Site icon Vivasayam | விவசாயம்

புதினா சாகுபடி செய்யும் முறை..!

வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலம் மற்றும் களிமண் நிலங்களில் இதை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இதற்குத் தனியாக பட்டம் இல்லை. அனைத்துப் பட்டங்களிலும் நடவு செய்யலாம். ஒரு முறை நடவு செய்தால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். முழுக்க, வெயிலோ அல்லது முழுக்க நிழலோ உள்ள இடத்தில் சரியாக வளராது. நிழலும், வெயிலும் கலந்த இடங்களில் மட்டுமே புதினாவை நடவு செய்ய வேண்டும்.

25 சென்ட் நிலத்தில், இரண்டு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி நிலத்தை நன்றாக புழுதி உழவு செய்து கொள்ள வேண்டும். பிறகு, அனைத்துப் பாத்திகளிலும் தண்ணீர் நிற்பது போல.. மேடு பள்ளம் இல்லாமல் சமமாக்கி பாத்தி பிடிக்க வேண்டும். இடவசதி, தண்ணீர் வசதிக்கு ஏற்ப பாத்திகளின் அளவுகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம். பொதுவாக பத்து அடிக்கு பத்தடி அளவுகளில் பாத்திகளை எடுத்துக் கொள்ளலாம்.

பாத்திகளை பாசனம் செய்து ஈரமாக்கிக் கொண்டு, புதினா தண்டுகளை நடவு செய்ய வேண்டும். நடவுத் தண்டுகள், ஏற்கனவே புதினா சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் கிடைக்கும். முற்றிய புதினா கீரையை வாங்கி, அதன் தண்டுப் பகுதியை எடுத்தும் நடவு செய்யலாம். ஒரு தண்டுக்கும் அடுத்த தண்டுக்கும் இடையில் நான்கு விரல்கிடை இடைவெளி இருப்பது போல் நெருக்கமாக நடவு செய்ய வேண்டும். நடவு செய்த பிறகு, ஈரம் காய விடாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் காட்ட வேண்டும். செடி, உடனே உயிர் பிடித்து தழைக்க ஆரம்பிக்கும்.

15 முதல் 20-ம் நாட்களுக்குள் கைகளால் களை.. எடுத்து 10 கிலோ கடலைப் பிண்ணாக்கைத் தூளாக்கி, பாத்தி முழுவதும் தூவி விட்டு தண்ணீர் கட்ட வேண்டும். 30 மற்றும் 40-ம் நாட்களில் 20 கிலோ கடலைப் பிண்ணாக்கை பாசன நீரில் கரைத்து விட வேண்டும். புதினாவை பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குவதில்லை. அப்படியும் ஏதேனும் பூச்சிகள் தாக்கினால், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

50-ம் நாளில் இருந்து கீரையை அறுவடை செய்யலாம். தரையில் இருந்து, இரண்டு விரல்கிடை அளவு விட்டு, கீரையை அறுக்க வேண்டும். அறுத்த பிறகு, காம்புகளை மட்டமாக அறுத்து விட்டு, களை எடுத்து நீர் பாய்ச்சி, மீண்டும் கடலைப் பிண்ணாக்கை உரமாகக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் மறுபடியும் புதினா தழைக்கும்.

மருத்துவ பயன்கள்

‘மென்தா ஆர்வென்சிஸ்’ (Mentha Arvensis) என்பது புதினாவின் தாவரவியல் பெயர், புதினா இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதனுடன் 3 மிளகு சேர்த்து, விழுதாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் சரியாகும்.

புதினாவில் உள்ள சத்துக்கள்!

நீர்ச்சத்து 84.5%

புரதம் 4.9%

கொழுப்பு 0.7%

தாதுப்பொருள் 0.2%

நார்ச்சத்துக்கள் 0.2%

மாவுச்சத்துக்கள் 5.9%

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Exit mobile version