தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி மனிதர்களை மட்டுமல்லாமல், கால்நடைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பச்சை பசேலென்ற இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து மாதங்களாக நாள் ஒன்றுக்கு ஐந்து மாடுகள் தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாமல் இறந்து போயுள்ளன. மோயர், மசினக்குடி, பலகோலா ஆகிய கிராமங்களில் மட்டும் கிட்டத்தட்ட 300 கால்நடைகள் மரணமடைந்துள்ளன.கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தன்னுடைய 60 மாடுகள், தீவனம் இல்லாமல் இறந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக்கிறார் மோயர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன். தற்போது வரை மேய்ச்சலுக்காக சென்ற அவரது ஐந்து மாடுகள், இன்னும் திரும்பவில்லையாம். எனவே நாளை சென்று அவை உயிரோடு இருக்கின்றனவா? என பார்க்க வேண்டும் என நொந்து போய் பேசுகிறார் நாராயணன்.
கடந்த வாரம் இதே கிராமத்தில் 20 ஆடுகள் இறந்து போயுள்ளன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர் கண்டுகொள்வதில்லை எனவும் பிணக் கூராய்வு கூட செய்வதில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பிணக் கூராய்வு செய்யும் கால்நடை மருத்துவருக்கு அளிக்க வேண்டிய கட்டணத்தை மாவட்ட நிர்வாகம் அளிப்பதில்லை என்பதால் மருத்துவர்கள் பிணக் கூராய்வு செய்ய மறுப்பு தெரிவிக்கின்றனராம். இதனால் இறந்து போகும் மாடுகளுக்கான பிணக்கூராய்வை, மாட்டின் உரிமையாளர்களே மேற்கொள்ள சொல்கிறார்களாம். ஆனால் அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் விவசாயிகள், இறந்த கால்நடைகளின் உடல்களை அடக்கம் செய்து விடுகிறார்களாம்.
”கால்நடைகள் எங்கள் வாழ்வாதாரம் மட்டுமல்ல. அவை எங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் போலத்தான். கடந்த ஆண்டு கால்நடை தீவனத்திற்காக மட்டும் சுமார் 8 லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால் என்னால் அவற்றை காப்பாற்றப்பட முடியவில்லை.” என வருத்தப்படுகிறார் நாராயணன்.
கடந்த 2000-ஆம் ஆண்டு இதே போன்ற வறட்சியை தமிழகம் சந்தித்தது. அப்போதும் இதே போல கால்நடைகள் மடிந்தன. ஆனால் இடையில் பெய்த கோடைக்கால மழையால், சில வாரங்களில் கால்நடைகள் இறப்பது தடுக்கப்பட்டது.
நீலகிரியில் உள்ள ஒரு கிராமத்தை பார்வையிட சென்றபோது, சுமார் ஒரு கி.மீ சுற்றளவிற்குள் 59 மாடுகளின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததாக, அப்பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் பாரதிதாசன் கூறுகிறார். “ஒரு கி.மீக்குள் 50 பசுக்கள் இறந்து கிடந்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இதே மாடுகளை புலிகள் அடித்துக் கொன்றிருந்தால், அது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாகியிருக்கும். தீவனம் கிடைக்காததால், பல மாடுகள் பிளாஸ்டிக்கை உணவாக உண்ணுகின்றன. இதுவும் அவை இறப்பதற்கு முக்கிய காரணம்.” என பாரதிதாசன் தெரிவித்தார்.
நன்றி: