கடந்த ஆண்டு போதிய பருவ மழை இல்லாமல், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டது. போதிய உற்பத்தி இல்லாததால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு, இந்திய விவசாயத்திற்கு சிறந்த ஆண்டாக அமையும் என கிரிஸ்டல் கிராப் புரடொக்ஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அங்குர் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் ஆகியவை, இந்த ஆண்டு எப்போதும் போல பருவ மழைப் பொழிவு இருக்கும் என கணித்துள்ளன. இது துவண்டு போயிருக்கும் இந்த விவசாயத்துறைக்கு சாதகமான பதிலாக அமைந்துள்ளது. ஆனால் இந்த கணிப்புகள் குறித்தும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தும் அறிந்து கொள்ள சற்று பொறுத்திருக்க வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு பெய்யும் மழை குறித்து முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளைக் கொண்டு எந்த உறுதியான முடிவுகளையும் எடுக்க முடியாது. மழைப் பொழிவின் அளவு, அதனால் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள பலன் ஆகியவற்றை கொண்டுதான், பருவ மழை நமக்கு கை கொடுத்துள்ளதா என்பதை உறுதியாக கூற முடியும். இருப்பினும் இந்திய வானியல் ஆராய்ச்சி மையத்தின் இந்த அறிவிப்பு, விவசாயிகளுக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த கணிப்பின்படி சராசரி பருவ மழை பெய்தால் கூட, அது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக அவர்கள் சந்தித்துள்ள இழப்புகளை ஈடுகட்டவும் முடியும்.” என அங்குர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நன்றி:
http://www.krishijagran.com/news/2017/03/Positive-signal-for-the-farm-sector