அமைவிடம்:
கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதி மிதமான வெப்பநிலை மற்றும் கடுங்குளிரான சூழலையும், தெற்கேயுள்ள பகுதி கடுமையான வெப்பநிலை மற்றும் மிதமான குளிர்கால சூழலையும் கொண்டிருக்கும்.
கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
கடலில் பிற்பகல் வரை வெப்பமாகவும்,மாலை வேளையில் காற்றும் கடல்சார்ந்த காலநிலையும், கடலிலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் பகல் வேளைகளில் அதிக வெப்பநிலையும் இரவு வேளைகளில் குளிரான சூழலும் நிலவும்.
இமயமலைத்தொடர்
இந்தியாவின் புவியியலமைப்பானது காலநிலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் திசை மற்றும் மழைப்பொழிவின் அளவு போன்றவற்றில் இந்தியாவின் புவியியலமைப்பு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
பருவக்காற்று
இது இந்தியக் காலநிலையின் மீது அதிக தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. தென்மேற்குப் பருவக்காற்று (கோடைகாலப் பருவக்காற்று) நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழைப்பொழிவைத் தருகின்றது. இந்த தென்மேற்குப் பருவக்காற்று இமயமலைத் தொடர்களில் மோதி மீண்டும் வங்கக்கடல்வழியாக இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை அடைந்து சிறப்பான மழைப்பொழிவைத் தருகின்றது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இந்தியாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது (Upper Air Circulation) மேற்கத்திய காற்றோட்டம் காரணமாக ஏற்படுகின்றது. மேற்கத்திய சூறாவளி இடையுறுகள் நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்குப்பகுதிகளில் ஏற்படுகிறது. இதற்கும் காரணம் மேற்கத்திய காற்றோட்டமாகும்.
வெப்பமண்டல சூறாவளிகள்
தென்மேற்குப் பருவக்காற்றின்போது அரபிக்கடலில் உருவாகும் சூறாவளிகளும், வடகிழக்குப் பருவக்காற்றின்போது வங்கக்கடலில் உருவாகும் புயல்களும் தீபகற்ப இந்தியப் பகுதியின் காலநிலையில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
எல்நினோ மற்றும் லாநினா
ஒரு சில வருடங்களில் டிசம்பர் மாதத்தில் பெரு நாட்டின் கடற்கரைப்பகுதிகளில் வழக்கமாக உருவாகும் குளிர்காற்றோட்டத்திற்குப் பதிலாக வெப்பக் காற்றோட்டம் உருவாகும். இது பசிபிக்கடல் பகுதியில் வெப்பநிலை உயர்வை ஏற்படுத்தி உலக அளவில் காற்றழுத்தம் மற்றும் காற்றோட்டத்தின் போக்கில் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி இந்தியா பெறும் பருவமழையைக் குறைத்து விடுகிறது. இத்தகைய வருடங்கள் எல்நினோ வருடங்கள் எனப்படுகின்றன.
இத்தகைய எல்நினோவின் எதிர்மறை விளைவே லாநினாவாகும். லாநினா ஏற்படும் வருடங்களில் இந்தியாவில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவு இருக்கும்.
தெற்கு அலைவு (Southern Oscillation)
இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தம் குறைந்தாலோ அதிகரித்தாலோ அதன் விளைவுகள் பசிபிக் பெருங்கடல் வரை நீளும். இத்தகைய காற்றழுத்த தாழ்வு அல்லது அதிகரிப்பு இந்தியாவின் பருவமழையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், காலநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.