விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணியாகும். நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயத்திற்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்று கூறுகிறார்கள். மேலும், அதிகமாக நீரைப் பயன்படுத்துவதைவிட அளவாக பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடியும் என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்த சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் முழுமைக்கும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கவும், இதர விவசாயிகள் 75 சத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது.
அதாவது சிறு விவசாயி நன்செய் நிலமாயிருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விருப்பம் இருப்பின் அவருக்குச் சொந்தமாக இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
அதேபோல குறு விவசாயி நன்செய் நிலமாக இருந்தால் ஒன்றேகால் ஏக்கர் வரைக்கும், புன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வரைக்கும் எந்த பயிராக இருந்தாலும், என்ன இடைவெளியாய் இருந்தாலும் விரும்பினால் இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளைக் கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேசன்கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும். சிறு, குறு விவசாயிகள் தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும்.
ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தின் பொறியாளர், விவசாயின் நிலத்தை ஆய்வு செய்து சொட்டு நீர் பாசன அமைப்பை அமைக்கும் முன் ஆய்வு செய்வார். பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். அதற்கு பின் விவசாயின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும்.
சொட்டுநீர் பாசனம் அமைத்தல்
விவசாயி தனது செலவில் பூமிக்கு அடியில் பதிக்க வேண்டிய மெயின், சப்மெயின் குழாய்களுக்கு ஒன்றரை அடி ஆழ வாய்க்கால் எடுக்க வேண்டும். இதற்கு பின் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனம் பாசன கருவிகளை அமைக்கும்.
நிறுவனம் சொட்டு நீர் பாசன அமைப்பை அமைத்து, அதன் செயல்பாட்டை ஆய்வு செய்த பின் நிறுவனத்திற்கு விவசாயின் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் சொட்டு நீர் பாசன அமைப்பை அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்யும்.
திரு.மதுபாலன்