பருவநிலை மாறுதல் காரணமாக 59,000-க்கும் அதிகமான இந்திய விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று தேசிய அறிவியல் அகாடமியின் வெளியீட்டு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகுபடி காலத்தில் வெயில் 20 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் போகும்போது, ஒவ்வொரு சென்டிகிரேடு அதிகரிப்புக்கும் சராசரியாக 70 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வெயில் அதிகரிப்பால் பயிர்கள் கருகி சாகுபடி பொய்த்துவிடுகிறது. ஒரு புறம் விளைச்சலை இழந்த வருத்தம், மறுபுறம் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடி, கடன் கொடுத்தவர்கள் அளிக்கவிருக்கும் நெருக்கடி ஆகியவற்றால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இந்தியாவின் 32 மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிக்கு உட்பட்ட நேரடிப் பிரதேசங்களில் திரட்டப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தம்மா ஏ.கார்ல்டன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். அவரது ஆய்வு முடிவுகள் தேசிய அறிவியல் அகாடமியின் வெளியீட்டு இதழில் இடம்பெற்றுள்ளன.
அதில் இந்தத் தகவல் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 1967 முதல் 2013 வரையிலான காலத்தில் அடித்த வெயில், பெய்த மழை, விளைச்சல் விவரம் ஆகியவை ஒப்பிடப்பட்டுள்ளன. பயிர்கள் சாகுபடி செய்யாத காலத்தில் வெயில் அதிகமானால் தற்கொலைகள் நடப்பதில்லை.
1956 முதல் 2000 வரையிலான காலத்தில் 13 மாநிலங்களில் பருவநிலையில் ஏற்பட்ட மாறுதல்களும் பயிர் விளைச்சல் அளவும் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. பயிர் விளைச்சல் காலத்தில் ஒரு சென்டி மீட்டர் அளவு மழை பெய்தால்கூட தற்கொலை அளவு ஒரு லட்சம் பேருக்கு 0.8 என்ற அளவுக்குக் குறைகிறது – அதாவது, ஒட்டுமொத்தமாக 7% அளவுக்குத் தற்கொலை குறைகிறது என்றும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். ஒரு பருவத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மழை பெய்துவிட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குத் தற்கொலை அளவும் குறைகிறது.
இந்தியாவின் பிற பகுதிகளைவிட, தென்னிந்தியாவில்தான் வெயில் அதிகமானால் விவசாயிகளின் தற்கொலையும் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்கொலை அளவு மட்டுமல்ல, பயிர்ச் சாகுபடி குறைந்த அளவும் அதிகமாகவே இருக்கிறது. இப்படிப் பருவ மாறுதலால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கவோ குறைக்கவோ மாற்று அணுகுமுறை இருப்பதாக ஆய்வில் தெரியவில்லை.
இந்த ஆய்வில் சில குறைகளும் இருக்கின்றன. வெயில் அதிகரித்து, அதன் காரணமாக விளைச்சலும் குறைவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை நேரடியாக நிரூபிக்கும் ஆதாரமாகப் புள்ளிவிவரங்களைத் தவிர, வேறு எதையும் கூற முடியவில்லை. தற்கொலைகளுக்கு வேறு எவை காரணங்களாக இருக்க முடியும் என்பதையும் ஆய்வு கவனத்தில் கொள்ளவில்லை.
2050 வாக்கில் பருவநிலை மாறுதலால் வெயில் அளவு மேலும் மூன்று டிகிரி சென்டிகிரேடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கும் அனைத்து அம்சங்களையும் களைந்து, மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்பதைத்தான் உணர்த்துகிறது இந்த ஆய்வு!
இச்சிக்கலை சமாளிக்க குறிப்பாக ஒவ்வோரு கிராமம் மற்றும் நகர்களையும் மறுநிர்மானம் செய்யவேண்டியது அவசியமாகிறது. ஆனால் அரசாங்கம் இதற்கு பெரு முயற்சி எடுக்கவேண்டும்
நன்றி : தமிழ் இந்து