அன்றாடம் அதிகரித்துவரும் மட்காத குப்பைகளில் தெர்மாகூலும் ஒன்று. பிளாஸ்டிக் கூட்டுப்பொருளான ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் தெர்மாகூல். இந்தப்பொருளாலான பெட்டிக்கு வெப்பநிலையைக் காக்கும்தன்மை உள்ளதால், பனிக்கட்டிகள் வைக்க, மலர்களை அடைத்து அனுப்ப என பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் ஒரு தடவை பயன்படுத்தியதும் தூக்கி வீசப்படுவதுதான் அதிகம். இப்படி வீசப்படும் இந்த தெர்மாகூல் குப்பை பிளாஸ்டிக்குகளுக்கு இணையாக சுற்றுச்சூழலுக்கு சவால் விட்டுக்கொண்டு நிற்கிறது.
இதோ, தன்னால் முடிந்த அளவுக்கு இந்த தெர்மாகூல் கழிவுகளுக்கு ஒரு வழியைக் கண்டறிந்திருக்கிறார், மதுரை, ஜவகர்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராம் பிரசாத். தெர்மாகூல் பெட்டிகளைச் சேகரித்து, அவற்றில் செடிகளை வளர்த்து மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார்.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ராம் பிரசாத்தைச் சந்தித்தோம், “எனக்கு சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். தொட்டி வாங்கி வளர்க்க காசு அதிகம் செலவாகும் என்று யோசித்த போதுதான் தெர்மாகூல் பெட்டி யோசனை வந்தது. இதை மறுசுழற்சியும் பண்ண முடியாது. எரிச்சா நச்சுப்புகை வரும். அது நுரையீரலுக்கு ரொம்ப கெடுதல். அதனால் அதையே மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வந்து சூழல் மாசுபாட்டை குறைக்கலாம் என்று முடிவு செய்தேன். இரண்டு தெர்மாகூல் பெட்டிகளை கொண்டு வந்து பொன்னாங்கண்ணி, புதினா கீரைகளை வளர்த்துப் பார்த்தேன். இரண்டுமே நன்றாக வளரவே.. கத்தரி, தக்காளி, வெண்டை, முள்ளங்கி, சீனி அவரை, பாகல், பொன்னாங்கண்ணி, சிறுகீரை, பாலக்கீரை என்று தனித்தனி பெட்டிகளில் வளர்க்க ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களாக தெர்மாகூல் பெட்டிகளில்தான் செடிகளை வளர்த்து வருகிறேன் என்றார்.
இரசாயன உரங்களால் அதிக பாதிப்பு வரும் என்று செய்திகளில் படித்ததிலிருந்து மாடித்தோட்டத்திற்கு இயற்கை உரம்தான் போடவேண்டும் என முடிவு செய்தேன். காய்கறிக் கழிவுகள் மூலமாக நானே உரம் தயாரிக்கிறேன். பெரிய தெர்மாகூல் பெட்டியில் மண், காய்கறிக் கழிவுகள், முட்டை ஓடு, நிலக்கடலைத் தோல், வெங்காயச் சருகு என்று சமையலறைக் கழிவுகள் எல்லாவற்றையும் போட்டு மேலே கொஞ்சம் மண் போட்டு வைத்து விடுவேன். தினமும் இந்தப் பெட்டியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறிக்கொண்டே இருந்தால், 20 நாட்களில் அதெல்லாம் மட்கி உரமாகிவிடும். இந்த இயற்கை உரத்தை செடிகளுக்குப் போட்டால் செடிகள் நன்றாக வளர்கிறது. அதனுடன் மண்புழு உரத்தையும் சேர்த்து போடுகிறேன். பூச்சிகளை விரட்ட வேப்பெண்ணெய், மாட்டுச் சிறுநீர் பயன்படுத்துகிறேன்.
தெர்மாகூல் பெட்டியில் செம்மண், மணல், கொஞ்சம் மட்கிய சாணத்தையும் போட்டு விதைச்சுடுவேன். பெட்டியில் தண்ணீர் வெளியேற சின்னத்துளை போட வேண்டும்.
இதில் செடிகளை வளர்க்கும் போது தண்ணீர் சீக்கிரம் ஆவியாவதில்லை. எடை குறைவாக இருப்பதால் இடம் மாற்றுவது சுலபம். அகலமாக இருப்பதால் கொடி வகைகள் படர்ந்து வளர்கிறது. காய்கறிகள் மட்டுமின்றி பூச்செடிகள், குரோட்டன்ஸ் செடிகளையும் வளர்க்கிறேன்.
ஆட்டோவில் சவாரி போகும்போது வரும்போது எல்லாம் ரோட்டில் எங்காவது தெர்மாகூல் பெட்டி இருக்கிறதா என்று பார்ப்பேன். கண்ணில் தென்பட்டால் எடுத்து வண்டியில் வைத்துக்கொள்வேன். இதற்கு கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டேன். சில கடைகளில் சொல்லிவைத்தும் பெட்டிகளை வாங்கிக் கொள்வேன். பெட்டி கிடைத்தவுடனே அதில் ஒரு செடியை வைத்துவிடுவேன். இப்போது மொத்தம் 52 பெட்டிகளில் செடிகளை வளர்த்து வருகிறேன்”. என்றார்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral