இரத்தக்கழிச்சல் இளங்கன்றுகளைத் தாக்கும் முக்கியமான ஒரு செல் ஒட்டுண்ணி நோயாகும்.
நோய்க்காரணி : இந்நோய் பத்திற்கும் மேற்பட்ட எய்மீரியா என்ற ஒரு செல் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. அவற்றில் எய்மீரியா சுர்ணை எ.போவிஸ் மற்றும் எ.சிலிண்ட்ரிகா போன்ற ஒட்டுண்ணி வகைகளின் தாக்கம் அதிகமாக கன்றுகளில் காணப்படும்.
நோய்பரவும் விதம் : இரத்தக்கழிச்சலால் பாதிக்கப்பட்ட கன்றின் சாணத்தில் எய்மீரியா ஒட்டுண்ணிகளின் உறை முட்டைகள் வெளியேற்றப்படுகிறது. இந்த உறை முட்டைகள் சாதகமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில் 2 முதல் 10 நாட்களுக்குள் நோயுண்டாக்கும் நிலையை அடைந்து தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டி மற்றும் கொட்டகையின் பல இடங்களுக்கு பரவி விடும். ஆரோக்கியமான கன்றுகள் இந்த நோயுண்டாக்கும் நிலையை தீவனம் மற்றும் தண்ணீர் மூலமாக உட்கொள்ளும் போது நோய் தாக்கம் ஏற்படுகிறது.
நோய் கண்டறியும் முறை : நோயின் முக்கிய அறிகுறிகளான குழி விழுந்த கண்கள், இரத்த சோகை, இரத்தம் சளி கலந்த தண்ணீர் போன்ற பீச்சியடிக்கும் வயிற்றுப்போக்கு காணப்படுவது, சாணப் பரிசோதனை செய்து எய்மீரியா உறை குட்டை உள்ளதா என கண்டறிவது.
நோயைத்தடுக்கும் முறை : தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீருடன் சாணம் கலக்காமல் இருக்க தொட்டியை சற்று உயரத்தில் வைக்க வேண்டும். சிறிய கொட்டகைகளில் அதிக கன்றுகளை அடைக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட கன்றுகளை தனியாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும். சாணத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். எய்மீரியா உறை முட்டைகளை அழிக்கும் கிருமிநாசினி (பினாயில் மற்றும் 5 விழுக்காடு பார்மலின்) கொண்டு கழுவி விட வேண்டும்.
(தகவல்: முனைவர் நா.ராணி, முனைவர் கு.பொன்னுதுரை, முனைவர் க.ரம்பா, முனைவர் ர.வேலுசாமி கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்).