Site icon Vivasayam | விவசாயம்

வறட்சியால் ‘ரெட்லேடி’ ரக பப்பாளி பாதிப்பு !

உற்பத்தி குறைந்ததால் விலை உயர்வு

ஆத்தூர் பகுதியில், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், ’ரெட்லேடி’ ரக பப்பாளி மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச முடியாமல் காய்ந்து வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், போதிய பருவ மழை இல்லாததால், ஆறு, ஏரி, விவசாய கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில், நீர் மட்டம் அடியோடு குறைந்து விட்டது.

அதனால், குறுகிய காலத்திலும், குறைவான பாசனத்தில் வருவாய் தரக்கூடிய மக்காச்சோளம், ‘ரெட் லேடி’ எனப்படும் பப்பாளி, சூரியகாந்தி, காய்கறி பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். அதில், ஆத்தூர் அருகே, கல்லநாத்தம், மணிவிழுந்தான், பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூர், மஞ்சினி, நடுவலூர் உள்ளிட்ட பகுதிகளில், 200 ஏக்கருக்கு மேல், கிணற்று பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் ‘ரெட்லேடி’ பப்பாளி செடிகளை நடவு செய்தனர்.

தற்போது, விவசாய கிணறுகளின் நீர் மட்டம் குறைந்து விட்டதால், பப்பாளி உள்ளிட்ட சிறு பயிர்களை கூட காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. சொட்டு நீர் பாசனத்தில் வளரும் பப்பாளி செடிகள், ஓரளவு பசுமையாகவும், குறைந்த அளவில் காய்கள் பிடித்து வருகிறது. பப்பாளி விளைச்சல் குறைந்துள்ளதால், அதன் விலை, கிலோ, 20 முதல், 30 ரூபாயாக உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து, ஆத்தூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில், 1,000 ‘ரெட்லேடி’ ரக பப்பாளி செடி நடவு செய்தால், ஆறு மாதத்தில், காய்கள் அறுவடை செய்யலாம். ஒரு செடியில், ஆண்டுக்கு, 150 முதல், 200 கிலோ காய்கள் பிடிக்கிறது.

ருசி மிகுந்த பப்பாளி காய், பழங்களுக்கு, நல்ல வரவேற்பு இருந்தாலும், கடும் வறட்சியில் காய்கள் உற்பத்தி குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது. பலத்த காற்றுக்கு முறியாத செடிகள் சுட்டெரிக்கும் வெயில் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி

காலைக்கதிர்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version