Skip to content

“குருவிகள்” பத்திரம்

”சின்னஞ்சிரிய  வண்ணப்பறவை   எண்ணத்தைச்   சொல்லுதம்மா..  அது  இன்னிசையோடு   தன்னை  மறந்து   சொன்னதைச்   சொல்லுதம்மா…”  என்ற  பாடலைக்   கேட்கும் போதெல்லாம்   நினைவின்   இடுக்கிலிருந்து    பட்டெனப்  பறக்கும்    ஒரு  சிட்டுக்குருவி.   மனிதர்களோடு  மனிதர்களாகக்   கலந்து  வாழ்ந்த   இந்தச்  சின்னஞ்சிறிய  உயிர்,  அழிவின்  விளிம்பில்    இருக்கிறது.  உயிர்  பன்மயத்தை  உயிர்ப்போடு  வைத்திருக்க   உயிர்சங்கிலி    எத்தனை  முக்கியமானது  என்பது  நமக்குத்  தெரியும்.  ஆனால்,மனிதனின்   ஒவ்வொரு   செயலும்  அந்தச்  சங்கிலியின்  கண்ணிகளைக்  காவு  வாங்கிக்கொண்டே   இருக்கிறது.   விளைவு   புவிவெப்பம்,  நோய்களின்   பெருக்கம்,  சூழல்கேடு,  ஆரோக்கியக்கேடு  என நமது   செயலுக்கான  பலன்   பலவழிகளில்    திரும்பத்  திரும்ப  வந்து  துவைத்தெடுக்கிறது.

கூரைகள்,  விடுகளின்   முற்றங்கள்,   இடுக்குகளில்  தனக்கான   கூடுகளைத்தனே   வடிவமைத்துக்கொண்டு  காலையில்,  ‘க்வீச்…க்வீச்…’   எனக்  குட்டிக்   குயிலாகத்  துயிலெழுப்பும்  சிட்டுக்  குருவிகளின்   சத்தம்  இன்றைக்குக்  கேட்பது  அரிதாகிவிட்டது.  கிராமங்களிலேயே   இந்தச்  சத்தம்  அரிதானபோது  நகரங்களில்    கேட்கவே   வேண்டாம்.   உயிர்பன்மயத்தில்  உடைந்துபோன   கண்ணிகளை    ஒட்டவைக்கும்   முயற்சியில்   உலகம்  ஈடுபட்டுக்   கொண்டிருக்கிறது.  அதன்  ஒரு  பகுதியாகச்  சிட்டுக்  குருவிகளின்  எண்னிக்கையை  அதிகரிப்பதற்காகப்   பல்வேறு  முயற்சிகள்  எடுக்கப்படுகின்றன.

சிட்டுக்குருவிகளைப்பற்றிய    விழிப்புணர்வு    ஏற்படுத்துவதற்காக  மார்ச்  20-ம்தேதி   உலகச்   சிட்டுகுருவிகள்   தினமாக  கொண்டாடப்படுகிறது.   2010-ம்  ஆண்டு  முதல்  இது   கொண்டாடப்பட்டு  வருகிறது.   இதன்  முக்கியதுவத்தை  உணர்த்தும்   விதமாக   டெல்லி  அரசு  இதை  மாநிலப்   பறவையாக  அறிவித்துள்ளது.

தென்னை  ஓலையின்   நார்   கிழித்து,  சின்னஞ்சிறிய  அலகால்  கூடுகளைப்  பின்னும்  அழகே    அலாதியானது.  சிட்டுக்குருவியில்   ஒருவகையான  தேன்சிட்டு  சோளம்,  கம்பு  ஆகிய  தானியப்பயிர்களின்    ஒற்றைத்  தட்டையில்   கூடுகட்டி  வசிக்கும்.  தானியங்கள்,  சிறிய  பூச்சியினங்கள்,  சில  தாவரங்களின்   பூக்கள் தான்   சிட்டுக்குருவிகளின்   உணவு.  சிட்டுகளின்  அழிவால்,   பயிர்களில்   மகரந்தச்சேர்க்கை    பாதிக்கப்பட்டு,  மகசூலும்   குறைந்து  வருகிறது  என்கிறார்கள்   அறிவியலாளர்கள்.

அடைக்கலக்குருவி,  ஊர்க்குருவி  எனப்  பல  பெயர்களில்  அழைக்கப்படும்  சிட்டுகுருவிகள்,  காகத்துக்கு  அடுத்து  மனிதர்களுடன்   நெருக்கமாக   வாழும்  பறவை.  செல்போன்   அலைக்கற்றை     கோபுரங்களிலிருந்து   வரும்   கதிர்வீச்சு,  குருவிகளின்   கருவைச்   சிதைக்கிறது  எனச்   சொல்லப்பட்டாலும்,  அது   இன்னமும்   அறிவியல்ரீதியாக   நிருபீக்கப்படவில்லை.   ஆனால்,செல்போன்   கோபுரங்கள்   வருவதற்கு   முன்பாகவே  குருவிகளை   விரட்டிவிட்டன    நம்முடைய   செயல்கள்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj