ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும்.
சேற்றுழவு செய்து மண்ணைப் புளிக்க வைத்து 15 நாள்கள் கழித்து, நாற்றங்காலைச் சமன்படுத்தி 1 கிலோ விதைநெல்லைத் தூவ வேண்டும்.
2 கிலோ கடலைப்பிண்ணாக்குடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில் ஒரு நாள் ஊறவைத்து… இதனுடன் 10 கிலோ சாண எரிவாயு மட்கு, 2 கிலோ வேப்பங்கொட்டைத் தூள் ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் ஊற வைக்க வேண்டும்.
இக்கலவையை விதைத்த 9-ம் நாள் நாற்றாங்காலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். 11-ம் நாள் 5 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் ஜீவாமிர்தம், அரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும்.
ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் தலா 5 கிலோ சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவற்றைக் கலந்து விதைத்து, 45-ம் நாள் மடக்கி உழ வேண்டும்.
இதில் சேற்றுழவு செய்து 20 நாள்கள் அப்படியே விட வேண்டும். பிறகு 2 சால் உழவு ஓட்டி நிலத்தைச் சமன்படுத்தி, வரிசைக்கு வரிசை 50 சென்டி மீட்டர், குத்துக்குக் குத்து 25 சென்டி மீட்டர் இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்த 10-ம் நாள் 150 கிலோ சாண எரிவாயு மட்குடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து புரட்டி ஒரு நாள் வைத்திருந்து தெளிக்க வேண்டும்.
20-25 நாள்களில் கோனே வீடர் மூலம் களைகளை மண்ணுக்குள் அழுத்தி விட வேண்டும். 40-ம் நாள் 100 கிலோ சாண எரிவாயு மட்குடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து புரட்டி, ஒரு நாள் வைத்திருந்து, தெளிக்க வேண்டும்.
40-ம் நாள் களையெடுக்க வேண்டும். 45 மற்றும் 55-ம் நாள்களில் 100 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் சாண எரிவாயு கழிவுநீரைக் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
80-90 நாள்களில் கதிர் வரத் தொடங்கும்.
110-115 நாள்களில் அறுவடைக்கு வரும்.
அந்தந்த நெல் ரகங்களின் வயதைப் பொறுத்து கதிர் விடும் நாள்கள் அறுவடைக்கான நாள்கள் மாறுபடும்.