விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். மற்ற நாளாக இருந்தால் இன்னேரம் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் எல்லாம், இந்த நாளை முன்னிட்டு இந்த படம் திரையிடுகிறோம். கண்டு மகிழுங்கள் என்றே விளம்பரபடுத்தியிருப்பார்கள். ஆனால் இது கோவணம் உடுத்துபவர்களின் நாள் என்பதால் யாருக்கும் இது சிறப்பா நாள் என்றே தெரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்ற சரண் சிங். 7 மாதங்கள் ஆட்சியில் இருந்தபோது ‘ஜமீன்தாரி ஒழிப்புமுறை, நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.
அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள். அதனாலயே அவருடைய பிறந்த நாள் விவசாயிகள் நாளாக கொண்டாடப்படுகிறது.
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் நமக்கு, அடிவயிற்றில் ஏற்படும் பசி என்னும் வெப்பத்திற்கு ஆறுதல் அளிக்கவேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு. அந்த வெப்பம்தான் பசி. அதனாலயே இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.
இயற்கை விவசாயம் (இயற்கை விவசாயம் என்பதே தவறு என்றுதான் நானும் சொல்வேன்., அதை நஞ்சில்லா விவசாயம் என்றே அழைக்கலாம்.) பற்றி பெருகிவரும் விழிப்புணர்வு ஒருப்புறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது போதாது என்றே தோன்றுகிறது.
தழைச்சத்து, மணிச்சத்து. சாம்பல் சத்து என எல்லாம் இயற்கையாகவே இருந்தாலும் உரம் போட்டு பழகிவிட்டோம். இரண்டாயிரம் ஆண்டுகளாக உரமில்லாமல் வளர்த்த நாம், இப்போது மட்டும் ஏன் உரம் போட்டு வளர்க்க வேண்டிய அவசியம் என்று கேட்டால் அதற்கான முறையான பதில் இல்லை. பருவ சூழ்நிலை மாற்றம் என்றாலும் அந்தந்த பயிர்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும். ஆனால் இந்த செயற்கை உரங்கள் எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதையும் யாரும் ஆராயவில்லை. மேலும் நம்முடைய பாரம்பரிய விவசாய முறையும் நம் மக்களுக்கு மறக்கடிக்கப் பட்டுவிட்டன. எனவே நம்முடைய பாரம்பரிய விவசாய முறைகள் மீண்டும் கொண்டு வர பல முயற்சிகளை எடுக்கவேண்டியது நம் அனைவரின் கடமை. இந்த தலைமுறைக்கு தெரியாமல் போன மகிழ மரமும், இலுப்பை மரமும் ஊருக்கு ஊர் வைக்கவேண்டியதும் நமது கடமையே. அதோடு விவசாயக் கழிவுகளை மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் அதற்கான ஆராய்சிகளை துரிதப்படுத்துவதும் நமது கடமை.
அனைவருக்கும் இனிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள்..
என்றும் அன்புடன்
செல்வமுரளி,
ஆசிரியர்
விவசாயம்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral