ரஜினி என்ற மூன்றெழுத்தின் பிரமாண்டம் இந்தியா முழுதும் அறியும். கர்நாடாகவில் விதைக்கப்பட்டாலும் தமிழகத்தின் விருட்சமாய் வளர்ந்திருக்கும் இந்த உச்ச நட்சத்திரம். உச்சநட்சத்திரத்தினை தாக்கினாலே போதும், நாமும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்றே பலரும் இவரை காயப்படுத்தினாலும், பொறுமையாக உட்கார்ந்திருக்கும் ரஜினியை, சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வா, என்று கோரிக்கை வலுக்கிறது. ஆனாலும் அவரே அறியாமல் பல வருடங்களாக அரசியலில் அவர் நீக்கமற கலந்திருக்கிறார் என்பதை அவர் அறிந்தும், அறியாமலும் இருக்கிறார். யார் புதியதாக கட்சி ஆரம்பித்தாலும் ஆரம்பித்திருக்கும் கட்சியின் பெயராவது, பத்திரிக்கையில் வரவேண்டும் என்பதற்காகவே அவரை சந்திப்பவர்கள் இருந்தார்கள், இனியும் இருப்பார்கள்.
ரஜினிகாந்தின் ரசிகர் மன்றங்கள் வழியாக அவர்கள் செய்த பல அறப்பணிகளால் வளர்ந்தவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள். அதோடு உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் ரஜினியின் பெயரை தன் பெயருக்கு முன் சேர்த்து ஜெயித்து இருப்பவர்களையும் கண்டிருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா ? என்ற கேள்விக்குறியில் பல ஊகங்களையும் வெளியிட்டுவிட்டனர் இன்றைய ஊடகங்கள்.
விரல்சொடுக்கினாலும், நின்றாலும், நடந்தாலும் ஒரு செய்தியாகும் பலன் ரஜினிக்கு உண்டு. இவ்வளவு பெரிய பலத்தினை வைத்துக்கொண்டு ரஜினி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று பலருக்கும் ஆச்சர்யம் உண்டு.
இந்தக்கட்டுரை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று கூவுவது அல்ல. விவசாயிகளின் நலன்காக்க சில முன் ஏற்பாடுகளை அவர் முன்னின்று செய்யவேண்டும் என்பதே..
தமிழகத்தில் ரஜினியை தலைமையாகக் கொண்டு நதிநீர் இணைப்பினை கொண்டு வந்தால் அதன் பலனானது, ஏட்டுத் தண்ணீர், குறைந்த பட்சம் ஒரு ஊற்றாவது பிறக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.
ஏன் ரஜினி செய்ய வேண்டும் என்று கேட்கலாம். இதற்கு முன் திரு.விஜயகாந்த், அவர் மீது வைத்திருந்த அளவில்லா நம்பிக்கையை கெடுத்துவிட்டார், எம்.ஜி.ஆர், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களுக்குப் பிறகு தமிழக அரசியலில் பலம் வாய்ந்தவராக இருப்பவர் ரஜினிகாந்த்.
தமிழகத்தில் உள்ள நதிநீர் இணைப்பு திட்டத்தினை செயல்படுத்த நல்ல தலைமை மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேவை. அதற்குத் தகுதியானவர் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த்.
ஏனெனில் நதிகளை இணைக்க முதல்கட்டமாக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தார். அதன்பின் வாஜ்பாய் காலத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்த செய்தி இன்றும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இன்னமும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஒரு அரசாங்கம் நினைத்தாலும் செய்ய முடியாத இந்தக்காரணத்தினை ரஜினிகாந்த் அவர்கள் நினைத்தால் செய்ய இயலும் என்பது யதார்த்தம். ஏனெனில் ரஜினியின் ரசிகர் மன்றம் என்ற பெரும் மனித சக்தி. இந்த பெரும் மனித சக்தி, ஆங்காங்கே தனித்தனியாக தங்களாலான பணிகளை செய்து வருகிறது. இந்த மனித சக்திகளை ஒன்றிணைத்து பல ஆய்வுகளை நடத்தி இறுதியாக சில ஆய்வுகளை அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யலாம், வாய்ப்பு இருந்தால், இத்திட்டத்தினை ரஜினியே செயல்படுத்தலாம் இதை சாதாரண மக்களும் செய்ய முடியும். ஆனால் முன் நிற்பது ரஜினி அல்லவா!
ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் நதிகள் இணைக்கப்பட்டுவிட்டதாக கூறினாலும் தமிழகத்தில் அது இன்னமும் ஏட்டளவில் ஓடிக்கொண்டே இருக்கிறதே தவிர, நதி இன்னமும் அதன் பாதையில் பயணிக்கவில்லை.
ஆம், ரஜினி அரசியலுக்கு வருகிறாரரோ, இல்லையோ மக்களுக்கு பயன்படும் சேவைகளை முன்னின்று செய்தால் மக்கள் பலனடைவார்கள். ரஜினிக்கும், மக்களுக்கும் இடையேயான சேவை, வியாபாரிக்கும் வாங்குபவருக்குமான உறவு அல்ல, அந்தக் கட்டத்தினையும் தாண்டிய ஒன்று. அரசாங்கம் செய்தால் அது கடமை, ஆனால் ரஜினி செய்தால் எந்த தலைமுறைக்கும் அவரே சூப்பர் ஸ்டார்.
இதை ரஜினி என்ற நடிகர் ஏன் செய்யவேண்டும், என்ற கேள்வி இந்தக்கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் எழலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் சில, பல விசயங்களை சினிமா நடிகர்கள் கூறினால் மட்டுமே மக்கள் ஏற்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மை. இதுபோன்ற நல்ல விசயத்துக்கு ரஜினி அவர்கள் இறங்கினால் அவரின் ரசிகர் பட்டாளம் உடனே களமிறங்கும்.ஏராளமான மனித மூளைகள் தன்னலம் பார்க்காமல் பணியாற்றும்போது பல பிரச்சனைகள் சுமுகமாக முடியும்.
மேலும் நதிநீர் இணைப்பினை ஏன் ரஜினியின் தலைமையில் கொண்டு வரலாம் என்றால் அவரை அரசியலுக்கு அழைக்கக் காத்திருக்கும் கூட்டம் இன்றைய பிரதமர் முதல் எதிர்கால பிரதமர் வரை, இப்படிப்பட்ட செல்வாக்கு உள்ள ஒருவர் தன் மதிப்பினை உணர்ந்து, தனது செல்வாக்கினைக் கொண்டு மக்களுக்கு தேவையான ஒன்றினை அவர் செய்வார் .
ஏனெனில் ரஜினியின் செல்வாக்கு, ரஜினி என்ற நபரின் சந்தை மதிப்பு , ரஜினி என்ற நபரின் நன் மதிப்பு, முதற்கட்டமாக தேவைப்படும் பணத்திற்கு அவர் சொன்ன நிதியையே வைத்து இந்தப் பணியை ஆரம்பித்து வைத்தால் அவரை தன் ஆதர்ச நாயகனாக பார்த்து வளர்ந்தக் கூட்டம் நிச்சயம் அவருக்கு தோள் கொடுக்கும்.
நதி நீர் திட்டம் என்றாலே முக்கியமாகப்பார்க்கப்படுவது நிதி ஆதாரம்தான். உச்ச நட்சத்திரமே களமிறங்கிய பின்னர் நிதி நதி போல் வரும். செய்வாரா ரஜினி ? செய்வார் , ஏனெனில் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழகமல்லவா ?
நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமானால் தமிழக மக்களும், குறிப்பாக விவசாயிகளும் அதிகளவில் பயனடைவர்..
காத்திருக்கிறோம்….
செல்வமுரளி..