வாகனங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், ரசாயனக் கலவைகள் என பல வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனச் சொல்கிறோம். ஆனால், நாம் அதிகம் பயன்படுத்தும் பால்பாய்ன்ட் பேனா இதில் முக்கிய இடம் வகிப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.
குப்பைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு அடுத்ததாக அதிகமாகக் காணப்படுவது இந்த பேனாக்கள்தான்.
ஒரு பேனா தொலைந்தாலோ, அல்லது அதன் மூடி தொலைந்தாலோ நாம் மாற்றுவது பேனாவைத்தான். ரீஃபில் பேனாக்கள் என்றாலும், மை தீர்ந்ததும் யாரும் ரீஃபில் வாங்க ஓடுவதில்லை. மாறாகப் புதியதாக பேனாவை வாங்கி பாக்கெட்டில் செருகிக்கொள்கிறோம். இதனால் எவ்வளவு பேனாக்கள் குப்பைகளில் சேர்கின்றன என நாம் சற்று யோசித்துப் பார்த்தால் தெரியும்.
இந்த விஷயத்தை, கேரளா மாநிலம் வைக்கம் பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மி மேனன், வித்தியாசமாக சிந்தித்துள்ளார். சுற்றுச்சூழலைப் பேணுவதற்கு, பலவித முயற்சிகளை எடுத்து வரும் இவர், டிசைனராகவும் உள்ளார். லக்ஷ்மி, தன்னுடைய டிசைனிங் அறிவையும், சுற்றுச்சூழல் மீதான காதலையும் இணைத்து, காகிதங்களில் இருந்து பேனா தயாரித்துள்ளார். இது குறித்து அவரிடம் பேசியபோது, “இந்த காகிதப் பேனாக்களின் அடிப்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட அகத்திக் கீரை விதைகள் வைக்கப்பட்டிருக்கும். நாம் உபயோகித்துவிட்டு அந்தப் பேனாவை தூக்கி வீசியெறிந்தாலும், காகிதம் மட்கி, அதில் உள்ள விதை வளரத் தொடங்கிவிடும். அச்சகத்தில் உள்ள காகிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பேனாவாக வடிவமைக்கிறோம். இந்த பேனாவின் விலை ரூ.12. சாதாரண பால்பாய்ன்ட் பேனாவின் விலை ரூ.5.
நாங்கள் உருவாக்கியிருக்கும் பேனாவில் உபயோகிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக், சாதாரண பேனாவில் இருப்பதைப்போல ஐந்தில் ஒரு பங்காகும். முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்லை. காரணம் ரீஃபில் பிளாஸ்டிக்காகத்தான் உள்ளது. சிலர் விரும்பிக் கேட்டால், மெட்டல் வைத்து ரீஃபில் தயாரித்துக் கொடுக்கிறோம்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டின் அடுத்தகட்டமாக இனி பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்பு உணர்வு முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இந்த விதைப் பேனா முயற்சிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது” என்றார் லக்ஷ்மி உற்சாகத்துடன்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral
Supar
Very good attempt and I was thinking we are polluting the sand further by throwing the ball pens.where is it available?