கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே ஆட்டிவைப்பவை கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது , இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது.
நுண்ணுயிர்கள்தாம் இந்த பூமியில் ஆதியில் தோன்றிய முதல் உயிரினங்கள். அவை திடநிலையில் இருந்த ஆக்சிஜனை சுவாசித்துக் கார்பன் -டை-ஆக்சைடை வெளியேற்றின. ஏற்கெனவே பூமியில் தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை இருந்ததால், இந்தக் கார்பன் -டை-ஆக்சைடைப் பயன்படுத்திப் பச்சையம் அதாவது, தாவரங்கள் உருவாயின. அப்படி முதன்முதலில் தோன்றியவைதான் பெரணி வகைத் தாவரங்கள். அவை, கார்பன் -டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு வாயு நிலையில் ஆக்சிஜனை வெளியேற்றின.
இந்த ஆக்சிஜனை சுவாசிக்ககூடிய நம்மைப் போன்ற உயிரினங்கள் அதற்குப் பிறகுதான் தோன்றின என்கிறது, வரலாறு. தற்போது புவி வெப்பமயமாதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பவை, நுண்ணுயிரிகள்தாம். நுண்ணுயிர்கள் அழிந்தால், தாவரங்கள், உயிரினங்கள் என அனைத்தும் அழியும். ஒரு கிராம் மன்ணில் நூறு கோடி நுண்ணுயிர்கள், மண்ணுக்கும் உயிரினங்களுக்கும் பயிர்களுக்கும் உதவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் காக்க வேண்டிய பணி நம்முன்னே பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. மண்ணில் உள்ளது போல் நம் உடலும் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமுள்ளன.
இத்தனை நன்மை செய்யும் நுண்ணுயிர்களை, வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர், சோவியத்ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி, வினகராட்ஸ்கி அவர் கண்டுபிடித்த, அசோஸ்பைரில்லம்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உயிர் உரம். 1929-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னமும்கூட நம் விவசாயிகளை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதுதான் வேதனை.
அசோஸ்பைரில்லத்துக்குப் பிறகுதான் ஒவ்வொரு சத்துக்களையும் கரைக்கக்கூடிய நுண்ணுயிர்கள் பயன்பாட்டுக்கு வந்தன. சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா எனப் பலவகையான உயிர் உரங்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. தமிழக விவசாயிகள் தற்போதுதான் உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.
செயற்கையாக நாம் கொடுக்கும் உயிர் உரங்களை ஒருபுறம் இருந்தாலும், மண்ணில் உள்ள கோடிக்கணக்காண நுண்ணுயிர்கள்தாம் ஆண்டாண்டு காலமாக உழவர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவற்றை காக்க நாம் என்ன செய்திருக்கிறோம்.
மனிதர்களுக்குத் தேவைப்படுவது போலவே, நுண்ணுயிர்கரிகளுக்கும் உணவும் உறைவிடமும் அவசியம்.மண்ணில் விழும் பொருள்களைச் சிதைத்து, அதில் இருந்துதான் நுண்ணுயிர்கள் தங்களுக்கான உணவை எடுத்துக்கொள்கின்றன. அதைத்தான் நாம் ‘மட்குதல்’ என்கிறோம். ஒரு பொருளை மட்க வைத்து, தனது உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்தவுடன் , அதைத் தாதுக்களாக மாற்றி, தாவரங்களுக்குக் கொடுக்கும் பணியைச் செய்கின்றன, நுண்ணுயிர்கள்.
பாரம்பர்யாக விவசாயத்தில் பயன்படுத்தி வரும் தொழுவுரம், நுண்ணுயிர்களுக்கான ஆகச் சிறந்த உணவு. காலப்போக்கில் தொழுவுரங்களை குறைத்துவிட்டு, குப்பை உரங்கள் என்ற பெயரில் நகரத்து குப்பைகளைக் கொட்டுகிறோம். இதில், எளிதில் மட்காத உள்ளிட்ட பல பொருள்கள் கலந்திருக்கின்றன.
இவற்றை சிதைக்க முடியாததால், நுண்ணுயிர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. நாம் இடும் உரங்களில் மூன்று பங்கு தாவரக் கழிவுகளும்(இலை தழைகள்). ஒரு பங்கு கால்நடை கழிவுகளும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது உரம். இல்லையென்றால் வெறும் குப்பைதான். மண்ணுக்கு நல்ல தொழுவுரம் கொடுத்தாலே, நுண்ணுயிர்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதுடன், மண்ணில் உள்ள அங்ககச் சத்துக்களும் அதிகரிக்கும்.
பூமியெங்கும் இருந்த காடுகளையும் மரங்களையும் அழித்து கான்கிரீட் காடுகளாக்கிக் கொண்டு இருக்கிறோம். அதனால், உணவுத் தட்டுப்பாடு போலவே, இருப்பிடமும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. காடுகள், மரங்கள் வேகமாக அழிக்கப்படுவதால் அதன் கீழே வாழ்ந்த நுண்ணுயிர்களும் அழிந்து போகின்றன. மேலும், மண்ணில் விழும் மட்கும் பொருள்களின் எண்ணிக்கையை விட, மட்காத பொருள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் நுண்ணுயிர்கள் அழிய முக்கியக் காரணம். இவற்றை மீட்டெடுக்க நிலத்தில் தொழுவுரப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதோடு, வேளாண் காடுகள் வளர்க்கப்பட வேண்டும். மரங்களை உள்ளடக்கிய விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். தாவரங்களின் இலைதழைக் கழிவுகள்தான் நுண்ணுயிர்களுக்கான உயிராதாராம். அந்த ஆதாரத்தை நாம் உருவாக்கித் தர வேண்டும். நுண்ணுயிர்கள் மீது நாம் செலுத்தும் அதிபயங்கர வன்முறை, ரசாயனப் பயன்பாடு.
ஏற்கனவே, உணவில்லாமல் பட்டினியாய் கிடக்கும் நிலையில், ரசாயன உரங்களை மண்ணில் கொட்டுவது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதற்குச் சமமானது. இதனால், நுண்ணுயிர்கள் அழியுமே தவிர, பெருகாது. ரசாயன உரங்களால் மண்ணின் கார அமில நிலை மாறும்போது, அது நுண்ணுயிர்களையும் பாதிக்கும். வெப்பம், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சணக்கொல்லிகள் போன்ற பல்வேறு காரணிகளால் நுண்ணுயிர் பெருக்கம் தடைபடுகிறது. இவை அனைத்தையும் குறைத்து, இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தினாலே நுண்ணுயிர்களைப் பெருக்கிவிடலாம்
நுண்ணுயிர்கள் சேவை, மண்ணோடு நின்று விடுவதில்லை. உயிரினங்களின் உடல் உறுப்புகளிலும் இவை பணியாற்றுகின்றன. உதாரணமாக, நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைப்பது, குடலில் உள்ள ‘லேக்டோ பேசிலஸ்’ எனும் நுண்ணுயிரி. தற்போது தாய்ப்பால் ஜீராணமாகாமல் குழந்தைகள் வாந்தியெடுக்கும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. இதற்குக் காரணம், ‘லேக்டோ பேசிலஸ்’ என்ற நுண்ணுயிரிக் குறைபாடுதான்.
நுண்ணுயிர்கள் அண்ட வெளியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். காற்று, தண்ணீர், நிலம் என அனைத்து இடங்களிலும் இருக்கின்றன. நம் காலுக்குக் கீழே கோடிக்கணக்கான உயிர்கள் இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.