ஆலமரம்
வணிகர்கள் கூடுமிடம்
விஞ்ஞானப் பெயர் : Ficus benghalensis (Moraceae)
சமஸ்கிருதம் : நியக்ரோதம், வடம், சிரிக்ஷம் ஸ்கந்தஜம்
ஹிந்தி : பர்
ஆங்கிலம் : Banyan
இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் காலத்தில், இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாரிக்கொள்வர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் பேசும்போது ஆலமரத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் எப்படியும் வந்துவிடுமாம். வர்த்தகர் கூட்டத்தைக் குறிக்கும் ‘பனியாவே’ – ஆங்கிலத்தில் மரத்தின் பெயரானது. இதுவே ‘பானியன் ட்ரீ’ என்று பெயர் வந்த வரலாறு.
கருமேகங்களைச் சுண்டியிழுக்கும் மழைக் கவர்ச்சி மரங்களில் முதலிடம் ஆலமரத்திற்குத்தான். இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்களில் இதை அடர்ந்த காடாகக் காணலாம். கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் நிறைய உண்டு. உலகிலேயே பெரிய ஆலமரம் கல்கத்தா தாவரவியல் பூங்காவில் உள்ளது (ஹீக்ளி நதியில் கட்டப்பட்டுள்ள ஹெளரா இரும்புப் பாலத்தைக் கடந்து சென்று பார்க்கலாம்.) 1782-இல் ஒரு ஈச்சமரத்தில் முளைத்து வளர்ந்த இந்த ஆலமரம் ஒன்றரை ஏக்கர் பரப்பிற்கு விழுதுகளை இறக்கிக் கிழக்கு மேற்காக சுமார் 400 அடியும் தெற்கு வடக்கில் சுமார் 300 அடியும் பரவி இதன் சுற்றளவு சுமார் 2000 அடி என்று சொல்லுகிறார்கள்.
ஆலமரம் விழுது இறக்கி நிற்கும் காட்சி பற்றி பிளினி (கி.பி. 70) இவ்வாறு எழுதுகிறான். பண்டைய இந்திய வரலாற்றுக்குப் பிளினியின் குறிப்பு மிகவும் ஆதாரமானது. “இந்தியாவில் உள்ள ஒரு மரத்திற்கு அது தனக்குத்தானே நடவு செய்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. பூமியின் மீது தன் வலுவான கரங்களை நீட்டிப் பரப்பிக்கொண்டு குடைவிரிக்கிறது. ஓராண்டுக்குள் வேர்களை ஊன்றிக்கொண்டு (விழுது இறங்குவது) புதிய வேரைக் கிளையிலிருந்து மீண்டும் மீண்டும் இறக்கிய வண்ணம் வானில் படர்கிறது.”
கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குரிய சுரபாலர் விருக்ஷ ஆயுர்வேத நூலில் ஒரு நுட்பமான வைதீகக் குறிப்பு உள்ளது. ’சாத்திர முறைப்படி யார் இரண்டு ஆலமரங்களை நடுகின்றாரோ அவருக்குக் கைலாயத்தில் ஒரு இடம். கூடவே கந்தர்வக்கன்னியரின் கவனிப்பும் கிடைக்கும்.’ (பாடல் 13) ‘வீட்டின் கிழக்கில் ஆலமரம் நட்டால் வேண்டிய வரம் கிட்டும்’ (பாடல் 24). காலையில் கிழக்கு வெயில் சுட்டெரிக்கும். ஆகவே நெடிய நிழல் வீட்டில் விழ கிழக்கே ஆலமரம். சரி. கந்தர்வகன்னியரின் கவனிப்பு எப்படி வரும்? அது சொர்க்கத்திற்குப் போகும் முன்பே கிடைக்குமா?
ஆலம்பாலில் வயகரா உள்ளதா என்று ஆயிரம் ஆண்டுக்கு முன்பே வேதியர்களும், முனிவர்களும் ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆலமரத்தைப் போல் ஆண்மையை வளர்க்கவும், சாகாமல் வாழ்வதற்கும் ஆலின் பல பாகங்களைச் சோதித்துள்ளனர். ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சம்பழம் அளவில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாட்களில் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகும். இது மன்மதராசா, மட்டுமல்ல; பாலியல் நோய்களுக்கும் – அதாவது மேகப்புண், மதுமேகம் – நிவாரணி, வாய்ப்புண், கரப்பான், சிரங்கு போன்ற நோய்களுக்குத் தாத்தாகாலத்து நாட்டு மருத்துவர்கள் ஆலம்பாலில் விழுதுக் கொழுந்தைச் சேர்த்துக் களிம்பு தருவார்கள். அகத்தியர் குணப்பாடத்தைப் புரட்டினால் இதன் மன்மத குணம் புரியும். இயற்கை விவசாயிகள் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ஆலம் விழுது நுனியில் அசட்டோ பாக்டர் என்ற நுண்ணுயிரி உள்ளது. அதையும் அரைத்துப் பஞ்சகவ்யக் கரைசலில் கலந்து சோதனை செய்யுங்கள். நிறைய மகசூல் பெறுங்கள்.
ஆலம்பழங்களை அரைத்துப் பஞ்சகவ்யாவில் சேர்த்தால் உயிர் ஊட்டம் பெருகும். ஆலந்தழைகள் கால்நடை உணவும் கூட. ஆடுகளுக்குத் தரலாம். இவ்வளவு பயன் உள்ள ஆலமரம் பல கோவில்களில் தல விருட்சமாகவும் உள்ளது. திருஅன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருமெய்யம், திருவல்லிபுத்தூர் போன்ற தலங்களில் ஆலமரம் தல விருட்சம்.
”சொல்லுகின்ற மேகத்தைத்துட்ட அகக்கடுப்பைக்
கொல்லுகின்ற நீரழிவைக் கொல்லுங்காண்
நல்லாலின் பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலைகளுமென விள்” – அகத்தியர் குணபாடம்
ஆலமரத்தின் எல்லா பாகங்களும் அருமருந்து. நீரழிவு நோய்க்கு ஆலம்பட்சைச்சாறு – ஆலம்பட்டைக் கஷாயம் மருந்து. ஆலம்பழ ரசத்தில் கற்பூரத்தூள் கலந்து கண்நோய்க்கு (சுக்ரரோகம்) மருந்தாக சக்ரதத்தா பரிந்துரைத்துள்ளார். ஆலம் விழுதின் நுனி வாந்தியை நிறுத்தும். ஆலைப்போல், வேலைப்போல் ஆலம் விழுதினைப்போல் ஒப்பற்ற பல்லுக்கும் குச்சிக்கும் வேறுண்டோ. பல் உறுதிக்கு ஆலம் விழுதில் உள்ள மருத்துவப் பொருள் காரணமாகும். நிழல் தரும் இந்த நெடிய மரம் பொது இடங்களிலும் சாலைகளிலும் வளர்ப்பது அவசியம்.
ஆலமரம் எங்குமே வளரும். கிராமங்களில் பொது இடங்கள், சாலைகள், இடுகாடு, சுடுகாடுகளில் கிராமந்தோறும் சோலைகள் அமைக்க ஆல் ஆவசியம். ஆலமரங்கள் மிகுந்துள்ள ஊர்களில் மழைப்பொழிவு இருக்கும். வேர் வழியே கூடுதல் நீரை நிலத்தடி ஊற்றுக்குள் செலுத்தும். இலைகளில் சேமித்த நீர் ஆவியாகி மழைக்கவர்ச்சி செய்யும். மழைக்காலம் முடிந்ததும் 5,6 அடி நீளமுள்ள போத்துகள் நடலாம் அல்லது ஆலம்பழங்களைப் பொறுக்கி வந்து அதன் சதையை நீக்கிவிட்டு உலத்திப் பின் நாற்றுப்பைகளில் போட்டு கன்று எழுப்பலாம்.
மனித வாழ்வின் நற்பயனுக்கு
ஆலைப்போல் வேறு மரம் உண்டோ?