வரகு வைக்கோல்கள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்கிய பிறகு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். இதன் வைக்கோல் தண்ணீர் பட்டாலும் நீண்ட நாட்களுக்கு மக்காமல் இருக்கும். கிராமப்புறங்களில் பொருட்களைப் பானையில் சேமித்து வைப்பதற்காகக் கீழ் அடுக்கு நகராமல் இருப்பதற்காகப் பிரிமணை (பிரியாலை) செய்து வைப்பார். இது நெடுநாட்கள் வரை மக்காமல் இருக்கும்.
பழங்காலத்தில் கிராமப்புறங்களில் செங்கற்களை அடுக்கிக் கிணறு தோண்டும் போது வெளிப்புறமாக செங்கற்களைச் சுற்றி வரகு வைக்கோலைக் கயிறாகத் திரித்து வெளிப்புறம் இடைவெளி இல்லாமல் சுற்றி ஊற்று நீருடன் மணல் கசிவைத் தடுத்துக் கிணறு தோண்டுவார்கள். இந்த வைக்கோல் பல ஆண்டுகளுக்கு மக்காமல் இருந்து மண்ணரிப்பைத் தடுக்கும். களிமண்ணையும் வரகு வைக்கோலையும் கொண்டு தானியக் குதிர்கள் செய்வார்கள்.
வீட்டுக் கூரையாகச் சங்க காலத்தில் வரகு வைக்கோல்கள் வேயப்பட்டதை உணர முடிகிறது.
ஏனல் உழவர் வரகுமீ(து) இட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய புறஅணி வைப்பும் – 30: 22-25
- பாலைக் கௌதமனார் – பதிற்றுப்பத்து
தினை விதைக்க உழுது பயிர் செய்யும் குன்றவர், வரகு வைக்கோலால் வேயப்பட்ட கூரையின் மேல், மணமிக்க காட்டு மல்லிகை படர்ந்த மனைகளில்; மெல்லிய தினைமாவை (நுவணை) வரும் விருந்தினர்க்கு முறையாக அளித்துண்ணும்; புன்செய் நிலங்கள் சூழ்ந்து கிடக்கும் முல்லைநிலத்தைச் சேர்ந்திருக்கும் குறிஞ்சிப் பகுதியும்.