Skip to content

காடை வளர்ப்பு : பகுதி -1

நம்பிக்கை தரும் நாமக்கல் காடை

லட்சக் கணக்கில் செலவழிச்சு கோழிப் பண்ணை அமைக்குறதுங்கறது.. எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வர்ற விஷயமில்ல. ஆனால், அப்படி எதையாச்சும் வளர்த்து வருமானம் பார்க்கணும்னு நினைச்சா, அவங்களுக்கு ஏத்தத் தொழில்.. காடை வளர்ப்புதாங்க. பெருசா இடவசதி தேவயில்ல. ஒரு கோழி வளக்கற இடத்துல அஞ்சு காடையை வளர்க்கலாம். அதேபோல முதலீடும் அதிகமா தேவைப்படாது. ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் வச்சிருக்குற சின்ன விவசாயிகளுக்கு ரொம்பவே கைகொடுக்கக்கூடியது.. காடை வளர்ப்பு. என்கிறார் நாமக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுபவ விவசாயி முத்துசாமி.

30 நாள்ல வருமானம் !

”ஏற்கெனவே, நாட்டுக் கோழி பண்ணை வச்சு இருந்தேன். கோழியில நோய், நொடி வந்து அடிக்கடி செத்துப்போகும். அதனால, பராமரிப்புலயே பாதி நேரம் போயிடும். அப்பத்தான் நாமக்கல், கால்நடைக் கல்லூரியில காடை வளர்ப்பைப் பற்றி பயிற்சி கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு, அவங்ககிட்டயே குஞ்சுகள வாங்கிகிட்டு வந்து, என்கிட்ட இருந்த ஒரு கொட்டகையில விட்டு வளர்த்தேன். குறைஞ்ச நாள்ல அதிக எடை வர்ற ‘நாமக்கல் 1’ ரக காடையைத்தான் நான் வளர்க்குறேன். கோழி மாதிரி, இதுகளை நோய், நொடி தாக்குறதில்ல. அதனால் ஊசி, மருந்து போடுற வேலையும் இல்ல. தினமும் காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணி வச்சு பார்த்துக்கிட்டா போதும். அந்த வேலையை வீட்டில் இருப்பவர்களே  செய்துகொள்ளலாம். கோழி வளர்த்தால் வருமானம் பார்க்க 90 நாளாகும். ஆனால், இந்தக் காடையில 30 நாள்ல வருமானம் பார்த்திடலாம். இதெல்லாத்தையும் கணக்குப் பார்த்துட்டு கோழிப் பண்ணையை ஓரங்கட்டிட்டு, இப்ப நாலு கொட்டகையிலயும் காடையை வளர்க்க ஆரம்பிச்சுட்டேன்.

மாதம் 10 ஆயிரம்!

எங்கிட்ட மொத்தம் 2,000 குஞ்சுகள் இருக்குது. அதுல பொடிக் குஞ்சு, 10 நாள் குஞ்சு, 20 நாள் குஞ்சு, 30 நாள் குஞ்சுனு நாலா பிரிச்சு வளர்க்கிறேன்.

இதை சுழற்சி முறையில செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒரு நாள் வயசுள்ள குஞ்சுகள நாமக்கல் காலேஜுல வாங்கிகிட்டு வந்து முப்பது நாளைக்கு வளர்த்து விக்கிறேன். ஒரு காடைக்கான உற்பத்தி செலவு 15 ரூபாய் வரைக்கும் ஆகுது அதை 25 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரைக்கும் விக்கிறேன். விற்பனையில எனக்கு எந்த சிரமமும் இல்ல. அக்கம்பக்கத்துல இருக்கறவங்க, கறிகடைக்காரங்க, நைட் ஹோட்டல்கள்னு தேடி வந்து வாங்கிகிட்டுப் போறாங்க. மாசம் ஆயிரம் குஞ்சுகள வித்தாலும், செலவு போக 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்” என்கிறார்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj