படிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து செட்டிலாக வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு, குறிக்கோள் எல்லாமே. ஆனால் விவசாயத்தில் பட்டம் பெற்று சென்னையில் உலகத்தரமான தனியார் பள்ளியொன்றில் நல்ல ஊதியம் பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதையெல்லாம் ஒரேநாளில் உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு களமிறங்கி, அதிலும் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறார்.
அந்த சாதனை இளைஞரின் பெயர் கு.ஜெயக்குமார். வைத்தீஸ் வரன்கோயில் அருகேயுள்ள மேலாநல்லூர் அவரது சொந்த ஊர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி விவசாயம் படித்து முடித்தவுடன் சென்னை சர்வதேச பள்ளியில் பணி. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பணி முடித்துவிட்டு ஒரே நாளில் அதை உதறி விட்டு தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். மேலாநல்லூரில் தனது தந்தையின் கடின உழைப்பால் வாங்கப்பட்ட 20 ஏக்கரில் இயற்கை விவசாயத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து பயன் ஈட்டி வருகிறார்.
நன்செய் நிலம், நிலத்துக்கு எரு கொடுக்க ஆட்டுப் பண்ணை, ஆட்டுக்கு உணவு கொடுக்க புல் வளர்ப்பு, இயற்கை விவசா யத்துக்கு அடிப்படையான பஞ்சகவ்யம், அமிர்த கரைசல் ஆகியவற்றை கொடுக்க பசுமாடு என்று அத்தனையும் ஒருங்கே கொண்டதாக காட்சியளிக்கிறது அந்தப் பண்ணை வளாகம்.
‘’பைசா செலவில்லாமல் விவசாயம்னு நம்மாழ்வார் அய்யா சொன்னதை கேட்ட நிமிடத்தில் தான் எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது காதலே வந்தது. அடுத்த நிமிடம் வேலையை துறந்துவிட்டு ஊருக்கு திரும்பி அப்பாவிடம் போய் இனிமே விவசாயத்தை நான் பார்த்துக்கிறேன்பா என்று சொன்னதும் அவருக்கே அதிர்ச்சி. இதுவரைக்கும் வயல் பக்கமே வந்ததில்லையேடா, இப்ப திடீர்னு விவசாயத்தை பார்க்கிறேன்னு சொல்றியே என்று கேட்டவர், என்ன நினைச்சாரோ சரிப்பா பார்த்துக்கன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டார்.
இது நடந்தது மூன்று ஆண்டுக்கு முன்பு.. அப்ப வயலுக்கு வந்தவன் இயற்கை விவசாயம்தான்னு முடிவு செஞ்சதால முன்னோடி இயற்கை விவசாயியான பாலாஜி சங்கரை போய் பார்த்து ஆலோசனை கேட்டேன். அவர் 20 ஏக்கர்லயும் உடனடியா இயற் கை விவசாயத்துல இறங்கக் கூடாதுன்னு தடுத்து வெறும் 3 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செய்ய கத்துக் கொடுத்தார். அடுத்த ஆண்டு அதை ஆறு ஏக்கர் ஆக்கினேன், கடந்த ஆண்டில் பத்து ஏக்கரில் இயற்கை விவசாயம். இந்த ஆண்டுதான் 20 ஏக்கரிலும் முழுமையாக இயற்கை முறையை கடைபிடிக்க போகிறேன்” என்கிறார் ஜெயக்குமார்.
இயற்கை விவசாயம் செய்ய தோதாக 20 ஏக்கரிலும் டேஞ்சா என்னும் தக்கைப்பூண்டு விதைத் திருக்கிறார். அது ஆளுயரம் வளர்ந்து காடாக மண்டிக் கிடக்கிறது. வரப்போகும் சம்பா சாகுபடிக்கு உரமாக இதுவும், சேகரித்து வைக்கப் பட்டிருக்கும் ஆட்டுப்புழுக்கையும் மட்டுமே போதுமாம். ஒட்டுமொத்த உரச் செலவும் இதற்குள் அடங்கி விடுமாம். பயிர் கிளம்பும்போது மாட்டு சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் ஆகியவை சேர்த்து செய்யப்பட்ட பஞ்சகவ்யம், அமிர்தகரைசல் ஆகியவை வயலில் சேர்க்கப்பட்டு பயிருக்கு் செறிவு ஊட்டப்படுமாம். தற்போ தைய நிலையில் நாற்றடி, நடவு, களையெடுப்புக்கு மட்டும் தான் கையிலிருந்து பணம் செலவாகிறது. அதற்கும் இந்த ஆண்டு செலவில்லை. கொடி ஆடு வளர்ப்பின் மூலமாக அந்த செலவு ஈடுகட்டப்படுகிறது என்கிறார். ஒரு கொடி ஆடு ரூ. 12 ஆயிரத்துக்கு விற்றால் அந்த தொகை ஒரு ஏக்கருக்கு செலவாகும் ஆட்செலவு அடங்கிவிடும் என்கிறார் ஜெயக் குமார்.
நமது பாரம்பரிய ரகமான கிச்சிலி சம்பாவைத் தேடிப் பிடித்து இயற்கை முறையில் விளைவித்து வருகிறார். இவரிடம் கிச்சிலி சம்பாவை தமிழகமெங்கும் உள்ள இயற்கை விவசாயிகள் முன்பதிவு செய்து வாங்கிச் செல்கிறார்கள். மற்ற ரகங்களைவிட இது பெரிய அளவில் இவருக்கு லாபத்தை ஈட்டித் தருகிறது.
“தற்போதைய நிலையில் செலவின்றி விவசாயம் செய்து வருடம் ஒன்றுக்கு ஏக்கருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கிறது. இதை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்திட என்ன வழி என்று பார்த்து அதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன்” என்று கண்கள் மின்னச் சொல்லி முடித்தார் இயற்கை விவசாயி ஜெயக்குமார்.
தொடர்புக்கு: 99620 09302
நன்றி: தி இந்து