திப்பிலியை வல்லாரைச் சாற்றில் 7 முறை ஊறவைத்துப் பாவனை (பக்குவம்) செய்து உலர்த்திப் பொடித்து உண்டுவர, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். தொண்டை கரகரப்பு நீங்கி குரல்வளம் உண்டாகும்.
உலர்ந்த வல்லாரை இலை, வெட்பாலை விதை, வசம்பு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றைச் சமஎடையில் எடுத்துப் பொடி செய்து வைத்துகொள்ளவும். இதிலிருந்து தினமும் இருவேளை 25 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து உண்டு வர தொண்டை கபம், தொண்டைக்கம்மல் நீங்கி நல்ல குரல்வளம் உண்டாகும். இது பாடகர்களுக்கு மிகச்சிறப்பான பலனைத் தரும்.
வல்லாரை இலைகளுடன் 2 மிளகு, ஒரு பூண்டு பல் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு நெல்லிக்காயளவு காலை, மாலை இரு வேளைகளும் வெறும் வயிற்றில் உண்டு வர நாள்பட்ட புண்கள், சொறி, சிரங்குகள் முதலியவை குணமாகும்.
வல்லாரை இலை, தூதுவளை ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து பொடி செய்துகொள்ளவும். ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர, காசநோயில் ஏற்படும் சளித்தேக்கம், தொண்டைக்கம்மல் நீங்கும். வல்லாரை இலையுடன், கீழாநெல்லி இலையைச் சம எடையளவு சேர்த்து அரைத்து 5 கிராம் அளவு காலை வேளை மட்டும் தயிரில் கலந்து உண்டு வர நீர் எரிச்சல் (நீர்க்கடுப்பு) தீரும்.
வல்லாரை இலையுடன் சம எடையளவு வேலிப்பருத்தி இலையைச் சேர்த்து அரைத்து கொள்ளவும். இதில் 3 கிராம் அளவு வெந்நீரில் கலந்து 4 நாள்கள் உட்கொண்டு வர தடைப்பட்ட மாதவிடாய் வெளியாவதோடு, மாதவிடாயினால் ஏற்படும் வயிற்றுவலியும் குறையும்.
வல்லாரை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிவர.. யானைக்கால் வீக்கம், குறையும்.
நன்றி
பசுமை விகடன்