Site icon Vivasayam | விவசாயம்

பழ ஈக்களுக்கு சிக்கன கவர்ச்சிப் ”பொறி”!

தோட்டக்கலைப் பயிர்களான பழமரங்கள், காய்கறிகள் போன்றவைகட்கு கெடுக்கக்கூடியது ‘பழ ஈ’க்கள்  சின்ன ஈக்கள் தானே என்று இருந்து விட்டால் மகசூலில் பெரிய பாதிப்பையையும், விற்பனையின் போது தரக்குறைவையும் ஏற்படுத்திவிடும்.

 ‘பேக்ட்ரோசீரா குக்கர்பிட்டே’ எனும் பழ ஈக்கள் வெள்ளை நிற இறக்கைகளையும், பழுப்பு மற்றும் சாம்பல் புள்ளிகளையும் உடையது. அளவில் சிறியதாக இருக்கும். ‘சிலியேட்டஸ்’ செம்பழுப்பு நிற உடல் அமைப்பைக் கொண்டது. ‘ஜீனேட்டோ’ மஞ்சள் நிறமாகவும் இடுப்பில் மஞ்சள் பட்டைகளை உடையது. தக்காளி, பூசணி வகை, புடலை, திராட்சை, மாதுளை, கொய்யா, முருங்கை போன்று பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களில் பழ ஈக்கள் பலத்த பொருளாதார சேதத்தை உண்டாக்குகின்றன.

இந்தப் பழ ஈக்களின் கால்களற்ற புழுக்கள் காய்களின் உட்பகுதியில் உள்ள திசுக்களை உண்ணும். காய்களிலிருந்து பழுப்பு வண்ணத்தில் திரவம் வடியும். காய்கள் உருக்குலைந்து காணப்படும். முதிர்ச்சியடையும் முன்பே காய்கள் உதிர்ந்துவிடும்.

 பழ ஈக்களின் வாழ்க்கைச் சுழற்சி குறுகிய காலத்தில் பல மடங்கு பல்கிப் பெருகும் இயல்பை உடையது. தாய் ஈக்களானது காய்களின் மீது குறிப்பாக நன்கு விளைந்த பகுதிக்கு அருகில் தனித்தனியே வைக்கும் கரு கூடிய முட்டைகள் சூரிய வெப்பத்திலேயே பொரித்து கால்கள் இல்லாது அழுக்கடைந்த வெண்மை நிறத்திலான புழுக்களாக மாறும். இந்தப் புழுக்கள் தான் காய்களின் உட்பகுதியில் உள்ள திசுக்களை உண்பவை.முழு வளர்ச்சியடைந்த இந்தப் புழுக்கள் மண்ணில் வீழ்ந்து கூட்டுப்புழுவாக மாறுகிறது. கூட்டுப்புழுக்களை உடைத்துக்கொண்டு ஈக்கள் உண்டாகின்றன. ஒரு ‘ஈ’ ஆனது ஒரு முறைக்கு சுமார் 500 முட்டைகள் வரைக்கும் இடும். 7 நாட்களில் முட்டை ‘ஈ’ ஆக மாறும்.

பழ ஈக்களை கவனித்து அழித்து ஒழுக்காவிட்டால் மகசூலில் பலத்த பாதிப்பை உண்டாக்கும் பழ ஈக்களை மாலத்தியான் 0.1% கரைசலைத் தெளித்து கட்டுப்படுத்தலாம். நிலத்தை அடிக்கடி உழவு செய்து கூட்டுப் புழுக்களை மண்ணிலிருந்து வெளிக்கொண்டு வந்து அழிக்கலாம். தாய் ஈக்களின் நடமாட்டமானது வறட்சியான வெப்பம் நிறைந்த காலங்களில் குறைவாகவும், மழைக்காலங்களில் அதிகமாகவும் இருக்கும். அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 ஒரே பட்டத்தில் பெரும் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும்போது சேதார நிலை குறையும். அதற்கு ஏற்ப விதைப்பு காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். தாக்கப்பட்ட அழுகிய காய்களைப் பறித்து, அதிலுள்ள முட்டை, புழுக்கள் மீண்டும் வெளிவந்து தன் இனத்தைப் பெருக விடாமல் நெருப்பில் இட்டுப் பொசுக்கி அழிக்க வேண்டும்.

