சித்தர் பாடல்
காதுமந்தம் காதெழுச்சி காசந் தினவுமதம்
ஓது மந்தம் முத்தோடம் உட்சூலை – தாதுநட்டம்
மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர்
தூதுவளைப் பத்திரியைத் தூய்த்து.
(பதார்த்த குணசிந்தாமணி)
பொருள்
தூதுவளையை உணவாகக் கொண்டால், காது மந்தம், காசநோய்கள், தோல் நோய்கள், வயிற்று வலி போன்ற நோய்கள் தீரும்.
தூதுவளையின் தன்மை
வெப்பம் உண்டாக்கி – Stimulant
கோழை அகற்றி – Expectorant
உரமாக்கி – Tonic
தூதுவளை, கொடியாகப் படர்ந்து வளரக்கூடியது. இலைகளின் பின்பக்கம் முள்கள் இருக்கும். தூதுவளைக்கு கபநோய்களைத் தீர்க்கும் குணம் உண்டு. இருமல், பெருவயிறு, ஆண்மைக் குறைபாடு போன்றவற்றுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகும்.
தூதுவளையின் மருத்துவப் பயன்கள்
- தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி, ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.
- தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.
- தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாக பசி எடுக்கும்.
- தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
- தூதுவளைக் கீரையைப் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகும்.
100 கிராம் தூதுவளைக் கீரையில் உள்ள சத்துக்கள்
நீர்ச்சத்து – 84.7 கிராம்
புரதம் – 3.9 கிராம்
கொழுப்பு – 0.7 கிராம்
தாதுஉப்புகள் – 3.8 கிராம்
நார்ச்சத்து – 2.3 கிராம்
சர்க்கரைச்சத்து – 4.6 கிராம்
சுண்ணாம்புச்சத்து – 334 மி.கி
பாஸ்பரஸ் – 52 மி.கி
இரும்பு – 5.0 மி.கி.
கலோரித்திறன் : 40 கலோரி.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral