Site icon Vivasayam | விவசாயம்

குள்ளகார் சாகுபடி நுட்பங்கள்

ஒரு ஏக்கர் நிலத்தில் குள்ளகார் சாகுபடி செய்யும் முறை பற்றி காண்போம்.

குள்ளகார் 100 நாள் பயிர். அனைத்து வகையான மண்ணிலும் விளையும். இது குறுவை பட்டத்துக்கு ஏற்றது. மோட்டா ரகம். பயிர் 4 அடி உயரம் வளரும். ஒரு ஏக்கர் நிலத்தில், ஒற்றை நாற்று முறையில் குள்ளகார் சாகுபடி செய்ய 8 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும்.

நாற்றங்காலில் மண் தெரியாத அளவுக்கு உளுந்து, பச்சைப்பயறு சக்கைகள், வேம்பு, புங்கன் இலைகள் ஆகியவற்றை பரவலாகப் போட்டு, 80 லிட்டர் ஜீவாமிர்தம் தெளித்து, தண்ணீர் கட்டி உழவு செய்ய வேண்டும். 15 நாட்கள் கழித்து 50 கிலோ மாட்டு எருவுடன், தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தை கலந்து தண்ணீர் தெளித்து, ஈர சணல் சாக்கைக்கொண்டு, 48 மணிநேரம் மூடி வைக்க வேண்டும். அதன் பிறகு நாற்றங்காலில் உயிர் உரக்கலவையைத் தெளிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து மீண்டும் தண்ணீர் கட்டி உழுது, மண்ணை சமப்படுத்தி 5 கிலோ விதை தூவ வேண்டும். 7-8 நாட்களில் 4 இஞ்ச் உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்திருக்கும். 18 முதல் 20 நாட்களில் நாற்றுகள் வளர்ந்து நடவுக்கு தயாராக இருக்கும். ஒவ்வொரு நாற்றிலும் 6 முதல் 10 தூர்கள் வெடித்திருக்கும்.

நெல் தரிசில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்து அறுவடை செய்த பிறகு வைக்கோல் மட்கிய நிலையில் இருக்கும். பயறுகளின் செடிகளும் கழிவுகளாக நிலத்தில் இருக்கும். இவற்றை நிலம் முழுக்க பரப்பி, தண்ணீர் கட்ட வேண்டும். அடுத்த 10 நாட்களில் தண்ணீர், காபித்தூள் நிறத்துக்கு மாறி இருக்கும். அப்போது இரண்டு சால் உழவு ஓட்டி, வயலைத் தயார் செய்து, ஒற்றை நாற்று முறையில் தலா 25 சென்டிமீட்டர் இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 7-ம் நாள் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, 100 கிலோ மாட்டு எரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் தெளித்து நிழலில் ஈர சணல் சாக்கில் மூடி வைக்க வேண்டும். இதை 48 மணிநேரம் கழித்து நிலம் முழுக்க பரவலாக தூவ வேண்டும். 22-ம் நாள் களைகளை எடுக்க வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்து வந்தால் போதும். பூச்சி, நோய்த் தாக்குதல் இருக்காது. நடவில் இருந்து 82-ம் நாள் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version