தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்று பல்வேறு அரசாங்கங்கள் பெரும்முயற்சி எடுத்து பின் இதை ஒன்றிணைக்க ஆகும் செலவிற்கு நிதிகளை திரட்ட பெரும் பணி என்று பல்வேறு சிக்கல்கள் காரணமாக அரசாங்கங்கள் இதை கைவிட்டுவிட்டன. ஆனால் பெரும் செலவு செய்து தேசியை நதிகளை ஒன்றிணைத்தாலும் அதன் பின்னும் சிக்கல்கள் நிச்சயமாக வரும். எப்படியெனில் ஒரு வேலை அதிகப்படியான தண்ணீர் வந்தால் அவற்றை எப்படி முறையான மேலாண்மை செய்யலாம் என்ற திட்டம் இல்லையெனில் நமக்கு சிரமமே.
ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்த மக்கள் தண்ணீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். உதாரணம் நம்முடைய கரிகால்சோழன் கட்டிய கல்லணை. கடல்வெள்ளம் போல் வந்த காவிரியின் இருபுறம் தூர் எடுத்து சிறப்பான முறையில் கால்வாய்களை வெட்டி மிகப்பெரிய நிர்பாசன முறையை நம்மக்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்களின் கடல் துறைமுகமான பூம்புகாரில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றவாறு அமைத்துள்ள முறையினை வரலாற்று அறிஞர்கள் இன்றும் வியக்கின்றனர்.
கடந்த 1800 வருடங்களாக நம்மை ஆண்டு வந்த மூவேந்தர்கள் அவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு போரில்வெற்றிப்பெற்றால் அதன் நினைவாக ஏரிகளை வெட்டினர். அதன் மூலம் ஏரியை சுற்றி உள்ள எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு அவர்களின் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு சேர்த்தனர். இது நமக்கு கணக்கு தெரிந்து 2500 வருடங்களாக செய்துகொண்டு வந்துள்ளனர். அதிலும் காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் பல ஏரிகளை வெட்டி ஒரு ஏரியில் தண்ணீர் அதிகமாக வந்தால் இன்னொரு ஏரிக்கு கொண்டு செல்லும் வழியில் உள்ள எல்லா ஊர்களில் உள்ள குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் அமைத்தனர்.
இவ்வாறெல்லாம் தண்ணீர் மேலாண்மையை கடைபிடித்ததால் நிலத்தடி நீர்மட்டமும் சரியாக இருந்து வந்துள்ளன என்றே சொல்லாம். ஆக முறையான தண்ணீர் மேலாண்மையை மிகச்சரியாக செய்து வந்தவர்கள் நாம். ஆனால் இன்று தண்ணீர் தண்ணீர் என்று அடித்துக்கொள்கின்றோம். போதாக்குறைக்கு தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்கின்றனர்.
எது எப்படியிருந்தாலும் அடிப்படைகளை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முதலில் குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை ஒண்றிணைத்துவிட்டு அதன்பின் உள்ளூர் ஆறுகளையும், நதிகளையும் ஒன்றிணைத்தபின் வேண்டுமானால் தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம். இந்த அடிப்படை அம்சங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நமக்கு நிலத்தடி நீர்மட்டமும் உயரும் அதே சமயத்தில் அதை பயன்படுத்தி விவசாயமும் கூடும்.
சரி குளங்களையும், ஏரிகளையும், ஆறுகளையும் எப்படி ஒன்றிணைக்கலாம்.?
நாம் செய்யவேண்டிய தேவை எதுவுமே இல்லை. ஏற்கனவே எங்கு எங்கெல்லாம் குளங்களும், ஏரிகளும் இருந்துள்ளனவோ அவைகளை நாம் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தாலே போதும். நம் முன்னோர்கள் எங்கெல்லாம் ஏரிகள் வெட்டியுள்ளார்களோ அவைகளை ஒரு பக்கம் ஆற்று நீர் வரத்திற்கும், இன்னொரு புறம் இன்னொரு ஏரிக்கு நீர் செல்லும் வழிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். அவற்றினை நாம் முறையாக தூர்வாரி பயன்படுத்தினாலே போதுமானது.
இதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது கூகிள்மேப்பில் நம் ஊர்களின் ஏரியின் இருப்பிடத்தினை புளூ கலர் கொண்டு அடையாளப்படுத்தினாலே போதும். தொழில்நுட்பங்கள் வழியாக அவர்களின் பாதைகளை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம்.
மேலும் அரசாங்கத்தின் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினை இது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம்.