ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்யும் முறை பற்றி காண்போம்.
ஒன்றே முக்கால் அடி இடைவெளி !
சம்பங்கி சாகுபடி செய்ய.. களர் மண்ணைத் தவிர்த்து வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. அதிகமான குளிர் இருக்கும் பனிக்காலத்தைத் தவிர, மற்ற மாதங்களில் நடவு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை குறுக்கு நெடுக்காக நான்கு முதல் ஐந்து சால் புழுதி உழவு செய்து, மண்ணைப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு டன் தொழுவுரத்தைச் சலித்து, அதனுடன் 150 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து நிழலான இடத்தில் குவித்து வைத்திருந்து அதை ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் தூவி ஒரு உழவு செய்ய வேண்டும். இரண்டு அடி இடைவெளியில், மூன்றரை அடி அகலம், முக்கால் அடி உயரத்தில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொறுத்து பாத்திகளின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். மேட்டுப்பாத்தியின் இரண்டு ஓரங்களிலிருந்தும் அரையடி உள்ளே தள்ளி, செடிக்குச் செடி ஒன்றே முக்கால் அடி இடைவெளி விட்டு.. பீஜாமிர்தத்தில் விதிநேர்த்தி செய்யப்பட்ட சம்பங்கி விதைக்கிழங்கை லேசாகப் பள்ளம் பறித்து நடவு செய்ய வேண்டும் (50 லிட்டர் பீஜாமிர்தக் கலவையில் 250 கிலோ விதை கிழங்கை அரை மணி நேரம் ஊறவைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்). ஏக்கருக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரை விதைக்கிழங்குகள் தேவைப்படும்.
உயிர்மூடாக்காக உளுந்து !
நடவு முடிந்ததும், மேட்டுப்பாத்தி முழுவதும் உளுந்து, நரிப்பயிர் போன்ற குறுகிய காலப்பயிர்களைச் சாகுபடி செய்யலாம். இரண்டு பாத்திகளுக்கு இடையில் இருக்கும் பகுதிகளில் கரும்பு சோகை அல்லது நெல் வைக்கோல் மாதிரியான பயிர் கழிவுகளை மூடாக்காக இட வேண்டும். வேர் அழுகலையும், நூற்புழுக்களையும் கட்டுப்படுத்த 20 அடிக்கு ஒரு கேந்திச் செடியை நடவு செய்ய வேண்டும். வரப்பில் 10 அடிக்கு ஓர் ஆமணக்கு, ஓர் அடி இடைவெளியில் தட்டைப்பயறு, சோளம், துவரை ஆகிய பயிர்களின் விதைகளை விதைத்துவிட்டால், அவை பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தும்.
15 நாட்களுக்கு ஒரு கரைசல்!
நடவு செய்த 10 நாட்களில் வேர் பிடித்து, துளிர்க்க ஆரம்பிக்கும். 30-ம் நாளுக்கு மேல், செழித்து வளர ஆரம்பிக்கும். சம்பங்கிச் செடிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது என்பதால், தெளிப்பு நீர்ப் பாசனம் சிறந்தது. இம்முறையில் தினம் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை பாசனம் செய்தாலே போதுமானது. நேரடிப் பாசனம் செய்தால், மண் எப்போதும் புட்டுப் பதத்தில் இருப்பது போல பார்த்துக்கொள்ள வேண்டும்.
30-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஜீவாமிர்தக்கரைசலை தண்ணீரில் கலந்து விடவேண்டும். மாதம் ஒருமுறை 200 கிலோ கனஜீவாமிர்தக் கலவையை நிலத்தில் தூவி விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை, புளித்த மோரை (3 நாட்கள் புளிக்க வைத்தது) டேங்குக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை கலந்து தெளிக்கவேண்டும். மாதம் ஒரு முறை டேங்குக்கு ஒரு லிட்டர் வீதம் அக்னி அஸ்திரத்தை கலந்து தெளிக்கவேண்டும். வேர் அழுகல் தாக்குதல் இருந்தால் சோற்றுக்கற்றாழைக் கரைசலையும், நூற்புழுத்தாக்குதல் இருந்தால் உன்னிச்செடிக் கரைசலையும் ஒவ்வொரு செடியின் தூரிலும் ஊற்ற வேண்டும்.
4-ம் மாதம் அறுவடை !
மூடாக்கு இட்டிருப்பதால், செடிகளில் களைகள் குறைவாகத்தான் இருக்கும். மீறி முளைக்கும் களைகளை கைகளால் அகற்றிக் கொள்ளலாம். நடவு செய்த, 3-ம் மாதம் மொட்டு வைத்து, 4-ம் மாதம் முதல் தினமும் 2 கிலோ, 3 கிலோ அளவில் பூக்கள் கிடைக்கும். மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். நான்கு ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக மகசூல் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
உர தயாரிப்பு முறைகள்
நூற்புழுவுக்கு உன்னிச்செடிக் கரைசல்!
15 கிலோ உன்னிச்செடி, 10 கிலோ எருக்கன் செடி ஆகியவற்றை இடித்து.. அத்துடன் 2 கிலோ சாணம், 10 லிட்டர் பசு மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து, 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து 5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும். 25 முதல் 30 மில்லி ஊற்றி விட வேண்டும். இதன் மூலம் நூற்புழுக்கள் கட்டுப்படும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.
வேர் அழுகலுக்கு சோற்றுக்கற்றாழைக் கரைசல் !
இடித்த சோற்றுக் கற்றாழை-5 கிலோ, சுண்ணாம்பு-1 கிலோ, மஞ்சள்-1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, ஒவ்வொரு செடிக்கும். 25 முதல் 30 மில்லி ஊற்றி விட வேண்டும். இப்படிச் செய்யும் போது, வேர் அழுகல் நோய் கட்டுப்படும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral
Kindly sent jasmine flower growth,and yield increase
very useful tips ,super sir