Site icon Vivasayam | விவசாயம்

அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..!

செண்டுமல்லிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தேர்வு செய்த 60 சென்ட் நிலத்தை ஓர் உழவு செய்து மூன்று நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, இரண்டு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைப் பரவலாகக் கொட்டி ஓர் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, 10 அடி சதுரத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பாத்திகளில் செடிக்குச்செடி ஒன்றரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளி என இருக்குமாறு ஒரு அங்குல ஆழத்தில் நாற்றுகளை நட வேண்டும். இந்தளவு இடைவெளி இருந்தால்தான் செடிகள் உரசாமல் வளரும். செடிகள் உரசினால் பூக்கள் பெருக்காது. அறுபது சென்ட் பரப்பில் நடவு செய்ய 4 ஆயிரத்து 500 நாற்றுகள் வரை தேவைப்படும். பஞ்சகவ்யா கரைசலில் நாற்றுகளின் வேர் பகுதியை முக்கி எடுத்து பத்து நிமிடங்கள் காய வைத்துதான் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது வேர் சம்பந்தமான நோய்கள் வராது.

நாற்று நடவு செய்த உடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து, மண்ணைக் காய விடாமல் தண்ணீர் கொடுக்க வேண்டும். பத்து நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் செடிகள் மீது தெளிக்க வேண்டும். நடவு செய்த 15 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். நடவு செய்து 30-ம் நாளுக்கு மேல் மொட்டுக்கள் வரும். அந்தச் சமயத்தில், 10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி மீன் அமினோ அமிலத்தைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். நடவு செய்த 40-ம் நாளுக்கு மேல் பூக்களை அறுவடை செய்யலாம். ஆரம்பத்தில் பூக்கள் குறைவாகத்தான் கிடைக்கும். படிப்படியாக மகசூல் அதிகரித்து 60-ம் நாளுக்கு மேல் முழு மகசூல் கிடைக்கும். பூக்களின் எடை தாங்காமல் செடிகள் சாந்தால் செடிகளின் தூரில் மண் அணைத்துவிட வேண்டும்.

இலைச்சுருட்டலுக்கு மோர்க்கரைசல்..!

சில சமயங்களில் செண்டுமல்லியில் இலைச்சுருட்டல் பிரச்சனை வர வாய்ப்புண்டு. ஏதாவது செடியில் இலைகள் சுருண்டு காணப்பட்டால், 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் புளித்தமோரைக் கலக்கி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

நாற்றுகள் உற்பத்தி

“மறு நடவுக்கான நாற்றுகளை நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும். சில செடிகளில் மட்டும் பூக்களைப் பறிக்காமல் விட்டால், அப்படியே செடியில் பூக்கள் வாடிவிடும். அவற்றைப் பறித்து உதிர்த்தால் விதைகள் கிடைக்கும். விதைகளை ஓலைப்பெட்டியில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்தியில் 3 அங்குல இடைவெளியில் வரிசையாக விதைகளை விதைக்க வேண்டும். ஒரு குச்சியால் 3 அங்குல இடைவெளியில் கோடு போட்டால் எளிதாக விதைக்கலாம். விதைத்து தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், நான்காம் நாள் முளைத்து வரும். 18-ம் நாளில் இருந்து 22-ம் நாளுக்குள் நாற்றைப் பிடுங்கி நடவு செய்துவிட வேண்டும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version