தீவன தட்டைப்பயறு [கோ-9]
50-55 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், கோ-5, புந்தெல்லோபியா-2 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. காரிஃப் (ஜூலை-அக்டோபர்), ரபி (அக்டோபர்-மார்ச்) மற்றும் கோடை பருவங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 22.82 டன் மகசூல் கிடைக்கும். கோ(எப்.சி)-8 ரகத்தை விட 18.42% கூடுதல் மகசூல் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்றது. அதிக பசுந்தீவனம் மற்றும் உலர் எடை மகசூல் கிடைக்கும். அகலமான இலைகள், அதிக கிளைகள் கொண்டது. அதிகப் புரதச்சத்து, குறைந்தளவு நார்ச்சத்து கொண்டது. குறைந்த வயது கொண்டது என்பதால், சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றுடன் கலப்புத் தீவனமாகப் பயிரிட ஏற்றது.
வீரிய ஒட்டு வெண்டை [கோ-4]
110 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், பி.ஹெச்.டி-9 ரகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், அக்டோபர்-நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு 25.60 டன் வரை மகசூல் கொடுக்கக்கூடியது. கோ.பி.எச். எச்-1 மற்றும் சக்தி ரகங்களைக் காட்டிலும் முறையே 19.6 மற்றும் 23.1% அதிக மகசூல் கிடைக்கும். மலைப்பிரதேசங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இறவையில் சாகுபடி செய்ய உகந்தது. செடிகள், 135-150 சென்டி மீட்டர் உயரம் வளரும். நீளமான அடர்ந்த பச்சை நிற காய்கள் காய்க்கும். ஒரு செடிக்கு 29 காய்கள் வரை கிடைக்கும். ஒரு பருவத்தில் 22 அறுவடை செய்யலாம். மஞ்சள் நரம்பு தேமல் நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது.
எலுமிச்சை [வி.ஆர்.எம்-1]
இது நான்கு ஆண்டுகளில் மகசூலுக்கு வரக்கூடியது. பிரான்சிலுள்ள தகித்தி தீவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பயிர். டிசம்பர், ஜனவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செம்படம்பர் மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு மரத்துக்கு 69 கிலோ அளவு மகசூல் கிடைக்கும். நீலகிரி மாவட்டத்தைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட உகந்தது. வீட்டுத்தோட்டத்துக்கு ஏற்ற ரகம். பழச்சாறு, ஊறுகாய் மற்றும் சமையலுக்கு உகந்தது. அதிக வைட்டமின் – சி (96 மில்லி கிராம்/100) கொண்டது. இலைத்துளைப்பான் மற்றும் சொறி நோயை எதிர்க்கும் திறன் கொண்டது.
நன்றி
பசுமை விகடன்
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral