Skip to content

கறிவேம்பு!

இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புத மூலிகை. நாம் நறுமணத்துக்காக மட்டும் பயன்படுத்தி, பிறகு தூக்கி எறியும் கறிவேப்பிலை தான் இது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இதைத் தாளிக்க மட்டுமே பயன்படுத்தினால் முழுப்பயன் கிடைக்காது. அதனால், உணவுத்தட்டில் இருந்து இதைத் தூக்கி எறியாமல் கண்டிப்பாக உண்ண வேண்டும். அப்போதுதான் முழுப்பலன் கிடைக்கும்.

முன்பு குழந்தைகளைக் குளிப்பாட்டிய உடன் ‘உரப்பு மருந்து’ எனும் மருந்தை குழந்தைகளின் நாக்கில் தடவி விடுவார்கள். சிறிது கறிவேப்பிலை, 2மிளகு ஆகியவற்றை நெய்யில் வறுத்து, வெந்நீர் விட்டு அரைப்பது தான் உரப்பு மருந்து. தினமும் இதை குழந்தைகளின் நாக்கில் தடவிவந்தால், செரிமான சக்தி அதிகரிப்பதுடன், வயிறு சம்பந்தமான பிணிகள் வராமல் தடுக்கப்படும். சோகை நோயும் தடுக்கப்படுவதோடு, கண்பார்வை வளமாகும். தோல் பளபளப்பாகும். இப்பழக்கத்தை விட்டுவிட்டு… ‘கிரைப்வாட்டர்’ என்ற பெயரில் கண்டதயும் கொடுத்து வருவது காலக் கொடுமை.

சித்த மருத்துவத்தின் படி, செரிமானக் கோளாறால் வயிற்றில் ஏற்படும் வாயுதான் அனைத்து நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. ‘வாயு முத்தினால் வாதம்’ என்று கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. கறிவேப்பிலையில் தயாரிக்கப்படும் அன்னப்பொடிக்கு வாயுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி உண்டு. கறிவேப்பிலைத்தூள் 70 கிராம், சுக்கு, மிளகு, ஓமம், காயப்பொடி, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் வகைக்கு 10 கிராம், இந்துப்பு 5 கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்தால் அன்னப்பொடி தயார். இதைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாளும் மதிய உணவு சாப்பிடும்போதும், சுடு சோற்றில் ஒரு தேக்கரண்டி அன்னப்பொடி போட்டு சிறிது பசுநெய் விட்டுப் பிசைந்து மூன்று கவளம் சாப்பிட்டு வந்தால் வாயு, ஏப்பம், வயிற்றிரைச்சல், வயிற்றுப்புண் பிரச்சனைகள் வரவே வராது. ஆண்டுக்கணக்கில் வயிற்றுப் புண்ணுக்காக மாத்திரைகள் சாப்பிட்டு வருபவர்கள் கூட அன்னப்பொடி மூலம் விரைவில் குணமடைய முடியும். கறிவேப்பிலை ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கி இடித்துத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி பச்சிளம் குழந்தைகளுக்குப் புகட்டினால், பால் வாந்தி நிற்கும்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj