Site icon Vivasayam | விவசாயம்

சீஸ்-க்கான சந்தையும் பயிற்சியும்

கொடைக்கானலில் பால் பண்ணையுடன், சீஸ் தயாரித்து வரும் பாட்ரிஷியா பதில் சொல்கிறார்.

“பால் உற்பத்தியில் கவனம் செலுத்தும் தமிழ்நாட்டு மக்கள், அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

‘சீஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘பாலாடைக் கட்டி’ புளிப்புச் சுவையுடன் இருக்கும். சீஸ், பலவிதமான சத்துக்கள் நிரம்பிய பொருள்.

இதற்கு, நட்சத்திர விடுதிகள், துரித உணவகங்கள்.. போன்றவற்றில் அதிக தேவை இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் தேவையான அளவு சீஸ் கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி நிலைதான் உள்ளது. ஒரு கிலோ சீஸ், 700 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. 10 லிட்டர் பசும்பாலில் இருந்து ஒரு கிலோ சீஸ் தயாரிக்கலாம். பால் பண்ணை நடத்துபவர்கள் சீஸ் தயாரிப்பில் இறங்கினால், நல்ல லாபம் கிடைக்கும். இதை என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். ஆனால், தயாரிப்பில் இறங்கும் முன்பு, சீஸ் தயாரித்து வரும் பண்ணைகளுக்குச் சென்று பார்வையிட்டு, உங்கள் பகுதியில் உள்ள விற்பனை வாய்ப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்சமயம், எங்கள் பண்ணையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, சீஸ் தயாரிக்க அனுபவ ரீதியாக பயிற்சி வழங்குகிறோம். இதற்கு கட்டணம் கிடையாது. தங்குமிடம், உணவு வசதியும் வழங்குகிறோம். மதிப்பூதியமாக கொடுக்கிறோம்.

தற்போது சீஸ் தயாரிக்கும் முறை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். கறந்த பாலை 4 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்குக் குளிர வைத்து.. அதில், ரென்னட் பவுடர் (ஒரு விதமான நுண்ணுயிரி) லாக்டிக் அமிலம் சேர்த்து… 27 முதல் 28 டிகிரி செல்ஷியஸ் வரை சூடேற்றி, உடனடியாகக் குளிர வைக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் பால் திரியும். அதில் உள்ள கட்டிகளை வடிகட்டி எடுத்து அலசினால்.. அதுதான் சீஸ். இதைத் தேவையான வடிவில் உள்ள அச்சுகளில் வைத்து மரக்கட்டை மூலம் அழுத்தினால், அதில் எஞ்சியுள்ள திரவம் வெளியேறிவிடும். பிறகு, குளிர்பதனப்பெட்டியில் ஒரு மாதம் வரை வைத்திருந்து, அதன் பிறகே எடுத்துப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக பால் பொருட்களை உடனடியாகப் பயன்படுத்திவிட வேண்டும். இல்லாவிடில், கெட்டுப்போய் விடும். ஆனால், சீஸ் மட்டும் விதிவிலக்கு.

சீஸை, எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் குளிர்நிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம். ‘ஒயின்’ போல நாள்பட நாள்படத்தான் இதன் தரமும் மதிப்பும் கூடும். சீஸை வடிகட்டும்போது கிடைக்கும் திரவத்துக்கு, ‘ஊநீர்’ என்று பெயர். இதில் பலவித சத்துக்கள் நிரப்பியுள்ளன. இதை நாமும் குடிக்கலாம். மாடுகளுக்கும் கொடுக்கலாம்.”

தொடர்புக்கு, தொலைபேசி : 04542-230245

செல்போன் : 92453-96316

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version