காலநிலை மாறுதல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை இந்திய விவசாயம் சமாளித்து, எதிர்காலத்தில் காலநிலை மாறுதலுக்கு ஏற்ற விவசாயத்தில் இந்தியா சிறந்து விளங்கும் என சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசிய உணவு மற்றும் விவசாய அமைப்பிற்காக இந்திய பிரதிநிதி சியாம் கட்கா,” ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்தியாவில் விவசாய கட்டமைப்பு முன்னேறியுள்ளது என்பதுதான். மேலும் பல விவசாய கல்லூரிகளும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. தனியார் அமைப்புகள் கூட விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய ஆராய்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும், ஆராய்ச்சி செய்யும் திறமை இந்தியர்களுக்கு உண்டு. அதனால்தான் 1960-ஆம் ஆண்டிலிருந்து உணவு உற்பத்தியை ஐந்து மடங்காக அதிகரிக்க முடிந்திருக்கிறது.
கால நிலை மாறுபாட்டின் விளைவாக நிலவக்கூடிய தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாரு, மாற்றுப் பயிர்கள் மற்றும் மாற்று பயிர் முறைகளை எதிர்காலத்தில் இந்திய விவசாயிகள் பின்பற்றக் கூடும். எடுத்துக்காட்டுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மகராஷ்டிர மாநிலத்தில், அதிக தண்ணீர் தேவைப்படும் கரும்பு போன்ற பயிர்களை பயிரிடுவதற்கு பதிலாக, கங்கை நதியோர மாநிலமான பிகார் மற்றும் பிரம்மபுத்திரா நதியோர மாநிலமான அசாம் போன்றவற்றில் பயிரிட வேண்டும்.
பிகார், உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், அசாம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை தீட்டியுள்ளது.” என சியாம் கட்கா கூறியுள்ளார்.
உணவு மற்றும் விவசாயம் என்ற அமைப்பு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு கால நிலை மாறுபாட்டுக்கு ஏற்றவாறு விவசாய பயிர்களிலும், தொழில்நுட்பங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
நன்றி: