Site icon Vivasayam | விவசாயம்

தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!

மருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது.இந்த தேனீ வளர்ப்பில் சில தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், அதிக லாபம் பெற முடியும்.விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு ஆகியன முக்கிய பொருட்களாகும்.

தேனீ வளர்ப்புக்கு குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும், குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில் தேன், மெழுகைத் தயாரிக்கலாம், தேனீ வளர்ப்பு வேறு எந்த விவசாயச் செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது. சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும். தேனீ வளர்ப்பு தனி நபராலோ அல்லது குழுக்களாகவோ தொடங்கப்படலாம். தேனீக்களில் மலைத் தேனீ, கொம்புத் தேனீ, அடுக்குத் தேனீ, கொசுத் தேனீ ஆகியவை உள்ளன.

தேனீக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள வாசனையை அறியும் தன்மை உடையவை ஆகும். நீலம், பச்சை, செந்நீலம் ஆகிய வண்ணங்களை தேனீக்களுக்கு அதிகம் பிடிக்கும். தேனீக்களின் மொழி நடன மொழியாகும். பயிர்களின் மகசூலை அதிகரிப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாம் பயிர் செய்யும் மூன்றில் ஒரு பகுதி அயல் தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை தாவரங்களாகும். தேனீக்கள் மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் உதவியாக உள்ளன.

கம்பு, சூரியகாந்தி, ஆமணக்கு, வெங்காயம், கேரட், பப்பாளி போன்ற பயிர்களில் தேனீக்கள் மூலமே மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது.
ஒரு தேனீ பெட்டியில் ஆண்டுக்கு 10 கிலோ தேன் கிடைக்கும். சுமார் 15 பெட்டிகளில் 150 கிலோ தேனை உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ தேனின் விலை ரூ. 300 வரை விலைபோகிறது. தேனை பாட்டில்களில் அடைத்து பெரிய நிறுவனங்களுக்கு விற்கலாம்.

தேனீ வளர்ப்பின் மூலம் தேன், மெழுகு ஏற்றுமதி தரம் வாய்ந்த அரக்கூழ், தேன் பிசின் மற்றும் மகரந்தம் போன்றவை கிடைக்கின்றன.உடல் வளர்ச்சிக்குச் தேவையான அமினோஅமிலம், விட்டமின் பி2, பி6, சி மற்றும் கே போன்ற சத்துகள் தேனில் உள்ளன. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்தாக நாட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. நம்நாட்டில் உள்ளது மிக குறைந்த அளவுள்ள தேன் உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பயிர்களில் தேனீக்கள் மூலம் மகசூலையும் அதிகப்படுத்த முடியும்.

தேனீ வளர்ப்பை பொருளாதார ரீதியில் செய்ய தேனீ பெட்டி, தேனீ பெட்டி தாங்கி, தேனீ முகத்திரை, கை உரை, பாதுகாப்பு உடை, புகைப்பான், தேன் எடுக்கும் கருவி ஆகியவை அவசியமானதாகும். தேனீ பெட்டிகள் செய்வதற்கு புன்னை மரம் ஏற்றது. ஓவ்வொரு தேன் கூட்டிலும் இரண்டு அறைகள் உள்ளன. கீழே உள்ள அறையை புழு அறை என்றும் மேலே உள்ளதை தேன் அறை என்றும் அழைப்பார்கள்.
இரண்டு அறைகள் உள்ள சட்டத்தின் அளவு வேறுபடும். ஓவ்வொரு பெட்டிக்கும் இடைவெளி சுமார் 6 அடிக்கு மேல் இருக்க வேண்டும்.

பூக்கள் நிறைந்த பகுதிகளில் ஒரே இடத்தில் 30 பெட்டிகள் வரை வைக்கலாம். பெட்டிகள் செங்குத்தாக நடப்பட்ட 3 அடி உயர கால்களின் மேல் கயிற்றால் கட்டப்பட வேண்டும். அவ்வாறு நடப்பட்ட கால்களைச் சுற்றி தண்ணீர் தேக்கியும் அல்லது எறும்புப் பொடி, வேப்பெண்ணெய், கிரீஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி தேனீக்களின் எதிரிகளான எறும்பு, கறையான் போன்றவற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். தேனீ வளர்ப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள உங்கள் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நடத்தப்படும் தேனீ வளர்ப்பு பயிற்சிகளில் கலந்து கொள்ளலாம்.

-மு.ஜெயராஜ்.

Exit mobile version