Site icon Vivasayam | விவசாயம்

பட்டுப்புழு வளர்ப்பில் மர மல்பெரியின் முக்கியத்துவம்!

ஒரு காலத்தில் மல்பெரி ஒரு பழ மரமாகவே கருதப்பட்டது. மல்பெரி வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம் ஆகும். மல்பெரி மரம் வறட்சியாலும் தரமான, அதிகளவு  இலையை தரக்கூடியது.  தோட்டத்தின் எல்லை பகுதிகளிலும் வரப்பு ஓரங்களிலும் 8-10 அடி இடைவெளியில் மல்பெரி மரங்களை வளர்ந்து பராமரித்து நல்ல தரமான சத்துள்ள மல்பெரி இலைகளை புழுக்களுக்கு உணவளிப்பதன் மூலம் தரமான பட்டுக்கூடுகளை அறுவடை செய்து அங்காடியில் நல்ல விலை பெறலாம்.

நன்கு வளர்ந்த ஒரு மரத்தில் கிடைக்கும் சுமார் 9 கிலோ மல்பெரி இலைகளை கொண்டு ஒரு பட்டு முட்டை தொகுதியை வளர்க்க இயலும். இதிலிருந்து 1/2 கிலோ பட்டுக்கூடுகள் கிடைக்கும். 100 மரங்களை வளர்த்து புழுவளர்ப்பு செய்வதன் மூலம் கூடுதல் வருமானமாக ஒரு அறுவடைக்கு ரூ.15,000/- பெறலாம்.

ஒவ்வாரு விவசாயியும் தமது தோட்ட பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் மல்பெரி மரங்களை வளர்த்து “ஒரு மல்பெரி மரம்,  ஒரு பட்டுமுட்டை தொகுதி, 1/2 கிலோ பட்டுக்கூடுகள் ” என்ற நோக்கில் தம்மிடம் உள்ள மல்பெரி மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வருமானம் பெறலாம். மேலு‌ம் புழு வளர்ப்பின்போது 5-ம் பருவத்தின் இறுதியில் மல்பெரி மர  இலைகளை  உணவாக  அளிப்பதன் மூலம் தரமானபட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யலாம். மல்பெரி மரத்தில் உருவாகும் பழங்கள் சுவையாகவும் உடலுக்கு நலமளிக்க கூடியதுமாகும்.

மர மல்பெரி பராமரிப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1.) தரமான மல்பெரி நாற்றுகளை மரமல்பெரி நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

2.) மரமல்பெரி நடவுக்கு குறைந்தபட்சம் 6 மாத வயதுடைய 5 அடிக்குமேல் வளர்ந்த நாற்றுகளை பயன்படுத்திட  வேண்டும்.  குறிப்பாக மானாவாரி பகுதிகளுக்கு 8 முதல் 10 மாத வயதுடைய நாற்றுகளை பயன்படுத்தல் நன்று.

3.) 30 செ.மீ. நீளம் × 30  செ.மீ. ஆழம் உள்ள குழிகள் அமைத்து அதில் தொழு உரம், மண், மணல் ஆகியவற்றை முறையே 1:1:1 என்ற விகிதத்தில் இட்டு மல்பெரி நாற்றுகளை நடவு செய்து தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்.

4.)நாற்றுக்கள் வேர்பிடிக்க வசதியாக உறுதுணையாக ஊன்று குச்சிகளை நட்டு நாற்றுடன் சேர்த்து கட்ட வேண்டும்.

5.)நாற்று நடவு செய்து குறைந்தபட்சம் ஒருவருடத்திற்கு மரங்களிலிருந்து மல்பெரி இலைகளை பறிக்கக் கூடாது.

6.)மல்பெரி நாற்று நட்ட பிறகு உரிய மண்வளத்தையும், ஈரப்பதத்தையும் நிலத்தில் பராமரிக்க வேண்டும்.

7.)மல்பெரி மரங்கள் தண்டு துளைப்பான் மற்றும் கரையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகலாம். சுண்ணாம்புக் கலவையை மரத்தின் தண்டின்மீது பூசுவதன் மூலம் மரங்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.

-செ.பிரியதர்ஷினி,
இளமறிவியல் வேளாண்மை,
‘விழுது’ வளரும் பத்திரிக்கையாளர்  திட்டம்.

Exit mobile version