கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வேளாண்மைத் துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு வெளியிட்ட அறிவிப்புகள் இங்கே இடம் பெறுகின்றன.
நெல் வயல்களில் பாசன நீர் தேவையைக் கண்காணிக்க புதிய முறை!
நெற்பயிரில் பாசன நீர் பயன்பாட்டு அளவைக் குறைக்கவும் , தேவைக்கேற்ப நீர்ப்பாசனம் மேற்கொள்ளவும்,’நீர் குழாய் முறை’ என்னும் புதிய உத்தியை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த,கடலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதி அல்லாத 8 வட்டாரங்களில், 61,140 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடியே 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னோடி திட்டம் மேற்கொள்ளப்படும்.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, மாதிரி கிராமங்கள்!
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நஞ்சில்லா உணவு கிடைப்பதை உறுதி செய்யும் உத்திகளை ஊக்குவிக்க, விவசாயக் குழுக்கள் மூலம் பண்ணையளவில் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளை உற்பத்தி செய்யும் முன்னோடி திட்டம், 150 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
2016-17ம் ஆண்டில், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 20 மாவட்டங்களில் மேலும் 100 ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மாதிரி கிராமங்கள் அமைக்கப்படும்.
தரிசு நிலங்களில் மரவகை எண்ணெய் வித்து சாகுபடி!
வளம் குறைந்த தரிசு நிலங்களில் வேம்பு, புங்கன் போன்ற மரவகை எண்ணைய் வித்துப் பயிர்களை, சாகுபடி செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டவும், ஊடுபயிர் சாகுடி செய்து கூடுதல் வருமானம் பெறவும், தேவையான தரமான மரக்கன்றுகளை அரசே உற்பத்தி செய்து விநியோகிக்கவும் 2016-2017-ம் ஆண்டில், ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் நீதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
அடர் நடவு முறையில் மா சாகுபடியை ஊக்குவித்தல்!
அகில இந்திய அளவில், மாம்பழ உற்பத்தியில் தமிழகம் முக்கிய மாநிலமாக விளங்குகிறது. குறைந்த பரப்பில் மாம்பழ உற்பத்தியை அதிகரிக்க, ‘அடர் நடவு முறை’, நிர்வழி உரமிடுதல்’ ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மாம்பழ உற்பத்தியை அதிகரிக்க 2,750 ஏக்கர் பரப்பளவில், அடர் நடவு முறையில் மா சாகுபடியை மேற்கொள்ள நடவுச் செடிகள், ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்புக்கான இடுபொருட்கள் மானிய விலையில் வழங்க நடப்பாண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு வேளாண் விற்பனை மையங்கள் ஏற்படுத்துதல்!
விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய, விளைபொருள் வாரியாக உள்ள விவசாயக் குழுக்களை ஒருங்கிணைந்து, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி,உற்பத்தி செய்த விளைபொருட்களை, இந்த அமைப்புகள் மதிப்புக்கூட்டி, விளம்பரப்படுத்தி விற்பனை செய்திட, 10 விற்பனை மையங்கள், வேளான் சிறப்பு வணிக வளாகங்களில் அமைக்க, நடப்பாண்டில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
வேளாண்மைப் பொறியியல் துறை பண்டக சாலையை வலுப்படுத்துதல்!
வேளாண்மையைப் பெருமளவில் இயந்திரமயமாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளாண் பொறியியல் துறையினர், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிய உபகரணங்கள் மற்றும் நவீன கருவிகள் வாங்க, நடப்பாண்டில் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் பொறியியல் துறை பண்டகசாலை வலுப்படுத்தப்படும்.
நடமாடும் மண் ஆய்வுக் கூடத்தை வலுப்படுத்துதல்!
மண்ணின் வளத்தையும், உரங்களின் தரத்தையும் உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் விருதுநகர் மண் ஆய்வுக் கூடம் மற்றும் காஞ்சிபுரம் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்துக்கு சொந்தமாக அரசுக் கட்டவும், அருப்புக்கோட்டையில் உள்ள நடமாடும் மண் ஆய்வுக் கூடத்தை வலுப்படுத்தவும், நடப்பாண்டில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயிர் உர ஆய்வகத்துக்கு புதிய கட்டுதல்!
மண்வளத்தை மேம்படுத்தி, உற்பத்தியை உயர்த்துவதில் உயிர் உரங்களின் பங்கு மிக முக்கியமாகும். உற்பத்தி செய்யப்படும் உயிர் உரங்களின் தரத்தை பரிசோதிக்க உயிர் உர தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் திருச்சிராப்பள்ளியில் இயங்கி வருகிறது. இந்த ஆய்வகம் அனைத்து வசதிகளுடன் இயங்க புதிய கட்டடம் ஒன்று 2016-17-ம் ஆண்டில், 2 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும்.
இவைகள் எல்லாம் அறிக்கைகளோடும், அறிவிப்புகளோடும் நின்றுவிடாமல் மக்களுக்காக செயல்படுத்தவேண்டியது அரசின் கடமை, விழிப்போடு இருந்து தமது சலுகைகளை பெறுவது விவசாயிகளின் நிலமை