீதியாக பெரிய பண்ணைகளில் வசதிபடைத்தவர்களால் வளர்க்கப்படும் கால்நடை என்பது அரைக்குள் அடைக்கப்பட்டு அவர்கள் கொடுக்கும் தீவனத்தை உண்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் ரசாயணத்தின் ராஜ்ஜியத்தில் கால்நடைகள் உயிர்வாழ்கின்றன.
பண்ணை முறையில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தீவனம் கொடுப்பதில் பல்வேறு சிரமங்களை பண்ணையாளர்கள் சந்தித்து வருகின்றனர். தவிடு, புண்ணாக்கு, அடர்தீவனங்கள் போன்றவற்றின் விலை ஏற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஆரோக்கியமான பசுந்தீவனம் கொடுப்பதில் தொடர்ந்து சிக்கல்களையும் சிரமங்களையும் கால்நடை வளர்ப்பவர்களும், பண்ணை உரிமையாளர்களும் சந்தித்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை என்னதான் கடையில் உள்ள அடர் தீவனங்களை கொடுத்தாலும் இயற்கையான பசுந்தீவனம் கொடுத்தால் தான் பாலின் தரமும் சுவையும் கூடும் என்பதும் ஒரு வகையில் உண்மை.
இந்த சூழலில் இவற்றை சமாளிக்கும் வகையில் தொடர்ந்து இயற்கையான பசுந்தீவனத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை புதிய தொழில்நுட்பமான ஹைட்ரோ போனிக் என்ற மண்ணில்லா சாகுபடி முறையில் மக்காச்சோளத்தை கொண்டு மாட்டு தீவன உற்பத்தியில் மாபெரும் சாதனை செய்து வருகிறார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள ATEX கணேசன். இவர் 60 மாடுகளுக்கு மேல் ஹைட்ரோ தீவனங்கள் கொடுத்து வளர்த்து வருகிறார்.
இன்றைய சூழலில் கால்நடை வளர்ப்பு பின்நோக்கி செல்வதற்கு மிக முக்கிய காரணம் அடர் தீவனங்களின் அதிக விலையேற்றமும், வைக்கோல் போன்ற தீவனங்கள் வெளி இடங்களுக்கு வேறு தொழிலுக்கு ஏற்றுமதி ஆவதாலும் மேய்ச்சல் நிலங்கள், பொது இடங்கள் இல்லாததும் காரணம் ஆகும். இந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு சத்து மிகுந்த தீவனங்களை கொண்டு கால்நடை வளர்ப்பில் ஈடுபட ஹைட்ரோ போனிக் முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
50 மாடுகளுக்கு தீவன உற்பத்தி செய்ய அரை சென்ட் இடம் போதுமானது. 25 கிலோ பசுந்தீவனத்தில் உள்ள சத்துக்களுக்கு சமமான சத்துக்கள் 10 கிலோ மக்காச்சோள ஹைட்ரோ போனிக் தீவனத்தில் உள்ளது. 100 கிலோ ஹைட்ரோ போனிக் தீவனத்தில் 30 கிலோ கலோரிஸ் 3 கிலோ புரதம் 6 கிலோ கார்போஹைட்ரேட் 2 கிலோ நார்ச்சத்து என்ற அளவில் உள்ளதாக ஆய்வு குறிப்புகள் கூறுகின்றன.
ஹைட்ரோ போனிக் தீவனம் வளர்ப்பு முறை
Shadenet கூடாரத்தில் அடுக்கு முறையில் ப்ளாஸ்டிக் ட்ரேயில் வளர்க்கப்படுகிறது. மக்காச்சோளத்தை சாதாரண கடைகளில் விதைச்சோளம் அல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் சோளத்தையே வாங்கி பயன்படுத்தப்படுகிறது. 1 கிலோ மக்காச்சோளம் 8 நாளில் 8 கிலோ அடர்பசுந்தீவனமாக மாறுகிறது. நாள் ஒன்றுக்கு 16 ட்ரேயில் மக்காச்சோளம் நிரப்பப்படுகிறது.
8வது நாள் முடியும் பொழுது 16 ட்ரேயில் உள்ள அடர்ந்த பசுந்தீவனம் எடுக்கப்பட்டு புதிதாக 16 ட்ரே நிரப்பப்படுகிறது. இப்படியாக தொடர்ந்து 16 ட்ரே பசுந்தீவனத்தை 1 ட்ரேயில் உள்ள தீவனம் 3 மாடுகள் வீதம் 48 மாடுகளுக்கு அன்றாடம் தங்குதடையின்றி தீவனம் கிடைத்து வருகிறது.
சாதாரணமாக 1 கிலோ மக்காச்சோளம் 15 ரூபாய்க்கு ஆண்டு முழுவதும் கிடைக்க வாய்ப்புள்ளது. 15 ரூபாயில் 8 கிலோ சத்து நிறைந்த அடர்பசுந்தீவனம் கிடைக்கிறது.தினசரி ஒவ்வொரு ட்ரேயிலும் 3 கிலோ மக்காச்சோளம் வீதம் 16 ட்ரேவிற்கு 48 கிலோ மக்காச்சோளம் தேவைப்படுகிறது. இவை சராசரியாக 50 மாடுகளுக்கு சத்து மிகுந்த பசுந்தீவனம் தயார் செய்து மிகச்சிறப்பான முறையில் நாட்டுமாடு வளர்ப்பில் கடந்த 3 தலைமுறையாக சாதனைப்படைத்து வருபவர் ATEX கணேசன்.
தீவனப்பற்றாக்குறை மற்றும் மேய்ச்சல் இல்லாத குறைப்பாட்டை சரிசெய்யும் வகையில் இந்த ஹைட்ரோ போனிக் தீவன உற்பத்தி முறை என்பது கால்நடை வளர்ப்போருக்கு கை கொடுக்கிறது.
நன்றி, அக்ரி பிசினஸ்
super news
very nice