Skip to content

வாழை வலுவாக இலைவழி நுண்ணூட்டம்

முக்கனிகளில் ஒன்றான வாழையானது தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யும் பழப் பயிர்களில் மிக முக்கியமானது. உரங்களை சரியான தருணத்தில் அளித்த போதிலும் வாழையில் எதிர்பார்த்த தரம் மற்றும் மகசூல் பெற முடியாமல் பல விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வாழைக்கு தேவையான அளவுக்கு நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக் காததே இதற்கு காரணம்.

நுண்ணூட்டங்களான மக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் போரான் போன்றவை வாழையின் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. தண்டுகள் மெலிந்து காணப்படுதல், நுனி இலைகள் வெளுத்து காணப்படுதல், காய்கள் குட்டையாகவும் வளைந்தும் ஒல்லியாகவும் உருவாகுதல், பூ மற்றும் இலைகள் உருவாவது தாமதமாதல், பழங்கள் திரட்சி அடையாமல் காணப்படுதல் போன்றவை இத்தகைய நுண்ணூட்டப் பற்றாக்குறையால் பயிரில் ஏற்படும் அறிகுறிகளாகும்.

இத்தகைய குறைபாடுகள் பொதுவாக நான்கு மாதங்களுக்கு மேல்தான் பயிர்களில் தென்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் நுண்ணூட்டங்களை மண் மூலம் பயிருக்கு வழங்குவதை விட இலையில் தெளிப்பதன் மூலம் பயிர்கள் விரைவாக நுண்ணூட்டங்களை எடுத்துக் கொள்கின்றன.

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமானது இத்தகைய நுண்ணூட்டங்கள் ஒன்றாக கிடைக்கும்வகையில் வாழைக்கென சிறப்பு நுண்ணூட்ட கலவையினை கண்டுபிடித்துள்ளது. இந்தக் கலவையில் 50 கிராம் எடுத்துக்கொண்டு 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு ஒட்டும் திரவம் மற்றும் 2 எலுமிச்சை பழத்தின் சாறுகளை சேர்க்க வேண்டும்.

இந்தக் கலவையை வாழையின் இலைகளில் தெளிக்க வேண்டும். 5-வது மாதம் தொடங்கி 10- வது மாதம் வரை மாதம் ஒருமுறை இதனை தெளிக்கலாம். இதனால் நுண்ணூட்டக் குறைபாடுகள் விரைவில் களையப்படுவதுடன் அதிக எடை கொண்ட தார்கள் உற்பத்தியாகி அறுவடைக்கு கிடைக்கும். மேலும், எல்லா மரங்களிலும் ஒரே நேரத்தில் தார்களை அறுவடை செய்ய முடியும். இத்தகைய நுண்ணூட்டக் கலவையினை பயன்படுத்துவதன் மூலம் தரமான வாழைத் தார்கள் கிடைக்கின்றன.

தொடர்புக்கு: 98653 66075

1 thought on “வாழை வலுவாக இலைவழி நுண்ணூட்டம்”

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj