இன்றைக்கு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க காலத்தில் தமிழகத்தின் பொருளாதார நிலையறிய அக்காலத் தொழில் வளம், வாணிக வளம் ஆகியன பற்றி அறிய வேண்டும். அத்தகைய செய்திகளை நமக்கு அள்ளித்தருவன சங்க இலக்கிய நூல்களாகும். சங்க காலத்தில் உழவுத்தொழில், நெசவு, தச்சுத் தொழில், மண்பாண்டத் தொழில், மீன்பிடித்தல், முத்துக் குளித்தல், உப்பு விளைவித்தல், உள்நாட்டு வாணிகம், வெளிநாட்டு வாணிகம் ஆகியன செழித்து வளர்ந்திருந்தன.
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என வள்ளுவரால் உழவர்கள் போற்றப்பட்டனர்.
பொருபடை தரூஉம் கொற்றமும் உழவர்
ஊன்று சால்மருங்கின் ஈன்றதன் பயனே
என அரசனின் வெற்றிக்கும் புகழுக்கும் காரணமாக உழவர் போற்றப்பட்டனர். உழுதுண்ணும் வேளாளர், உழுவித்துண்ணும் வேளாளர் என உழவர் இருவகையினராவர். மன்னர்கள் ஏரி, குளம், குட்டை, வாய்க்கால்களை வெட்டிக் காடு கொன்று நாடாக்கினர்; வளம் பெருக்கினர்.
குடபுலவியனார் என்ற புலவர் நீர், உணவு, நிலம் போன்ற தன்மையினை எடுத்துகூறி நீர்ப்பாசன வசதி பெருக்கி உழவுத் தொழில் மேம்பாடு அடையச் செய்வதன் இன்றியமையாமையினைப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எடுத்துக்கூறினார்.
காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை, பொருநை ஆகிய ஆறுகள் தமிழகத்தை வளப்படுத்தின. நெற்பயிர், கரும்போடுகூடப் புன்செய் நிலங்களில், வரகு, தினை, சாமை, அவரை, துவரை முதலிய பதினெண் வகைக் கூலங்கள் விளைந்தன.
ஆடை நெய்தற்குப் பஞ்சினால் ஆன பருத்தியும், பட்டும், விலங்குகளின் மயிரும், எலியின் மயிரும் பயன்படுத்தப்பட்டன. ஆடைகள் பாம்பின் மேல்தோல் போன்றும், இழைகள் கண்ணுக்குத் தெரியாமலும் விளங்கின.
‘பாம்புரி யன்ன… இழையணி வாரா ஒண்பூங் கலிங்கம்’
‘கோபத் தன்ன தோயாப் பூந்துகில்’
‘நீலக் கச்சைப் பூந்துவ ராடை’
‘ஆவி யன்ன அவர் நூற் கலிங்கம்’
போன்ற சங்க இலக்கிய வரிகள் அதற்கு எடுத்துக்காட்டாகும்.
‘கொட்டைக் கரைய பட்டுடை’ பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
இவ்வாடைகள் உள்நாட்டுப் பயனுக்கு மட்டுமல்லாது மேலை நாடுகளான கிரீசு, உரோம் ஆகியவற்றுக்கும், கீழை நாடுகளுக்கும் ஏற்றுமதியாயின. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்த எகிப்திய மன்னரின் சடலங்கள் இத்தகைய இந்திய நாட்டுத் துணியால் மூடப்பட்டதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.
தச்சர்கள் மரங்கொல் தச்சர் என அழைக்கப்பட்டனர். வீட்டிற்குரிய வாயில் நிலைகளும், கட்டில்களும் அழகுற அமைக்கப்பட்டதை நெடுநல்வாடை என்னும் பத்துப்பாட்டு நூல் அழகுற எடுத்துக் காட்டுகிறது.
பொன்செய் கொல்லரும், மக்களுக்குரிய அணிகலன்களும், போர்க்கருவிகளும், உழவுக்கருவிகளும் செய்து தந்தனர்.
உப்பு விளைவிக்கும் உமணர், மீன்பிடிக்கும் பரதவர் போன்றோர் கடல்படு பொருள்களான உப்பு, மீன், முத்து போன்ற பொருள்களை மக்களுக்கு அளித்தனர். கடல் கடந்து வாணிகம் செய்யவும் துணை புரிந்தனர்.
பண்டைக்காலத்துத் தமிழகத்தில் வாணிகம் பண்டமாற்று முறையிலும் நடைபெற்று வந்தது. மலைமக்கள் ஊணையும் தேனை நெல்லுக்கு விலையாகத் தந்தனர். நெய்தல் நிலப் பரதவர் மீனுக்கும், உப்புக்கும் விலையாக நெல்லைப் பெற்றனர்; ஆய்ச்சியர் பால்படு பயனாகிய நெய், தயிர் போன்றவற்றிற்கு விலையாகப் பொன்னையும், நெல்லையும் பெற்றனர்.
உமணர் பெருவண்டிகளில் உப்பை ஏற்றிக்கொண்டு விலைகூறி ஊர்தோறும் சென்று விற்றனர்.
வாணிகர்கள் பாதுகாப்பிற்காகக் கூட்டங்கூட்டமாகச் சென்றனர். கழுதைக்கும் எருதுகளும், வண்டிகளும் பொதிசுமக்கப் பயன்பட்டன.
கவசம் பூண்டு, அடிபுதையுமாறு காலணியணிந்து கச்சும் வாளும் பூண்டு பொன்வாணிகர்கள் சென்றனர்.
வாணிகருக்குப் பாதுகாப்பாகக் காவற்படைகள் நின்றதோடு, சுங்கவரி அதிகாரிகளும் இருந்தனர்.
புகார், மதுரை போன்ற பெரிய நகரங்களில் பகற்பொழுதுகூடும் நாளங்காடியும், இரவுப்பொழுது கூடும் அல்லங்காடியும் இருந்தன. அல்லங்காடிகளில் யானைத் தந்தத்துக் கடைசல் பிடிப்ப வரும், மணிகளில் துளையிடுபவர்களும், பொன்னணி செய்பவர்களும், துணிவகைகள் விற்பவர்களும், செம்பு போன்றவற்றை விற்பவர்களும், ஆடைகளுக்கு அழகூட்டும் தொழிலாளரும் பூவும், புகையும், பொருளும் விற்பாரும், சந்தைகளில் நிரம்பிப் பேரொலியோடு தம் பங்கினை ஆற்றினர். கள்ளுக்கடைகளில் கொடியிட்டு அடையாளம் காட்டப்பட்டன. அக்கடைகளில் மீனும், ஆட்டு இறைச்சியும் விற்பனை செய்யப்பட்டன.
வணிகர்கள் பெரும் மாளிகைகளில் வாழ்ந்தனர்.
முந்நீர் வழக்கம் எனப்படும் கடல் கடந்து செல்லுதல், வாணிகத்தின் அடிப்படையில் நடந்தது. அக்கடல் வாணிகம் வெளிநாட்டு வாணிகமாகவே இருந்தது. ‘கலம்புணர் கம்மியர்’ எனப்பட்ட தச்சரால் கட்டப்பட்ட கலங்கள் காற்றின் துணைகொண்டும் துடுப்புகள் துணைகொண்டும் செலுத்தப்பட்டன.
சங்ககாலத்தில் புகாரும், கொற்கையும், தொண்டியும், முசிறியும் சிறந்த துறைமுகங்களாகச் சோழ, பாண்டிய, சேர மன்னர்களுக்கு விலங்கின.
கடற்கொள்ளையரிடமிருந்து வாணிகருக்கு மன்னர்கள் பாதுகாப்பு அளித்தனர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் அத்தகைய செயலைச் செய்தவனாக கூறப்படுகிறான்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral