வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…
ஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். இதனால், களைகள் அழிந்துவிடும். ஆடி மாதத்தில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும். நடவுக்கு முதல் நாள் குழியில் தண்ணீர்விட்டு ஈரப்படுத்த வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து, ஜீவாமிர்தக் கரைசலில் மூழ்க வைத்து எடுக்க வேண்டும். பிறகு, ஒருநாள் முழுவதும் நிழலில் உலர்த்தி வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்த கிழங்குகளைக் குழிக்கு ஒன்றாக ஊன்றி மண் கொண்டு மூடி, தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
விதைத்த 3-ம் நாள், கிழங்கைச் சுற்றி இறுக்கமாக மண் அணைத்து விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சிவர வேண்டும். 25 நாள்களுக்கு ஒரு முறை சொட்டுநீரில் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற விகிதத்தில் வடிகட்டிய ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். விதைத்த 15 முதல் 20 நாள்களுக்குள் இலைகள் தென்படும்.
விதைத்த 8-ம் நாள் ஒவ்வொரு குழியிலும் விதைக்கிழங்கைச் சுற்றி கைப்பிடி அளவு சணப்பு விதையைத் தூவ வேண்டும். இவை வளர்ந்து பூக்கும் சமயத்தில் மடக்கி மூடாக்காகப் போட்டு மண் அணைக்க வேண்டும். இதனால், தழைச்சத்து கிடைக்கும்.
வாழையை நடவு செய்த 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் கன்றின் மேல் தெளிக்க வேண்டும். இதேபோல, ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து மீன் அமினோ அமிலம் தெளித்து வர வேண்டும். 45-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இதேபோல, ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து ஜீவாமிர்தம் தெளித்து வர வேண்டும்.
50-ம் நாள், 10 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசலைச் சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். 65-ம் நாள் 1 லிட்டர் சூடோமோனலை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து 200 லிட்டர் தண்ணீரோடு சேர்த்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும்.
90-ம் நாளன்று 400 கிலோ வேப்பங்கொட்டைத் தூளுடன் 100 கிலோ கடலைப் பிண்ணாக்குத்தூள் கலந்து ஒவ்வொரு கன்றின் தூரிலும் கைப்பிடியளவு வைக்க வேண்டும்.
ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் மழை பெய்தால் வாழையில் இலைப்புள்ளி நோய் வரும். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, கைத்தெளிப்பானால் தெளித்தால் நோய் தாக்காது.
7-ம் மாதத்துக்கு மேல் பூ வெளிவந்து காய்பிடிக்கத் தொடங்கும். பூ பிடிப்பதற்கு முந்தைய மாதமான 6-ம் மாதமும், பூ பிடித்த பிறகு முந்தைய மாதமான 6-ம் மாதமும், பூ பிடித்த பிறகு, 8-ம் மாதமும் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
9-ம் மாதத்துக்கு மேல் வாழை அறுவடைக்கு வரும். தேவையைப் பொறுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.
நன்றி
பசுமை விகடன்
super
excellent method
super
Nice