Skip to content

வேளாண் எந்திரங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்

விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

வேளாண் எந்திரங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கம்

வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை தொடக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட துணைத் தலைவர் அஸ்வத் நாராயணன் தலைமை தாங்கினார். கிளை சங்க நிர்வாகிகள் பசவராஜ், ரகுநாதன், சின்னசாமி, ஒன்றிய செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். விழாவில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமக்கவுண்டர் கலந்து கொண்டு புதிய கிளையை தொடங்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் தோப்பைய கவுண்டர், மாவட்ட நிர்வாகிகள் ராஜா, ராஜேந்திரன், கோவிந்தராஜ், வேலு, நாகராஜ், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய வங்கிகளில் கடன்

கூட்டத்தில், கொல்லப்பள்ளி பகுதியில் குறைந்த மின்னழுத்த மின்சாரத்தால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே கூடுதல் மின்மாற்றிகள் அமைத்து, நாள்முழுவதும் தடையற்ற மும்முனை மின்சாரம் விவசாயத்திற்கு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் கடன் வழங்க வேண்டும். விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி சுடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி அணை மற்றும் ஏரிகளில் இருந்து விவசாயத்திற்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கிட வேண்டும். வேளாண் எந்திரங்களுக்கு முழு வரிவிலக்கு வழங்குவதுடன், டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும். காவிரி நீருக்காக நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், அவர்கள் இழந்த உடைமைக்கும் கர்நாடக அரசும், மத்திய அரசும் முழு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி

தினத்தந்தி

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj