இந்தியப் பொருளாதாரத்தின் ஆன்மா கிராமங்கள் என கருதினார் தேசப்பிதா காந்தியடிகள். கிராமங்கள் வேளாண்மையின் ஆன்மாவாக கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் மரணம் என்பதுதான் செய்தியாக இருக்கிறது அதனை யாரும் சக மனிதனின் பிரச்சனையாகவோ, தினம்தோறும் மூன்று வேளையும் நமக்கு உணவழிக்கும் குடியானவனின் பிரச்சனையாகவோ இந்த சமுதாயம் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் இன்று முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக, பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் யாவும் விவசாயக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான். ஆளுங்கட்சியோ ஆட்சியை ஐந்தாண்டு காலம் கடத்துவதற்கும், எதிரிக்கட்சிகள், உதிரிக்கட்சிகள் அனைத்தும் அடுத்த ஐந்தாண்டுக்கு ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் பிரச்சனைகளுக்குத் தான் போராடிக்கொண்டிருக்கிறோம் என்பார்கள் என்பது தான் எதார்த்த நிலையாக இருக்கின்றது.
இந்திய மக்கள் தொகையில் சராசரியாக 48.5 சதவீதம் மக்கள் வேளான்மைத்துறையை வேலைவாய்ப்புக்காக சார்ந்து இருக்கிறார்கள், இவர்களனைவரும் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்கள் கிராமங்களில் வசித்துவருகின்றர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 18 முதல் 25 சதவீதம் வரை கடந்த பத்தாண்டுகளில் வேளாண்மைத்துறையின் பங்களிப்பு உள்ளது (பால் மற்றும் மீன் போன்றவைகளுக் வேளாண்மைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்). தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் வேளாண்மையை தொழிலாக செய்கின்றனர். 2012 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி மாநில மொத்த நாட்டு உற்பத்தியில் 6.2 சதவீதம் மட்டுமே விவசாயத்துறையின் பங்களிப்பு ஆகும், இவ்வாறான சூழ்நிலையில் தான் தமிழகம் இருக்கிறது.
இவ்வாறு இருக்கையில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு இவ்வாறு சொல்கிறது” உழவர் நலனை மையமாகக் கொண்டு பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புரட்சிகர உத்திகளை புகுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயத்தொழிலை, வணிக கோணத்திலும் இலாபகரமான, தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது” இதுதான் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி 14 வரை 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் சோறுடைத்த சோழ நாட்டுப்பகுதியில் மட்டும் தங்கள் உயிரை இந்த நாட்டிற்கு தந்திருக்கின்றார்கள். இதற்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள் யாரெனத்தெரியவில்லை. இப்போது அரசு எடுத்திருக்கும் ஒரே நடவடிக்கை நிலவரிகளை ரத்து செய்வது, கடன்களுக்கான சலுகைகளை நீட்டிப்பது, வறட்சி மாநிலமாக அறிவித்தது ஆகியவற்றை தற்போது செய்திருக்கின்றார்கள். இதேபோன்று வறட்சி பாதித்த மாநிலமாக பலமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்ததை ஏதோ எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அரசு பணிந்த மாதிரி எதிர்கட்சிகள் செயல்படுகின்றன. ஆனால் இந்தப் பிரச்சனையின் காரனங்கள் என்ன? அவற்றை அரசு எவ்வாறு அனுகவேண்டும், அதற்கான தீர்வுகளை நோக்கி யாரும் பயனித்ததாக தெரியவில்லை, ஊடகங்களின் முன் தோன்றும்போது மட்டும் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்ற வெற்று முழக்கங்கள் தான்.
இந்த விவசாயிகளின் மரணங்களின் பின் உள்ள சமூக பொருளாதார விளைவுகளைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை, அரசுக்கு உரியமுறையில் ஆலோசனை சொல்லவும் ஆளில்லை என்றே தான் என் பார்வையில் கருதுகிறேன். விவசாயம் இலாபகரமான தொழிலாக இல்லாமலும், இளைஞர்கள் இத்தொழில் ஈடுபடாமலும் இதன் விளைவால் நகரங்களை நோக்கி நகர்வது அதன் விளைவால் நகரமயமாக்கல், சமூக தீமைகள் நடைபெறுவதையும் சிந்திக்கவில்லை என்றேதான் கருதுகிறேன். கடந்த ஆண்டு சுவாதி கொலைவழக்கு மிகவும் விரிவாக அலசி ஆராயப்பட்டது, அப்போது பேசப்பட்ட செய்திகள், நுகர்வுக்கலாச்சாரம், சினிமா, மது, போன்ற காரணங்கள்தான் பேசப்பட்டன. இடப்பெயர்வு அதன் சமூக விளைவுகளைப் பற்றி சிந்திக்கப்படவில்லை. ஏன் அந்த இளைஞன் சென்னைக்கு வரவேண்டும் என்பதைப்பற்றி விவாதங்களே எழவில்லை. இதன் பின்னால் இருப்பது விவசாயத் தொழில் இலாபகரமாக இல்லை, இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இல்லை, இது தான் காரணம். தமிழ்நாட்டின் எந்தக் கிராமத்தை நீங்கள் எடுத்துக்கொண்டாலும் அங்கு 25 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவில்லை. அதற்கு கல்வி வளர்ச்சி காரணமாக இருந்தாலும், கல்வி கற்ற இளைஞன் வேலைவாய்ப்பு இல்லாமல் நகர்ப்புறத்திற்கு வந்து செய்யக்கூடிய பணி, பெரும்பாலும் உடலுழைப்பு சார்ந்ததாகத்தான் இருக்கிறது. இதே உடலுழைப்பை அவன் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு விருப்பம் இல்லை, இருந்தாலும் பெற்றோர் அனுமதிப்பதில்லை. விவசாயம் சார்ந்த தொழில்களான, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற பணிகளில் கூட ஈடுபடுவதில்லை.
விவசாயிகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அரசு விவசாயக்கூலிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, மத்திய அரசு செயல்படுத்தி வரும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் தரும் 100 நாள் தான் அவர்களுக்கு வேலை மற்றபடி வேலைகள் கிடையாது, அவர்களுக்கு அரசின் எந்த ஒரு நலத்திட்டமோ கிடைப்பதில்லை. நிலமுடையவர்களுக்கு பயிர் இழப்பீட்டு மானியம், நிலவரி ரத்து போன்ற பயன்கள் விவசாய கூலிகளுக்கு கிடைப்பதில்லை.
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் 70வது தேசிய மாதிரிப் புள்ளி விவரம் ( NSSO) அறிக்கையின் படி நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து இது வரைக்கும் 41 சதவீத மக்களுக்கே தொழில் நுட்ப அறிவைக் கொண்டு சேர்க்க அரசுக்கு முடிந்திருக்கிறது. ஆனால் வீட்டுக்கு 4 செல்லிடப்பேசியை கொண்டு செல்ல வெறும் 10 ஆண்டுகள் தான் அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அரசுகளுக்கு வேளாண்மை மீதுள்ள அக்கறையை. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு, இதைத்தான் காரணமாக சொல்லி வருகிறது, வேளாண் ஆராய்ச்சி, தொழில் நுட்ப அறிவுக்குறைவு, பாசனப்பிரச்சனைகள், நீராதாரம், பருவமழை, கடன் முறையாக கிடைக்காமை, எந்திரமயமாகுதல் குறைவு, சந்தைப்படுத்துதல், பதப்படுத்தும் முறைச் சிக்கல்கள், துண்டாடப்பட்ட நிலம், மண்ணின் தன்மை இவைகளை பட்டியலிட்டு வருகிறதே தவிர அதற்கான தீர்வுகளைச் சொல்லவில்லை. அரசுகள் வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கும் நிதியின் அளவு குறைவு. செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.
மக்கள் தொகையில் இவ்வளவு பேர் வேளான்மையைச் சார்ந்திருந்தும், இவ்வளவு பெரிய வாக்குவங்கி இருந்தும் ஏன் விவசாயிகளின் பிரச்சனை பொதுப் பிரச்சனையாக ஒரு சமூக பிரச்சனையாக மாறவில்லை என்றால், சாதி , வட்டாரம், அரசியல் கட்சிகள் சார்ந்த விவசாய சங்கங்கள் ஆகியவைதான் காரணம். இவர்களனைவரும் ஒரே அணியில் இல்லை.
நீங்கள் அடுத்த கேள்வியை கேக்கலாம் இந்தியா ஆண்டுதோறும் 250 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறது. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் இது சாதனையல்லவா என்று. உற்பத்தி மட்டும் கூடிக்கொண்டே போனால் போதுமா ? அதன் பலன்களை யார் அனுபவிப்பது? உலக பட்டினிக் குறியீட்டில் மொத்தம் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 118 நாடுகளில் 97வது இடத்தில் இந்தியா உள்ளது. 250 மில்லியன் டன் உணவு உற்பத்தியை வைத்து எதனைச் சாதித்தோம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்தும் உணவுக்காக உற்பத்தி என்பதனை மாற்றி, இலாபத்திற்காக உற்பத்தி என்பதனை நாம் எப்போது அடையப்போகிறோம்.
இந்தியாவையும், தமிழ் நாட்டையும் பொறுத்தவரை அதிக அளவில் நெல்லும், கோதுமையும், தான் உற்பத்திக்கு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. காரணம் இவை இரண்டும் தான் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் என்பதற்காக. செய்திகளில் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் விவசாயி தக்காளி விலையில்லை என்பதற்காக அதை பறிக்காமல் விட்டுவிடுவதும், பறித்தபின் வீணாகக் கொட்டுவதையும் அடிக்கடி காணலாம், இதற்கு யார் காரனம் அரசுகள் தான். இங்கே வேளாண் சந்தைகள் முறையாக ஒருங்கினைக்கப்படுவதுமில்லை. ஒரு பொருளின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள உண்மை நிலவரத்தினை வேளாண்துறை விவசாயிக்கு தெரிவிப்பது கிடையாது. உதாரணமாக ஒரு கிராமத்தில் ஒரு சாகுபடியில் மக்காச்சோளம் அதிக விலை கிடைத்தது என்றால் பக்கத்திலிருக்கும் கிராமத்தினரும் மக்காச்சோளத்தையே பயிரிடுவர் அதிக விலை கிடைக்கும் என்பதற்காக, ஆனால் சந்தை நிலவரமோ அதிக மக்காச்சோள வரத்து இருப்பதன் காரணமாக விலை குறைய நேரிடும், இது மாதிரி சந்தர்ப்பங்களில் வேளாண்துறை முறையாக விவசாயிகளுக்கு வழிகாட்டினால் ஓரளவு இலாபம் கிடைக்கும், மேலும் வேளாண் விலை பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு தொடர்பாக இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து கடனுதவியும் செய்வதன் மூலம், வேலைவாய்ப்பையும் மக்கள் இடம்பெயர்வதையும் தவிர்க்கலாம்.
விவசாயிகளின் பிரச்சனையை தற்காலிக தீர்வை நோக்கிய கண்ணோட்டத்திலே அரசுகள் அனுகுகின்றன. விவசாயிகளின் பிரச்சனையை களைவதற்கு 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள் வெற்றுத்தாள்களில் தூங்குகின்றன. நீண்ட காலத்திட்டங்களை அறிவிக்கின்றன ஆனால் செயல்படுத்தும்போது கானல் நீராகின்றது. இந்திய வேளாண்மை வேண்டுமானால் பருவமழையின் சூதாட்டமாக இருக்கலாம், விவசாயிகள் பிரச்சனை, வேளாண்மைப் பிரச்சனை ஆகியவை அரசுகளின் சூதாட்டம்தான் என்பதில் மாற்றுச்சிந்தனைக்கே இடமில்லை. என்பது தான் எனது நிலைப்பாடு. விவசாயம் என்பது தன்னிறைவு, அதிக உற்பத்தி என்ற நிலையிலிருந்து இலாபம் சார்ந்தது என மாற வேண்டும்.
ஐயாச்சாமி முருகன்,