காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் அருகே ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ஒருவர் தன் வீட்டில் 400 நாட்டு மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தமலை (60). கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
இவர் தந்தை காலத்தில் அந்த ஊர் கிராம கணக்குப்பிள்ளையாக இருந்த ஒருவர், நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டி ஒன்றை தன்னால் பராமரிக்க முடியாமல் இவர்கள் வீட்டுக்கு தானமாக கொடுத்துள்ளார். இவர்கள் அந்த கன்றுக் குட்டிக்கு முறையாக சிகிச்சை அளித்து பராமரித்துள்ளனர்.
அதன் மூலம் மாடு வளர்க்க ஆரம்பித்த இவர்களிடம் கடந்த 50 ஆண்டுகளில் மாடுகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. இதன் மூலம் நடைபெற்ற வியாபாரத்தில் புதிய மாடுகளையும் வாங்கினார். இதனால் இவர்களிடம் தற்போது 400 நாட்டு மாடுகள் உள்ளன.
இந்த நாட்டு மாடுகள் அனைத்தும் பண்ணையில் வளர்ப்பதுபோல் அடைத்து வைத்து தீவனம் மட்டும் அளித்து வளர்க்கப்படும் மாடுகள் இல்லை. இவை சாதாரணமாக கிராம நாட்டு மாடுகளைப் போல் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன.
இந்த மாடுகள் காலையில் மேய்ச்சலுக்கு பட்டியில் இருந்து திறந்து விடப்படும். அவை முறையாக மேய்ச்சலை முடித்துக்கொண்டு மாலையில் வீடு திரும்பிவிடும். தீர்த்தமலை மற்றும் அவரது மகள் வனிதா, இந்த மாடுகள் பயிர் செய்யப்பட்டுள்ள விளைநிலங்களின் பக்கம் சென்றுவிடாமல் தடுப்பதற்காக பாதுகாப்புக்கு உடன் செல்வர். மாடுகளைப் பராமரிக்கும் பணிகளையும் இவர்கள் இருவரும் செய்து வருகின்றனர்.
ஒரே வீட்டில் 400 நாட்டு மாடுகள் பராமரிப்பது குறைத்து கேள்விப்பட்ட ‘ஏர் முனை’ என்ற அமைப்பு, மாட்டுப் பொங்கலன்று அந்த மாடுகளுக்கு அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து விழா எடுக்க முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து தீர்த்தமலையுடன் சென்ற இந்த அமைப்பு மாடுகளுக்கு விழா எடுத்தது. இதுகுறித்து ஏர் முனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பவுல் செல்வராஜிடம் கேட்டபோது, இவர்கள் பசுக்களை வளர்த்து பால் கறக்கின்றனர். ஆனால் இவர்களிடம் பிரதானமாக வண்டி போன்றவற்றை இழுக்கும் இரட்டை எருது மாடுகள்தான் அதிகம் உள்ளன. ஒரு மாடு கன்றுக்குட்டியாக இருக்கும்போதே அதற்கு ஒரு ஜோடியாக மற்றொரு கன்றுக்குட்டியை வாங்கி வந்து அவற்றை ஜோடிமாடாக வளர்த்து பழக்கப்படுத்துகின்றனர்.
ஓரிரு மாடுகளையே பராமரிக்க சிரமப்படும் இக்காலத்தில் 400 மாடுகளை ஒரே குடும்பத்தினர் பராமரிக்கின்றனர். மாட்டுப் பண்ணைகளில் கூட இவ்வளவு மாடுகளைப் பராமரிப்பது சிரமம். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக விழா எடுத்துள்ளோம் என்றார்.
இது குறித்து தீர்த்தமலையிடம் கேட்டபோது, தற்போது வறட்சி காரணமாக மேய்ச்சல் நிலங்களில் பசுமைப் புற்கள் இல்லை. இதனால் மாடுகளுக்குப் போதிய உணவு கிடைப்பதில் சிரமம் உள்ளது. மாடுகளுக்கு தேவையான தீவனத்தை அதிக அளவு விலை கொடுத்து வாங்கவேண்டி உள்ளது. இந்த தீவனங்களை மாடு வளர்ப்பவர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கினால் மாடுகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் உதவியாக இருக்கும். அரசு கால்நடை மருத்துவர்களின் சேவையும் தேவையாக இருக்கிறது என்றார்.
கிராம மக்களால் ஒட்டுமொத்தமாக எடுக்கப்படும் விழாக்களில் பல்வேறு இடங்களில் 50 முதல் 100 மாடுகளைக் கொண்டு வருவதே சிரமமாக உள்ளது. ஆனால் ஒரே குடும்பத்தினர் மூலம் 400 மாடுகளை ஒருங்கிணைத்து விழா எடுத்த சம்பவம் சுற்று வட்டார பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
தி இந்து
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral