Site icon Vivasayam | விவசாயம்

வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!

மழை பொய்த்துப் போனதால் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவைவில் உள்ள 76 மாவட்டங்களில் 54 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியுள்ளன. பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்காததால், மூன்று மாநில விவசாயிகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

கர்நாடகாவில் வட கிழக்கு பருவ மழையானது 79 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் காணப்படுகிறது. இதன் காரணமாக பல கிராமங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக தகவல்கள் கிடைத்து வருகின்றன.

கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தில் உள்ள உப்பகுண்டே கிராமத்தில் சில வாரங்களுக்கு முன்னர் விவசாயம் செய்வதற்கான ஆயத்தப்பணிகளில் விவசாயிகள் இறங்கியிருந்தனர். ஆனால் வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால், விவசாயம் கைகொடுக்காது என்பதை உணர்ந்த பல விவசாயிகள் 65 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெங்களூருவுக்கு வேலை தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

”என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு வறட்சியை நான் பார்த்ததே இல்ல.” என கர்நாடக விவசாய பொருட்கள் விலை நிர்ணய அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ் கம்மரடி கூறுகிறார். ”நான் என் வாழ்நாளில் பல வறட்சிகளை பார்த்துள்ளேன். ஆனால் இந்த ஆண்டுதான் குடிதண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.” என 62 வயதாகும் விவசாயி முனியப்பா கவலை தெரிவிக்கிறார். எட்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள இவர், கேழ்வரகு பயிரிட்டுருந்துள்ளார். ஆனால் போதிய நீர் கிடைக்காமல், அந்த பயிர்கள் கருகிவிட்டன. தற்போது அவரின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் மூன்று மாடுகளுக்கு குடிநீர் எப்படி அளிப்பது என அவர் தவித்து வருகிறார். ”கடந்த மூன்று மாதங்களாக நான் வாங்கிய ஒரு டிராக்டர் அளவிலான மாட்டுத் தீவனத்திற்கு இப்போது நான் 25,000 ரூபாய் செலுத்த வேண்டும்.” என கவலையுடன் பேசுகிறார்.

அதே உப்பகுண்டே கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான இளம் விவசாயி சுரேஷ், தனது நிலத்தில் அரை குவிண்டால் கேழ்வரகு அறுவடையானாலே தனக்கு மிகப்பெரிய நிம்மதி என கூறுகிறார். தனது மூன்று ஏக்கர் நிலத்தில் வழக்கமாக 15 குவிண்டால் கேழ்வரகு பயிரிட்டு வருவதாகவும், தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சம் காரணமாக தனக்கு அரை குவிண்டால் கிடைத்தாலே அது அதிஷ்டம் என்கிறார் சுரேஷ்.

கேழ்வரகு பயிரிடுவதற்கு பதிலாக தக்காளி பயிரிட்டால் ஓரளவுக்கு விலை கிடைக்கும் என நினைத்து தனது நிலத்தில் தக்காளி பயிரிட்ட ஸ்ரீனிவாஸ் என்ற விவசாயி, இந்த முறை எதுவும் கிடைக்காது என முடிவுக்கு வந்துவிட்டார்.

வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ள கோலார் போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அனைத்து ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டு விட்டன. இப்போது இருக்கும் சூழலில், அங்கு 1500 அடி ஆழத்திற்கு துளையிட்டால் மட்டுமே நீர் கிடைக்குமாம். ஆனால் அதற்கு ஐந்து லட்சம் வரை செலவிட அங்கு யாரும் செல்வந்தர்களாக இல்லை.

அதிக அளவு நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டதுதான், நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு செல்ல காரணம் என நீரியல் நிபுணர் விஷ்வநாத் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மீண்டும் பழையபடி நிலத்தடி நீர்மட்டம் உயர குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும் எனவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சிக்கு காரணம் போதிய மழையின்மை, குறைந்த நீர் இருப்பு மற்றும் வறட்சியான சுற்றுப்புறச்சூழல் ஆகியவைதான் என அவர் கூறுகிறார்.

சென்னை ஐ.ஐ.டியில் பணிபுரியும் நீரியல் மேலாண்மை நிபுணரான பேராசிரியர் ஜானகிராமன், ”மழைப்பொழிவும், நிலத்தடி நீர் மட்டமும் ஒரே காலகட்டத்தில் குறைந்திருப்பது எதிர்பார்க்காத ஒன்று.” என தெரிவித்துள்ளார்.

வறட்சி காரணமாக கர்நாடகாவின் விவசாயத் தொழில் 50 சதவீத அளவிற்கு குறைந்துள்ளதாகவும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் முக்கிய நீர் ஆதாரமான கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 16 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் அம்மாநில நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தை விவசாயிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், திடீரென நமது நாட்டின் மழைப்பொழிவு மாற்றமடைவதால் இனி வரும் காலங்களில் ரஃபி மற்றும் கரீப் பருவ விவசாயத்தை தொடர்வது குறித்து விவசாயிகள் யோசிக்க வேண்டும் எனவும் நீரியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வட மாநிலங்கள் தவிர்த்து, தென்னிந்திய மாநிலங்களே இந்த காலநிலை மாறுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதையும் நான் கவனிக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம் எனப்படும் காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் வறட்சி காரணமாக மிகப்பெரிய தாக்கத்தை சந்தித்து வருகின்றன. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகியவையும் இந்த வறட்சிக்கு தப்பவில்லை.

ஜூன் முதல் செப்டம்பர் காலத்தில் பெய்யக் கூடிய தென்மேற்கு பருவமழை இந்த முறை குறைவாகவே தமிழகத்தில் பெய்தது. இதனால் தமிழகத்தில் விவசாயத் தொழில் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் வடமேற்கு பருவமழையும் பெய்யாததால், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள நீர்த்தட்டுப்பாடு காவிரி டெல்டா பகுதிகளையும் பாதித்துள்ளது.

இந்த தண்ணீர் தட்டுப்பாடு காவிரி நீர்ப் பங்கீட்டு பிரச்சனையாக உருவெடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சண்டையாக மாறியது நினைவிருக்கலாம். இரு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் தங்கள் மாநிலத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தும், தங்கள் பயிர்களுக்கு தகுந்த இழப்பீட்டையும் மத்திய அரசு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

”தொடர்ந்து தண்ணீர் பற்றாகுறையால் தமிழகம் பாதிக்கப்படுவது அனைவருக்கு தெரியும். ஆனால் மழை பெய்யும் காலங்களில் தமிழகத்தில் உள்ள நீர் தேக்கங்களில் மழை நீரை தேக்கி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பெருமளவு மழை நீர் கடலில் வீணாக கலக்கிறது.” என வேதனைப்படுகிறார் பேராசிரியர் ஜானகிராமன்.

இந்தியாவின் ஈரப்பதமான மாநிலமாக அறியப்படும் கேரளாவில் 14 மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கத்தை விட தென்மேற்கு பருவமழை 34 சதவீதமும், வடகிழக்கு பருவ மழை 69 சதவீதமும் கேரளாவில் குறைவாக பெய்துள்ளது.

ஏலக்காய் மற்றும் மிளகு சாகுபடிக்கு பெயர் போன கேரளாவின் வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் இவற்றின் சாகுபடி 60 சதவீத அளவு குறைந்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள 44 ஆறுகளில் எச்சரிக்கத்தக்க அளவு நீர் மட்டம் குறைந்துள்ளது. கேரளாவின் 60 சதவீத மின்சாரம் நீர் மின்சாரம் வழியில் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நீர் பஞ்சம் அம்மாநிலத்தில் மின்வெட்டுக்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தியுள்ளது.

நாங்கள் நீர் பற்றாக்குறையின் மத்தியில் உள்ளோம். மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்த் தேக்கங்களை பாதுகாக்கவும், அவற்றில் உள்ள நீரை நேர்மையாக பங்கிட்டுக் கொள்ளவும் எங்களது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.” என கேரள வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கேரள அரசு தனியார் கோவில்களுக்கு சொந்தமான 10,000 குளங்களில் நீர் மட்டத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version