தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க பல வகையான பொறிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி காண்போம்…..
1) விளக்குப்பொறி
வயலில் 3அடி உயரத்தில் 60W மின்சார விளக்கை வைக்க வேண்டும். அதற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி இரண்டு சொட்டு மண்ணெண்ணெய் அல்லது Dichlorovos மருந்தினை விட்டுவிடவேண்டும் . இந்த விளக்கு வெளிச்சத்திற்கு வருகின்ற பூச்சிகள் விளக்கைச்சுற்றி வட்டமடிச்சு பார்த்துவிட்டு கீழே இருக்கின்ற பாத்திரத்தில் விழுந்து இறந்துவிடும். வளக்குப்பொறியை மாலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே வைக்க வேண்டும். அதற்கு மேல் வைக்கக்கூடாது. விளக்குப்பொறியை ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
தற்பொழுது மானிய விலையில் சூரிய மின்சார விளக்குப்பொறிகளும் அரசாங்கத்தால் கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் அதனைப்பெற்று பயன்பெறலாம்.
2) இனக்கவர்ச்சிப் பொறி
பெண் பூச்சிகளுடைய வாசனைதான் ஆண் பூச்சிக்ளை இனப்பெருக்கத்துக்காக கவர்ந்து இழுக்கும். அதனால் பெண் பூச்சிகளுடைய வாசனை தரும் மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இதற்கு ஆங்கிலத்தில் ‘Pheromone” என்று பெயர். இதனை பிளாஸ்டிக் பைக்களில் வைத்து மேலே ஒரு மூடியை வைத்து மூடிவிட வேண்டும். இந்த மூடியில் சிறிய ஓட்டை இருக்கும். இதனை வயலில் வைக்கும்போது ஆண் பூச்சிகள் அந்த வாசனையை பிடித்துக்கொண்டே வரும். அப்பொழுது அந்த சிறிய ஓட்டைவழியே உள்ளே சென்று மாட்டிக்கொள்ளும்.பின் அந்த பூச்சிகளை அழித்து விடலாம். இந்த இனக்கவர்ச்சிப்பொறிகளை ஹெக்டேருக்கு 12 இடங்களில் வைக்க வேண்டும்.
3) மஞ்சள் நிற ஒட்டுப் பொறி
மஞ்சள் நிற அட்டையில் விளக்கெண்ணெய் தடவி ஹெக்டேருக்கு 12 இடங்களில் குச்சியை நட்டு குச்சியுடன் அந்த மஞ்சள் நிற அட்டையையும் சேர்த்து கட்டிவிட வேண்டும். மஞ்சள் நிறத்தால் கவரப்பட்டு பக்கத்தில் வருகின்ற அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் போன்ற பூச்சிகள் மஞ்சள் நிற அட்டைகளில் ஒட்டிக்கொண்டு அழிந்துவிடும்…….
எ.செந்தமிழ், வேளாண் இளங்கலை மாணவர்
அக்ரிசக்தி விழுது மாணவர் திட்டம்