          லூர் –   இனக் கவர்ச்சிப் பொறி!

   தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கவும், என்னென்ன பூச்சிகளின் நடமாட்டம் இருக்கிறது எனக் கண்டறிந்து கணக்கிடவும் பயன்படுத்தப்படுகின்றது. பல்வேறு விதமான வடிவங்களில் இனக்கவர்ச்சிப் பொறி விற்பனை ஆகின்றது. பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கின்ற வாசனையை வெளியேற்றுகின்ற ‘லூர்’ எனப்படும் பாகத்தை மாதந்தோறும் மாற்ற வேண்டும். இந்த ‘லூர்’ சுமார் 40 ரூபாயிலிருந்து 180 ரூபாய் வரை விற்கிறது.               

 

 இதுபோன்று பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகளிலும் மாறுபட்ட இரண்டு வகைகள் உண்டு. முதலாவது ‘கவர்ச்சிப் பொறி’. லாக்டிக் அமிலம் அல்லது வினிகர் மூலம் கவர்ச்சிப் பொறி தயார் செய்து பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்

 ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பெட் பாட்டிலை எடுத்து அதில் கீழிருந்து 10 சென்டிமீட்டர் உயரத்தில் பேனா ரீஃபில் அளவுள்ள துளைகள் வட்டமாக 12 முதல் 15 வரை போட வேண்டும். சாக்கு தைக்கும் கோணூசியை நெருப்பில் சூடு செய்து பாட்டிலில் குத்தி எளிதாக துளையிடலாம். இவ்வாறு துளையிட்ட பாட்டிலினுள் 5 செ.மீ. அளவிற்கு சர்க்கரை கலந்த பாலை ஊற்றினால் லாக்டிக் அமிலம் தயார். இந்த வாசனையை முகர்ந்து பழ ஈக்கள் துளை வழியே பாட்டிலில் நுழைந்து பாட்டிலினுள் உள்ள பாலில் விழுந்து மூழ்கி இறந்துவிடும். பாலுக்குப் பதில் வினிகர் ஊற்றி வைத்தாலும் பழ ஈக்கள் கவரப்படும்.

 இதனிலும் விலை குறைந்த எளிய முறை கவர்ச்சிப்பொறி உள்ளது. இதன் பெயர் கருவாட்டுப்பொறி. பயன்படுத்திய குளிர்பான, தண்ணீர் பெட் பாட்டில்களில் ஏற்கனவே சொன்னபடி கீழிருந்து 10 சென்டி மீட்டர் உயரத்தில் பாட்டிலைச் சுற்றி 12-15 ஓட்டைகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். எப்போதும் விலை குறைவாகவே கிடைக்கும் நெத்திலி மீன் கருவாட்டை சிறிய துண்டுகளாக்கி உள்ளே போட்டு 5 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் ஊற்றி ஏக்கருக்கு சுமார் 10 இடங்களில் இந்த பாட்டிலை கட்டி தொங்கவிட வேண்டும். இந்தக் கருவாட்டின் நாற்றத்தால் கவரப்படும் பழ ஈக்க்கள் துளை வழியே உள்ளே சென்று தண்ணீரில் இறக்கை நனைந்து வெளியே பறக்க இயலாமல் மூழ்கி இறக்கும்.

 இந்தக் ‘கருவாட்டுப் பொறி’ மிகச் சிக்கனமான முறையில் பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கும் வழி. ஒரு பாட்டில் பொறிக்கு 1 ரூபாய் விலையுள்ள 1 கருவாடு போதுமானது. மிகமிக சிக்கனமான இந்த முறையின் மூலம் பழ ஈக்களை அழித்து இதன் இனப்பெருக்கத்தினைக் குறைத்து நம் பயிரை பழ ஈக்களின் பயங்கர தாக்குதலில் இருந்து மீட்டெடுக்கலாம். சின்ன ஈக்களும் அதன் புழுக்களும் நமக்குப் பெருத்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். சிக்கனமான இந்த கருவாட்டுப் பொறி ஒரு சிறந்த தீர்வு என்பதில் ஐயமில்லை.

                   

Exit mobile version