Skip to content

சூரியகாந்தி சாகுபடி!

     கோயம்பத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள எண்ணெய் வித்துக்கள் துறையின் தலைவர் முனைவர். விஸ்வநாதன் பதில் சொல்கிறார்.

    ‘ ‘தமிழ்நாட்டில் மற்ற தாவர எண்ணெய்களை விட சூரியகாந்தி எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொருளியல் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்தின் தகவல்படி, 2014-15-ம் ஆண்டு இந்தியாவில் சூரியகாந்தி 0.55 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சூரியகாந்தி அதிகம் விளைவிக்கப்படுகின்றது. இந்தியாவின் மொத்த சூரியகாந்தி விதை உற்பத்தியில் இம்மாநிலங்கள் 82 சதவிதம் பங்களிக்கின்றது. சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன், ரஷ்யா, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது.

      ஈரோடு, கரூர், ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூரியகாந்தி அதிகம் விளைவிக்கப்படுகின்றது. சூரிய காந்தி சாகுபடியைப் பொறுத்தவரை அடிப்படையாக ஒரு பிரச்சனை உள்ளது. அதாவது, பறவைகள் சூரிய காந்தி விதைகளை விரும்பி உண்ணும். எனவே, குறைந்தபட்சம் 100  ஏக்கர் அளவில் ஊரில் உள்ளவர்கள் சேர்ந்து சூரியகாந்தி சாகுபடி செய்தால் மட்டுமே, பறவைகள் மூலம் ஏற்படும் சேதம் சற்று குறையும். ஊரில் நீங்கள் மட்டும் சாகுபடி செய்தால், பறவைகள் அனைத்தும் உங்கள் சூரியகாந்தியை பதம் பார்த்துவிடும். எனவே, முதலில் 25 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்யவும். பறவைகள் வருகை எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டு, சாகுபடி அளவை விரிவுப்படுத்தலாம்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj