Site icon Vivasayam | விவசாயம்

சுழற்சி முறையில் கீரை சாகுபடி..!

”பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தைத் தூவி சமப்படுத்த வேண்டும். பிறகு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு கிலோ வீதம் கனஜீவாமிர்தம் இட வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் 100 கிராம் அளவில் கீரை விதைகளைத் தூவி, குச்சிகொண்டு குறுக்கும்நெடுக்குமாகக் கீறிவிட வேண்டும். ஒரு பாத்திக்கு 500 மில்லி ஜீவாமிர்தம் என்ற கணக்கில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

விதைத்த 3-ம் நாள் விதைகள் முளைவிடும். அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்தால் போதும். ஒவ்வொரு பாசனத்தின் போதும், ஒரு பாத்திக்கு 500 மில்லி ஜீவாமிர்தம் என்ற அளவில் தண்ணீரில் கலந்துவிட வேண்டும். அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை ஆகிய மூன்றும் 22 முதல் 30 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும். பாலக் கீரை 45 நாட்களில் அறுவடைக்கு வரும். சிறுகீரை, தண்டுக்கீரை இரண்டும் ஓர் அறுவடை வகைக் கீரைகள். அதனால் அவற்றை வேரோடு பிடுங்கிவிட வேண்டும். பிறகு பாத்திகளில் உள்ள மண்ணைக் கொத்தி 15 நாட்கள் ஆறவிட்டு மீண்டும் விதைக்கலாம். அரைக்கீரை, பாலக் கீரை இரண்டும் மறுதழைவு வகைக் கீரைகள். அரைக்கீரையை 20 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்; கிட்டத்தட்ட 10 அறுப்புகள் வரும். பாலக் கீரையை 15 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். கிட்டத்தட்ட 30 அறுப்புகள் வரும்.

ஓர் அறுவடை கீரைகளைத் தொடர்ந்து சில பாத்திகளில் விதைத்துக்கொண்டே வந்தால் சுழற்சி முறையில் தினமும் கீரைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். மறு தழைவு கீரைகளை மகசூல் காலத்தைக் கணக்கிட்டு விதைத்தால் அவற்றையும் சுழற்சி முறையில் அறுவடை செய்யமுடியும்.

விதைநேர்த்திக்குப் பீஜாமிர்தம்..பூச்சிகளுக்கு அக்னி அஸ்திரம்

அடுத்த போகத்திற்குத் தேவையான கீரை விதைகளைப் பெரும்பாலும் கடையில் இருந்து வாங்குவதில்லை. சில செடிகளை மட்டும் பூக்கவிட்டு, அதிலிருந்து விதை எடுத்து வெச்சுக்குவேன். விதைகளைப் பீஜாமிர்தக் கரைசல்ல விதை நேர்த்தி செஞ்சுதான் விதைப்பேன். அதனால, முளைப்புத்திறன் நல்லா இருக்கு. வேர் சம்பந்தமான நோய்களும் வர்றதில்லை. கீரை வயல், வரப்புகளில் 10 அடிக்கு ஒரு செண்டுமல்லி செடியை வெச்சு விட்டுட்டா, பூச்சிகள் தொல்லை இருக்காது. அதையும் தாண்டி, கீரை வயல்ல பூச்சிகள் தென்பட்டால் அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம் மாதிரியான கரைசல்களைத் தெளிச்சுடுவேன்” என்கிறார் தங்கவேல்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version