தாவரங்களின் இலைகளில் நுண்துளைகள் ஏராளமாக உள்ளன. இந்த நுண்துளைகள் வழியாக மற்ற உயிரினங்களைப் போலவே தாவரங்களும் காற்றை சுவாசிக்கின்றன . மேலும்,தனக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தாவரங்கள் தயாரித்துக் கொள்கின்றன.
இலைகளே தாவரங்களின் உணவு உற்பத்திக் கூடம். இலைகளில் குளோரோபில் (தமிழில் பச்சையம் ) என்று ஒரு பொருள் உள்ளது. இதன் பணி ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதும்.இலைகளுக்கு பச்சை வண்ணத்தைக் கொடுப்பது இதுதான். ஒளிச்சேர்க்கையின் மூலமாகத்தான் தாவரங்கள் அவைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாயாரித்துக் கொள்கின்றன.
உணவுப் பொருள்களைத் தயாரிப்பதற்கு தாவரங்களுக்குத் தண்ணீர், தாது உப்புக்கள், சூரிய ஒளி மற்றும் கரியமில வாயு ஆகியவை தேவைப்படுகின்றன. தண்ணீரையும் தாது உப்புக்களையும் வேர்கள் மூலமாக மண்ணிலிருந்து ஈர்த்து தண்டு வழியாகப் பெற்றுக்கொள்கின்றன. சூரிய ஒளியையும் கரியமிலவாயுவையும் நேரடியாக விண்ணிலிருந்து பெற்றுக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை மூலம் உணவுப் பொருள்களைத் தயாரித்து விதைகளிலும், கனிகளிலும் வேர்ப்பகுதியில் கிழங்குகளிலும் சேமித்து வைத்துக் கொள்கின்றன என்று முன்பே அறிந்தோம்.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இந்த ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு காற்றில் கலக்கின்றது. தாவரங்கள் இல்லாவிடில் காற்றில் பிராணவாயு இருக்காது. பிராண வாயு இல்லாமல் மற்ற எந்த உயிரினமும் உலகில் வாழவே முடியாது.
தாவரங்களைத் தவிர, மற்ற உயிரினங்கள் அனைத்தும் பிராணவாயுவை ஈர்த்து கரியமிலவாயுவை வெளியிடுகின்றன. இந்தக் கரியமிலவாயுவை தாவரங்கள் இலைகளில் உள்ள துளைகள் வழியாக எடுத்துக்கொண்டு பிராணவாயுவை வெளியிடுகின்றன.
உண்மையில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் அருகிருகில் வாழவேண்டும். தாவரங்கள் மட்டுமே மற்ற உயிரினங்களின் உயிர்த் தாங்கிகளாக விளங்குகின்றன. இதிலிருந்து நாம் வாழும் பகுதியில் மரம், செடி ,கொடிகளை வளர்ப்பதன் அவசியம் புரியக்கூடும். தாவரங்கள் இன்றி உலகில் உயிரினங்கள் வாழ இயலாது.
மரங்கள் குறைய குறைய நமக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே செல்லும், அவ்வாறு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் நமக்கு உடல்ரீதியான சிக்கல்கள் நிறையவே ஏற்படும். எனவே மரம் வளர்ப்போம், மரத்துடன் ஆக்சிஜனும் பெறுவோம்!