Skip to content

மலைவேம்பு

மலைக்காடுகள், ஓடைக்கரைகளில் தன்னிச்சையாக உயரமாக வளரக்கூடிய மரமிது. சாதாரண வேப்பிலையில் காணக்கூடிய அறுவாய் தோற்றம், இம்மரத்து இலைகளில் இருக்காது. பூக்கள் கொத்து கொத்தாகவும் வெண்மை நிறத்துடனும் இருக்கும். காய் உருண்டையாகவும் கெட்டியாகவும் இருக்கும். தோற்றத்தில் இதை ஒத்திருக்கும் துளுக்க வேம்பை, மலைவேம்பு எனக் கருதுவதுண்டு. ஆனால், துளுக்க வேம்பில் நீல நிறப் பூக்கள் பூப்பதை வைத்து எளிதாக இனம் காணலாம். இது இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தமையால், துளுக்க வேம்பு என அழைக்கப்படுகிறது. மலைவேம்பு வணிக ரீதியாக பலன் கொடுப்பதால் பல பண்ணைகளில் அதிகளவு வளர்க்கப்பட்டு வருகிறது.

கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கும் அருமருந்து மலைவேம்பு. மலைவேம்பின் இலைகளை நன்கு அரைத்து, துவையல் பதத்தில் ஒரு நெல்லிக்காயளவு மாதவிலக்கு ஆன 2,3,4-ம் நாட்களில் காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். இம்மருந்து சாப்பிடும் நாட்களில் உப்பைத் தவிர்க்க வேண்டும். 3 மாதங்கள் இதைக் கடைபிடித்தால் கருத்தரிப்புப் பிரச்சனைகள், கருப்பைக் கட்டிகள், வலியுடன் கூடிய மாதவிலக்கு ஆகியவை குணமாகும்.

‘தேரையர் தைல வர்க்கச்சுருக்கம்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ள ‘கலிங்காகித் தைலம்’ தயாரிப்பில் மலைவேம்புச் சாறு பயன்படுத்தப்படுகிறது. இத்தைலம், மாதவிடாய் மற்றும் கருப்பை நோய்களைக் குணமாக்கும். இத்தைலத்தை சித்த மருத்துவரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மலைவேம்பு இலைகளை அப்படியே அரைத்து, தலையில் பற்று போட்டு அரை மணி நேரம் கழித்துக் குளித்தல் பேன், பொடுகு போன்றவை ஒழியும். ஒரு வாரம் தொடர்ந்து பற்றுப் போட்டு குளிக்க வேண்டும்.

Leave a Reply

senthamil E

senthamil E

முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608002