Skip to content

தக்கைப்பூண்டின் மகத்துவம்

நிலவளத்தை காக்க விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்ய வேண்டும் என, மதுரையின் சாதனை விவசாயி சோலைமலை தெரிவித்தார். விவசாய சாகுபடியில் நிலவளமே இன்றியமையாதது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால், நிலவளம் குறைந்து போனது.

தக்கைபூண்டு, சணப்பு, கொழிஞ்சி போன்றவை பயிரிட்டு, மடக்கி உழுதால், நிலவளம் மேம்பட்டு, மற்ற பயிர்கள் நல்ல மகசூலை அளிக்கும் என்கிறார், மதுரை அண்டமான் விவசாயி சோலைமலை. “”தக்கை பூண்டு இயற்கையான பசுந்தாள் உரம். மேலும் வேப்பஇலை, எருக்கஞ்செடியையும் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை வேறு இடங்களில் இருந்து சேகரிப்பது சிரமம்.

அதற்கு பதிலாக தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்து, அதேநிலத்திற்கு உரமாக மாற்றலாம். தக்கை பூண்டு விதை கிலோ ரூ.30க்கு கிடைக்கும். இதற்கு ரூ.15 மானியம் உண்டு. இதனை நிலத்தில் பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும். அதன்பின், நெல், பயறு வகைகள், கடலை என எதனை சாகுபடி செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். எனது நிலத்தில் தற்போது 5 ஏக்கரில் தக்கை பூண்டு சாகுபடி செய்துள்ளேன்.

கிடைக்கும் கொஞ்ச நீரை பயன்படுத்தியதில் செழித்து வளர்ந்துள்ளது. இதுபோன்ற இயற்கை உரத்தையும் பயன்படுத்தியே எக்டேருக்கு 20ஆயிரத்து 680 கிலோ நெல் கிடைத்து சாதனை விவசாயியாக மாறினேன். இதற்காக ஜனாதிபதி, முதல்வர் விருதுகள் எனக்கு கிடைத்தன. இவ்வாறு அவர் கூறினார்.

விவசாய துணைஇயக்குனர் கனகராஜ் கூறுகையில், “”ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் அந்த நேரத்தில் பயிருக்கு சத்து கிடைக்குமே தவிர, மண்வளம் அதிகரிக்காது. ஆனால் தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்வதால் கார்பன், நைட்ரஜன் விகிதாச்சாரம் அதிகரித்து, மண்வளம் காக்கப்படும். கொழிஞ்சி செடியை தொடர்ந்து 3 ஆண்டுக்கு சாகுபடி செய்தால், பின் அது தானாகவே நிலத்தில் வளர்ந்து நிலவளத்தை காக்கும்” என்றார். தொடர்புக்கு: 93441 31977 ஜி.மனோகரன், மதுரை.

நன்றி: தினமலர்

1 thought on “தக்கைப்பூண்டின் மகத்துவம்”

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj