”உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறார் பணிக்கு”
உழுது உண்டு வாழும் விவசாயிங்களோட வேலைதான், உன்னதமானது. இதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், மன நிறைவும், வேறு எதிலும் கிடைக்காது என்று ஔவையார் அழகாக பாடியிருக்கிறார். உழுதுண்டு வாழும் விவசாயிகள் என்றால் வெண்டைக்காய், கத்தரிக்காய் சாகுபடி செய்கின்றவர்கள் என்று அர்த்தம் கிடையாது. வாழ்க்கையை முழுமையாக, நிறைவாக மற்றவர்களுக்கு உதவியா, வழிகாட்டியாக வாழ்கின்றவர்கள். இப்படி உழுதுண்டு வாழ்ந்தவர்கள், சமுதாயத்தில் எல்லா நிலையிலும் இருந்தார்கள். மண்ணை ஆண்ட மன்னனிலிருந்து அமைச்சர், ஆசிரியர், வணிகர்கள், இயற்கையுடன் அறிவியலைக் கண்டறிந்து வாழ்ந்த விஞ்ஞானிகளான சித்தர்களும் கூட உழுதுண்டு வாழ்ந்தவர்கள்தான். சுருக்கமாகச் சொன்னால் இவர்களெல்லாம், ‘வீக் எண்ட் விவசாயிகள்’ என்றுகூட சொல்லலாம்.
இப்படி மக்களோடு மக்களாக வாழ்ந்த சித்தர்கள் உணவு, மருத்துவம், விவசாயம்.. சம்பந்தமான ஏராளமான விஷயங்களைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
நம்ம காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதே அரிதாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில் பலவிதமான இலையிலையும், விதவிதமான பாத்திரத்திலும் சாப்பிட்டிருக்கிறார்கள். சமைக்கின்ற சாப்பாடு சத்தாக இருந்தால் பத்தாது, அதை எதில் வைத்து, எந்தப் பாத்திரத்தில் வைத்து சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம். அப்படி பல சித்தர்கள் சொல்லி வைத்த, சத்தான தகவலை கொஞ்சம் ருசி பார்ப்போம்.
‘வாழைவெள்ளைப் பன்ன நன்றா மற்றிலைகன்மத்திபமா
மாழைவெள்ளிவெண்கலமு மாநன்றாங் – கோழை
கயப்பாண்ட நோய்போங் கருதினிவைக் கெல்லாங்
குயப்பாண்ட மேலசனங் கொள்’னு
சித்தர் பாடல் சொல்கிறது. அதாவது, உணவு சாப்பிட பயன்படுத்தும் இலை வகையிலேயே வாழைக்கு, முதல் இடமும், மற்ற இலைகளுக்கு அடுத்தடுத்த இடமும் கொடுத்திருக்காங்க.
பொன், வெள்ளி, வெண்கலப் பாத்திரம் நல்லது. இந்த மூன்றையும் விட, மண் பாத்திரத்துக்கு கோழை, கயம் (ரத்தசோகை) பாண்டு (காசநோய்) நோயைப் போக்கும்தன்மையும் உண்டாம்.
‘தொக்கினுறு மின்னுஞ் சுகபோ கமுமண்ணு?
மக்கினி மந்த மபலமொடு திக்கிடுக்கால்
பாழை யிலைப்புமறும் பன்னுபித்த முஞ்சமனா
வாழை யிலைக்குனரு வாய்’
ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் வாழை இலையில் சாப்பிடாமல், தினமும் சாப்பிட்டால் அக்கினி மந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்தம் போக்குமாம், உடல் வலிவும் பொலிவும் பெறுமாம்.
“பலாவிலையி லுண்ணப் பதுங்கிநின்ற பித்தங்
குலாவ யெழும்பிக் குதிக்கும்-உலாவிவரு
கன்ம மகோதரநோய் காணா தகலாத
குன்ம மகலுங் குறி”
அதாகப்பட்டது, பலா மரத்து இலையில் சாப்பிட்டால் பெருவயிறு, குன்ம நோய் (குடல் நோய்) நீங்கும் என்று தேரையர் சித்தர் பாடியிருக்கிறார்.
குளங்கள் நிறைய இருக்கிற ஊர் பகுதியில் தாமரை பரவி கிடக்கும். அவசரத்துக்கு, தாமரை இலையில் சாப்பிடும் பழக்கம் பரவலாக இருக்கிறது. சில இட்லி கடையில் தாமரை இலையில்தான் பரிமாறுவார்கள். ஆனால் இப்படிச் செய்யக்கூடாதாம்.
“தாமரைப்பன் னத்திலுண்டால் தாங்கரிய உட்டினமாம்
நாவவா தஞ்சினந்து நண்ணுங்காண்- தூமமுறா
அக்கினிமந் தங்கனுண்டாம் அன்றே மலர்த்திருவத்
திக்கினிலி ராளெனவே வேர்”
உடம்பில் சூட்டை உண்டாக்கி, மந்தத் தன்மையை உருவாக்கும் தன்மை, தாமரை இலைக்கு உண்டு என்று சொல்கிறார்கள்.
சாப்பிடும் பாத்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் வரலாற்றில் பல தகவல் கொட்டிக் கிடக்கிறது.
கிரேக்க நாட்டு அரசன் அலெக்சாண்டர் இந்தியாவின் மேல் படயெடுத்து வந்த சமயத்தில் நடந்த சம்பவம் இது.
பனை மரம் மாதிரி, வளர்ந்து நின்ன கிரேக்க படைவீரர்கள், திடீரென்று வயிற்றை பிடித்துக்கொண்டு சுருண்டு சுருண்டு விழுந்தார்கள். என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால், கிரேக்க நாட்டில் இருந்து, இந்தியா வரும் வரையில் வெள்ளீய (lead-Pb) பாத்திரங்களையே சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால், குடல் பகுதி பாதித்து, தீராத வயிற்றுவலி உருவாகியிருக்கிறது. ஆனால், அலெக்சாண்டருக்கும், தளபதிகளுக்கும் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்திருக்கு. காரணம், இந்த அதிகாரிங்கள் அத்தனைப் பேரும் வெள்ளிப் பாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் பாதிப்பு இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral